தமிழ் இனிது 07: தமிழில் எழுதிப் பழகுவோம்
தொலைக்காட்சி விளம்பரங்களின் கீழே, ‘சித்தரிக்கப்பட்டது’ என்று ஒரு வரியைப் பார்க்கலாம். சித்திரம் - ‘சித்திரிக்கப்படும்’ என்பதே சரியானது. ‘கத்திரிக்கோல்’ வேறு, ‘கத்தரிக்காய்’ வேறுதானே? அகராதிகள் இவ்விரண்டு சொற்களையும் இரண்டு மாதிரியும் சொல்கின்றன. ஒருவேளை, இந்தக் குழப்பத்தில்தான் அந்தச் சொல் ‘சித்திரிக்க’ப்பட்டிருக் குமோ!?
‘வணக்கத்தை முதற்கண்’ தெரிவிக்க வேண்டியவர், ‘முதற்கண் வணக்கம்’ ‘இரண்டாம்கண் வணக்கம்’(?) என்றால், மூன்றாம் கண் திறக்குமா? ‘முயல்கிறேன்’ என்பதை ‘முயற்சிக்கிறேன்’ என்று பிழையில் ‘சிக்’குவது ஏன்? முக்காலமும் நடக்காது என்பதைச் சொல்ல வருபவர், ‘ஒருக்காலும் நடக்காது’ என்கிறார். மறு கால் மட்டும் நடக்குமோ?
‘பிழை திருத்தம்’ செய்பவரே, ‘பிழைத் திருத்தம்’ என்று பிழைசெய்தால் அவரைத்தான் திருத்த வேண்டும். இது ஒரு சிறு ‘குறை’தான். ஆனால், திருத்தாமல் விட்டால் அதுவே ‘குற்றம்’ ஆகிவிடும். ஏனெனில், தெரியாமல் செய்வது ‘தவறு’, தெரிந்தே செய்வதுதான் ‘தப்பு’.
சிகப்பா? சிவப்பா? - ‘வறுமை யின் நிறம் சிவப்பு’ (1980), ‘சிவப்பு மல்லி’ (1981) திரைப் படங்கள் வந்த பின்னும், ‘நான் சிகப்பு மனிதன்’ (1985) என்றொரு படம் வந்து, அதிகக் கவனம் பெற்றது. ‘கருப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள, நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப’ என்னும் (தொல்காப்பியம்-855) இலக்கணத்தைவிடவும், கல்வித் துறையைவிடவும், ஊடகங்களுக்கே பரவு திறன் அதிகம் என்பதால் ஊடகங்களின் பொறுப்புக் கூடுகிறது அல்லவா?
‘பத்திரிகை’ ‘பத்திரிகையாளர்’களை, ‘பத்திரிக்கை’ ‘பத்திரிக்கையாளர்’ என்றே எழுதுகிறார்கள். நல்ல தமிழில் ‘செய்தித்தாள்’, ‘செய்தியாளர்’ என்பது இன்னும் சிறப்பல்லவா? ‘கல்யாணப் பத்திரிக்கை’ என்றால், ‘திருமண அழைப்பிதழ்’ என்பது இன்னும் அழகல்லவா?
பாராளுமன்றமா? நாடாளுமன்றமா? - ‘பாராளுமன்றம்’ பழைய வழக்கு. ‘உலகை ஆள்வது’ என்று பொருள்! நாடாள்வது ‘நாடாளுமன்றம்’தானே? சொல்லின் பொருள் அறிவதும், அது சரியெனில் ஏற்பதும்தானே சரி? ‘ப்ளாட்ஃபாம்’, ‘நடைமேடை’ ஆனதும், ‘சீரியல்’, ‘நெடுந்தொடர்’ ஆனதும் அப்படி வந்த அழகு தமிழ்தான்.
நம்மைச் சுழற்றியடிக்கும் காற்று, நம் தலையில் குப்பையைக் கொட்டிவிட்டுப் போவது இயல்பு. பிறகு நம்மை நாமே தூய்மை செய்து கொள்கிறோம் அல்லவா? அதுபோல, அரசியல், பொருளியல் பண்பாட்டு, வாழ்க்கை மாற்றம் காரணமாக நம் கண், காதுகளில் தானே வந்து விழும் தவறான தமிழ்ச் சொற்களைத் திருத்திக்கொள்ள முயல வேண்டும்.
‘Tq’, ‘Nandri’ ‘Gd-n8’ என்று ‘தமிங்கில’ எழுத்தில் எழுதுவதைவிடவும், தமிழில் முயன்று, தவறாக எழுதித் திருத்திக்கொள்வது நல்லது. புரிந்து எழுதினால் தவறு நேர வாய்ப்பில்லை. தீர்ப்புகளே திருத்தப்படும்போது, தவறுகளைத் திருத்த முடியாதா என்ன?
கணினித் தமிழ்ப் பிழைகளைத் திருத்த, தமிழ்நாடு அரசு விருது பெற்ற நீச்சல்கார னின் இணையத்தளம் (http://www.neechalkaran.com/) பேருதவி செய்கிறது. எதையுமே ‘பதட்ட’த்துடன் செய்வது தவறு. பதறுதல்-‘பதற்றம்’ என்பதே சரி. அதற்காக தமிழை பதற்றத்துடன் பார்க்கத் தேவையில்லை. ஏனெனில் தமிழ், படிக்கப் படிக்க எளிது. பருகப் பருக இனிது.
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com
