

அழகும் ஆழமும் நிரம்பிய கலை, இலக்கியம் புத்துணர்வு ஊட்டும். கவிதையே கலைகளின் அரசி என்பார் புதுமைப்பித்தன். இனிய தமிழ்க் கவிதையில் அப்படி ‘ஒரு சோறு பதம்’ பார்ப்போமா? ‘நெஞ்சை அள்ளும்’ சிலப்பதிகாரத்தில் கண்ணகி - கோவலன் முதலிரவு. அதை, இளங்கோவடிகள் பாடுவது நுட்ப அழகின் நுனிமுனைக் கொழுந்து.
‘‘மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே...”
‘‘…மலையிடைப் பிறவா மணியே என்கோ
அலையிடைப் பிறவா அமுதே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ
தாழிருங் கூந்தல் தையால் நின்னை!’’
இதுதான் கோவலன் சொன்னது. ஆறு வரியில் ஐந்து நுட்பம் பாருங்கள்.
1. சாதாரண வர்ணனை: தங்க மேனி, முத்துச் சிரிப்பு, சந்தன வாசம், கரும்பு, தேனின் சுவை, மாணிக்கம், அமுதம் எனக் கிடைத்தற்கரிய பேரழகு. சிரிப்பு யாழிசையோ?! என ரசித்துப் பாடும் காதல் மொழிகள். (ஒவ்வொன்றிலும் சிறந்த என்பதற்கான அடைமொழிகள். கவனிக்க...)
2. ஐந்து திணை: பொன், முத்து, கரும்பு, தேன் - முறையே குறிஞ்சி, நெய்தல், மருதம், முல்லை எனும் நான்கு திணை, நானிலம் தழுவிய காதல். (காதல் மனைவியைப் பிரிவுக்குரிய பாலைத் திணையில் நினைக்கக்கூட விரும்பாமல் தவிர்த்தான் போலும். “இந்தக் கோவலனா, பின்னர் அவள் வாழ்வையே பாலையாக்கினான்?” என்று படிப்போரைச் சிந்திக்க வைத்து, கதைக்குள் இழுக்கும் காவிய உத்தி)
3. ஐந்து புலன்: கண்அருகில் கண்டு, காதருகில் மெல்அசைவு கேட்டு, இதழமுதம் உண்டு, நறுமணம் உயிர்த்து, உடல் தழுவி மகிழும் ஐவகை நுகர்வும் (குறள்-1101) இதில் வருகிறது, அறிந்தவர் அறிவாராக.
4. நாடகத் தமிழ்: அழகை வியந்து அவன் பாட, அவள் புன்னகைக்க, அவன் அணைக்க, மெல்லத் திறந்த இதழ்வழி நறுமணம் வர, முத்தாடி இதழ்பருக, அவள் நாணித் தலைகுனிய, வரிகளில் விரிவதோர் நாடகம்.
5. கண்ணகி பெயர்க் காரணம்: கோவலன் இவ்வளவு வியந்து மகிழ்ந்து பலபடப் பாராட்டியும், கண்ணகி ஒரு சொல்கூடப் பேசவில்லை. அவள் நகுவது (சிரிப்பது) கூடக் கண்ணால்தான். அவள் பெயர் கண்ணகியல்லோ. இதற்கும் மேல் இயற்கையன்றி, செயற்கை சாராத கற்பனைச் சொற்புனைவு.
எல்லாம் சரிதான். முதலிரவை எட்டிப் பார்த்துக் கவிதை எழுதலாமா? எனில், அதுதான் படைப்பாளிக்கு உலகம் வழங்கிய பெருமைக்குரிய உரிமை. அதை உணர்ந்து எழுதுவார் நின்று நிலைப்பார், இளங்கோவடிகள் போல. பொருளற்ற கவிதை புனைவோர், ‘ஒருநாளில் எட்டுத்தேர் செய்யும் ஆற்றல் மிக்கவன், ஒரு மாதம் முயன்று ஒரே ஒரு தேர்க்கால் மட்டும் செய்தால், அதில் எத்தனை மடங்கு நுட்பம் இருக்கும்’ (புறநானூறு-87-ஔவையார்) என்பது உணர்ந்து எழு(து)க கவிஞர்களே. தமிழ் இனிது.
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com