ஆங்கிலம் அறிவோமே 4.0 - 42 - ‘Bear’ என்றால் கரடி மட்டுமா?

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 42 - ‘Bear’ என்றால் கரடி மட்டுமா?
Updated on
2 min read

‘He stood behind me. He stood at the back of me. இரண்டு வாக்கியங்களும் சரியா?' என்று கேட்கிறார் வாசகர் ஒருவர்.

முதல் வாக்கியம் சரிதான் வாசகரே. ஒருவேளை உங்கள் முதுகின் மீது அவர் நின்றுகொண்டிருந்தால் இரண்டாவது வாக்கியம் சரியாக இருக்கலாம்.

‘Behind, back’ ஆகிய இரண்டு வார்த்தைகளும் பின்னால் என்ற பொருளை உணர்த்துகின்றன. ஆனால், இவற்றுக்கு நடுவே ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. ‘Back of’ என்று கூறும்போது அது ஒன்றின் பகுதியாக (ஒன்றுக்குப் பின்னால் அல்ல) இருக்கும். நமது ‘back’ என்பது முதுகுப் பகுதி. அதாவது, நமது அங்கம்.

உங்கள் காருக்குப் பின்னால் வேறொரு கார் நின்றால், ‘it stands behind your car’. ‘Back of car’ என்பது காரில் சாமான்களை வைக்கும் பகுதி. ‘Boot’ (டிக்கி என்று பேச்சு வழக்கில் நாம் கூறும் பகுதி).

ஒரு வரிசையில் ஒருவர் உங்கள் பின்னால் நின்றுகொண்டிருந்தால் ‘he stands behind you in the queue’. ஏனென்றால் அவர் உங்களின் ஒரு பகுதி அல்ல. அதே நேரம் அவர் அந்த வரிசையின் ஒரு பகுதிதான். எனவே ‘he stands at the back of the queue' என்பது சரி.

நாம் பார்ப்பதற்கும் உண்மைக்கும் நடுவே வேறுபாடு இருக்கும் போது ‘behind’ என்று சொல்லைப் பயன்படுத்து வது உண்டு. ‘Behind his smile is a sad story’. அவர் புன்னகைக்குப் பின்னால் ஒரு வருத்த மான கதை இருக்கிறது.

***

கோடிட்ட இடத்தில் சரியாகப் பொருந்தும் சொல் எது?

The ____ work showed his dishonesty.

(a) shady (b) shoddy (c) diligent (d) ingenious

ஒருவர் செய்த குறிப்பிட்ட பணி அவரது நேர்மையின்மையைக் காட்டுகிறது என்று கூறுகிறது வாக்கியம். அப்படியானால் நிரப்ப வேண்டிய சொல் எதிர்மறைப் பொருள் கொண்டதாக இருக்க வேண்டும்.

‘Diligent’ என்று சொல் அக்கறையான, விடா முயற்சி கொண்ட என்ற நேர்மறைப் பொருளை உணர்த்துகிறது. ‘Ingenious’ என்பது புத்திசாலித்தனத்தை உணர்த்தும் சொல். எனவே, இதுவும் நேர்மறைப் பொருள் கொண்டதே. ஆக, மீதமிருக்கும் இரண்டு சொற்கள் ‘shady’, ‘shoddy’. இரண்டும் எதிர்மறை அர்த்தங்கள் கொண்டவைதான். ‘Shady work' என்றால் அது சட்டப்பூர்வமாகவோ நேர்மையானதாகவோ இல்லாத வேலை என்று பொருள். ‘Shoddy work' என்றால் அந்தப் பணி அலட்சியமாகவோ நேர்த்தி இன்றியோ செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

எனவே விடுபட்ட இடத்தில் ‘shady’ என்ற சொல்தான் பொருந்துகிறது. ‘The shady work showed his dishonesty’.

***

சமீபத்தில் ஒரு செய்தித் தலைப்பில் ‘bike-borne robbers’ என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு என்ன பொருள்?

‘Noun’ ஆகப் பயன்படும்போது ‘bear’ என்பது கரடியைக் குறித்தாலும் ‘verb’ ஆகப் பயன்படும்போது ஒன்றை சுமப்பது அல்லது பொறுத்துக்கொள்வது என்கிற பொருள்களை உணர்த்துகிறது.

‘Bear’ என்பதன் ‘past participle - born, borne’. எனினும் ‘born' என்பதை பிறப்பு தொடர்பாகவும் (I was born in Mumbai), ‘borne’ என்பதை சுமத்தல் என்ற பொருளிலும் பயன்படுத்துகிறோம்.

‘Food-borne diseases' எனும்போது உணவு காரணமாக ஏற்படும் நோய்கள் என்பதைக் குறிப்பிடுகிறோம். அதாவது, முறையற்ற முறையில் சமைக்கப்பட்ட உணவு, உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவு போன்றவற்றால் ஏற்படும் நோய்கள். ‘Mosquito-borne diseases' என்றால் கொசுக்களால் ஏற்படும் நோய்கள். இதில் ‘borne' என்பது 'சுமக்கப்படும் அல்லது எடுத்துச் செல்லப்படும்' என்பதைக் குறிக்கிறது.

‘Bike-borne robbers’ என்பது மேலோட்டமாக இருசக்கர வாகனங்களை சுமந்து செல்லும் கொள்ளையர்கள் என்பதுபோல் இருந்தாலும், அது அந்த வாகனங்களைக் கொள்ளையடிப்பவர்களை, அதாவது கடத்திச் செல்பவர்களைக் குறிக்கிறது.

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in