

‘துளியும் மது அருந்தாதவர்களை டீடோட்லர் என்கிறார்களே. அதற்கு முழுக்க முழுக்கத் தேநீரை மட்டுமே பானமாக குடிப்பவர் என்று மறைமுக அர்த்தமா?’ என்று கேட்கிறார் வாசகர் ஒருவர்.
அப்படி இருக்க முடியாது. காரணம், இந்த ஆங்கிலச் சொல் ‘tea’ என்று தொடங்கவில்லை. இது ‘teetotaler’. இந்தச் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் என்று அறியப்படுபவர் ரிச்சர்ட் விக்கி டர்னர். 1833 இல் தனது உரையில் தீவிர மது வகைகள் மட்டுமல்ல பீர், ஒயின் போன்றவற்றில் இருந்துகூட முழுவதும் விடுபட வேண்டும் என்பதை அழுத்தமாகக் கூறும் வகையில் இச்சொல்லை பயன்படுத்தினார். (இவரது கல்லறையில்கூட மேற்படி சொல்லை உருவாக்கிப் பயன்படுத்தியவர் என்ற வாசகம் உள்ளது).
நியூ யார்க்கில் உள்ள ஓர் அமைப்பில் (New York temperance society) ஒட்டுமொத்தமாக மதுவிடமிருந்து விலகிவிட்டேன் என்ற உறுதிமொழி எடுத்துக் கொள்பவர்களிடம் அந்த உறுதிமொழிக்குக் கீழ் கையெழுத்து வாங்கும்போது அதனுடன் ‘T’ என்ற எழுத்தைச் சேர்த்து வாங்கிக் கொண்டார்களாம். ‘T’ என்பதை ‘totally’ என்று குறிக்கப் பயன்படுத்துவது உண்டு.
***
‘Concluded’, ‘ended’ ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே பொருளா என்று கேட்டி ருக்கிறார் ஒரு வாசகர்.
ஒரு விதத்தில் அப்படிக் கூறலாம். கட்டுரையில் ‘conclusion’ என்றால் முடிவுரை. என்னதான் போரடிக்கும் பேச்சாளர் என்றாலும், அவர் உதிர்க்கும் இரு வார்த்தைகள் கேட்பவர்களை உற்சாகத்தின் எல்லைக்கே அழைத்துச் செல்லும். ‘To conclude!’ (பார்வையாளர்கள் உற்சாகமின்றி காணப்படும்போது ‘before I conclude’ என்று கூறுவதன் மூலம் அவர்களை உற்சாகப்படுத்தி விட்டு தொடர்ந்து நீண்ட நேரம் உரையாற்றுவது ஒரு தந்திரம்).
என்றாலும் ‘conclude’ என்பதற்கு வேறு ஒரு பொருள் உண்டு. சிந்தித்து ஒரு முடிவுக்கு வருதல். அதாவது, பல கோணங்களை ஆராய்ந்து ஒன்றைத் தீர்மானித்தல்.
***
'I don't like swimming' என்கிறார் ஒருவர். உங்களுக்கும் நீச்சல் பிடிக்காது என்று வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் ‘I also don't like swimming’ என்று கூறலாம். மற்றபடி சுருக்கமாகப் பதில் அளிப்பது என்றால் எது சரியானது? ‘Me too’ என்பதா? அல்லது ‘Me either’ என்பதா?
இவற்றில் ஒன்று நேர்மறையானது. மற்றொன்று எதிர்மறையானது. ‘I like reading books’ என்று ஒருவர் கூறும்போது உங்களுக்குப் புத்தகம் படிக்கப் பிடிக்கும் என்றால், ‘Me too’ என்று பதில் கூறலாம். மாறாக எதிர்மறைப் பொருள் கொண்ட ‘I don't like swimming’ என்று கூறும்போது உங்களுக்கு நீச்சல் பிடிக்காது என்றால் ‘Me either’ என்று கூற வேண்டும்.
***
‘Law’ என்றால் சட்டம். அது என்ன ‘bye-law?’ என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.
இந்தியா முழுவதும் பொருந்தும் வகையில் உள்ள சட்டம் ‘law’. ஒரு நகராட்சி சில விதிமுறைகளை இயற்றலாம். ஓர் உள்ளூர் பொழுதுபோக்கு கிளப் சில விதிகளை அமல்படுத்தலாம். அடுக்குமாடி கட்டிடங்களின் சொசைட்டிகள் சில நியதிகளை வரையறைப்படுத்தலாம்.
இவை எல்லாமே ‘bye-laws’. அந்தந்த அமைப்பு அல்லது எல்லைக்குள் மட்டுமே இவை செல்லுபடியாகும். இவற்றை ‘bylaws’ என்றும் எழுதுவதுண்டு. (‘Bye-law’ என்பதில் நடுவே ‘hyphen’ உண்டு என்பதையும், ‘Bylaw’ என்பதில் நடுவே அந்தச் சிறிய கோடு இல்லை என்பதையும் கவனித்தீர்களா?)
சிப்ஸ்:
# ‘Bravo’ என்றால்?
சபாஷ்
# மதுக்குடிப்பவர்கள் ‘cheers’ என்று கூறுவதன் பொருள் என்ன?
கம்பெனி கொடுத்தற்கு நன்றி.
# பொரி, பொறி–ஆங்கிலச் சொற்கள் எவை?
(தீப்)பொறி–Spark. (அரிசிப்)பொரி-Puffed rice.
- aruncharanya@gmail.com