பிளஸ் 2 மாணவர்களுக்கு உதவித்தொகை

பிளஸ் 2 மாணவர்களுக்கு உதவித்தொகை

Published on

படிப்பில் சிறந்துவிளங்கும் மாணவர்கள் அறிவியல் துறையில் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்க ‘உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகை’ (Scholarship for Higher Education - SHE) ஆண்டு தோறும் சுமார் 12,000 மாணவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுவருகிறது. இந்தக் கல்வி உதவித்தொகை, குறிப்பாக அறிவியல் துறையில் உயர்கல்வி பயில விரும்பும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற திறமை மிக்க மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

உதவித்தொகை: இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு 80,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் மாதம் ரூபாய் 5,000 வீதம் 12 மாதங்களுக்கு 60,000 ரூபாயும், மீதமுள்ள ரூ.20,000 ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலச் சிறப்புப் பயிற்சிக்கு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இளநிலை, முதுநிலை என மொத்தம் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இந்த உதவித்தொகையைப் பெறலாம்!

தகுதி: இந்த உதவித்தொகையைப் பெற கீழ்க்கண்ட தகுதிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.

1 இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பில் டாப் லெவலில் மதிப்பெண்கள் பெற்றவர்களில் 1% மாணவர்களாக இருக்க வேண்டும். அதாவது, தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 5 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் அறிவியல் பிரிவில் தேர்வு எழுதியிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள எந்தவொரு மாநில/மத்திய கல்வி வாரியத்தின் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் டாப் லெவலில் மதிப்பெண்கள் பெற்றவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.

CBSC, ICSC உட்பட மற்ற தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி இருந்தாலும், அந்தப் பாடத்திட்டத்தில் டாப் லெவல் மதிப்பெண்கள் பெற்ற 1% மாணவர்கள் இந்தக் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

2 JEE மற்றும் AIPMT நுழைவுத் தேர்வில் தரவரிசையில் முதல் பத்தாயிரம் இடங்களைப் பிடித்திருக்கும் மாணவர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

3 Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY), Jagadish Bose National Science Talent Search (JBNSTS) போன்ற திட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும் தேசியத் திறனறி தேர்வு மற்றும் சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

அறிவியல் படிப்புகள்: மேற்குறிப்பிட்ட தகுதிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள முக்கியமான நிபந்தனை, அறிவியல் பாடத்தில் மேற்படிப்பைப் படிக்க வேண்டும் என்பதாகும். அதாவது BSc, BS, ஒருங்கிணைந்த (Integrated) BSc-MSc அல்லது BS-MS அறிவியல் புலத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், புள்ளியியல், புவியியல், வானியற்பியல், வானியல், மின்னணுவியல், தாவரவியல், விலங்கியல், உயிர் வேதியியல், மானுடவியல், நுண்ணுயிரி யல், புவி இயற்பியல், புவி வேதியியல், வளிமண்டல அறிவியல், கடல் அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை இளநிலையில் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். பொறியியல் படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பிக்கும் முறை: கீழ்க்கண்ட ஆவணங்களுடன் https://www.online-inspire.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

# பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.

# பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (பிறந்த தேதியை உறுதிசெய்ய).

# கல்லூரியின் முதல்வர் அல்லது கல்வி நிறுவனத்தின் இயக்குநர் அல்லது பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வழங்கும் பரிந்துரைச் சான்றிதழ்.

# பன்னிரண்டாம் வகுப்பில் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணுக்கான தரவரிசைச் சான்றி தழை உங்கள் தேர்வு வாரியம் வழங்கும் என்றால் அதையும் இணைக்க வேண்டும் (கட்டாயமல்ல).

இந்தக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாதத்தில் முடிவடையும்.

- கட்டுரையாளர், நெதர்லாந்து டுவெண்டி பல்கலைக்கழக அறிவியலாளர்; merchikannan@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in