

கைஎன்பது ‘hand’ அல்ல என்றால் நம்மில் பலருக்கும் வியப்பு ஏற்படக்கூடும். ‘raise your hands’ என்று ஆசிரியர் கூறினால், மாணவர்கள் தங்கள் கைகளை முழுவதுமாகத் தூக்குவர்கள். எந்த மாணவனாவது உள்ளங்கைகளை மட்டுமே மேற்புறம் தூக்கினால் அவன் கட்டளைக்குக் கீழ்ப்படியாதவனாகக் கருதி கடிந்து கொள்ளப்படுவான். ஆனால், உண்மையில் அவன் சரியாகத்தான் செய்திருக்கிறான்.
முன் கை மட்டுமேதான் ‘hand’. அதாவது உள்ளங்கை மற்றும் விரல்கள் உள்ள பகுதி. தோளிலிருந்து முழங்கை மூட்டு வரை ‘upper arm’. முழங்கை மூட்டில் இருந்து உள்ளங்கைக்கு முன் பகுதி வரை ‘forearm’. அப்படியானால் கைகளைத் தூக்குங்கள் என்பதை எப்படிச் சொல்லலாம்? ‘raise your arms’. (என்றாலும் பழக்கம் காரணமாக, ஒரு குழந்தைக்கு சட்டை அணிவிக்க வேண்டும் என்றால் ‘raise your arms’ என்றும், வகுப்பில் சந்தேகம் கேட்க வேண்டுமென்றால் ‘raise your hand’ என்றும் கூறுவது வழக்கமாகி விட்டது). அதற்காக ‘leg' என்பது பாதம் மட்டுமே என்றாகிவிடாது. இடுப்புக் குக் கீழ்ப்பகுதி தொடங்கும் பகுதியிலிருந்து பாதம் முடிவடையும் வரை ‘leg'தான்.
***
‘Let us see eye to eye' என்று யாராவது யாரிடமாவது கூறிக்கொண்டிருந்தால், அவர்கள் காதலர்கள் என்றும் ‘கண்ணோடு கண் நோக்க’த் திட்டமிடுகிறார்கள் என்றும் தீர்மானித்துவிடக் கூடாது. ‘See eye to eye’ என்பது ஒரு ‘idiom’. இதற்குப் பொருள் ‘ஒத்துக்கொள்வது’. உங்களுக்கு தமிழ்மீது மிகவும் பற்று. பக்கத்து வீட்டில் ஒரு தெலுங்குக் குடும்பம் குடியேறி இருக்கிறது. அவர்கள் வீட்டில் மிகவும் அதிகமான ஒலியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வைத்து ரசிக்கிறார்கள். அது உங்களுக்கு நாராசமாக இருக்கிறது. அந்த வீட்டுச் சிறுவனை ஒருமுறை சந்திக்கும்போது ‘உங்கள் வீட்டில் மிகுந்த அரவம். அதிக அரவம் என்றாலே எனக்கு ஆகாது’ என்கிறீர்கள்.
அரவம் என்றால் ஒலி என்பது பல தமிழர்களுக்கே தெரியாது. தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குப் புரியுமா? அந்தச் சிறுவன் அதிர்ச்சியடைகிறான். ‘என்னது உனக்கு அரவம் ஆகாதா?’ அந்த அதிர்ச்சிக்கு என்ன காரணம்? தெலுங்கு மொழியில் அரவம் என்றால் ‘தமிழ்’. ஒரு தமிழன் தமிழ் ஆகாது என்று கூறலாமா? இதனால்தான் அந்த அதிர்ச்சி. அதாவது both of you do not see eye to eye.
ஒரு வணிகப் பரிமாற்றத்தில் இருதரப்பைச் சேர்ந்தவர்கள் ஒத்துவராமல் இருந்து, பிறகு ஒரு முடிவுக்கு ஒத்துக்கொண்டால் ‘They finally saw eye to eye on the business deal’ என்று கூறலாம்.
***
‘Precinct’ என்று நான் பார்த்த வெப்தொடரில் ஒரு சொல் இடம்பெற்றது. அதன் பொருள் என்ன?’
வாசகரே, அது நீங்கள் பார்த்தது பிரிட்டிஷ் தொடரா, அமெரிக்கத் தொடரா என்பதைப் பொறுத்தது. ‘Precinct’ என்பது பிரிட்டிஷாரைப் பொருத்தவரை ஒரு நகரத்தில் கார்கள் நுழைய அனுமதியில்லாத கடைத்தெருப் பகுதியைக் குறிக்கிறது. அமெரிக்கர்களைப் பொறுத்தவரை அந்தச் சொல் தனக்கெனத் தனியாகக் காவல் நிலையம் உள்ள நகரப் பகுதியைக் குறிக்கிறது.
சிப்ஸ்
# ‘A stern look’ என்றால்?
‘நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை’ என்பதை உணர்த்தும் பார்வை. ‘Stern warning’ என்றால் கடும் எச்சரிக்கை.
# ‘Daily I eat four idlis’ என்றாலும் ‘Daily I take four idlis’ என்றாலும் ஒன்றுதானே?
உட்கொள்வது தொடர்பாக ‘take’ என்று சொல்லை மருந்து மாத்திரைகள் தொடர்பாகத் தான் பயன்படுத்துவோம். ‘Daily I eat four idlis. Daily I take two tablets.’
# ‘Similar, same’ என்ன வேறுபாடு?
‘Similar' என்றால் ஒன்றைப் போன்ற. ‘Same’ என்றால் அதே. நீங்கள் ஒரே உடையை அடுத்தடுத்த நாட்களில் அணிந்தால் ‘you are wearing the same dress’. உங்கள் சட்டையின் நிறம் மற்றும் டிசைன் போலவே இன்னொருவர் சட்டையை வைத்திருந்தால் ‘he has a similar shirt’.
- aruncharanya@gmail.com