

கற்றல் என்பது தொடர் செயல்பாடு. நூல் வைத்து வாசித்துப் புரிந்துகொள்வது மட்டுமே கல்வி அல்ல. ஐம்புலன்களின் வழி நாம் எவற்றையெல்லாம் உணர்ந்து செயல்படுகிறோமோ, புதிதாக ஒன்றைத் தெரிந்துகொண்டு அறிவின் அடிப்படையில் வளர்கிறோமோ அவை எல்லாமே கற்றல் செயல்பாடுகள்தான்.
முன்பு குழந்தைகள் ஒன்று சேர்ந்து குழுவாகக் கிட்டிப்புள், கோலிக்குண்டு, பம்பரம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை விளையாடினர். இன்று அந்த விளையாட்டுகள் எல்லாமே அருகிப் போய்விட்டன. இன்று மூலையில் முடங்கி செல்போனுக்குள் தங்கள் மனதையும் உடலின் நலனையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.
இணையவழி விளையாட்டிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். இந்த நிலை என்பது குழந்தைகள் மனநிலையை முற்றிலும் முடக்கும் செயலாக அல்லவா இருக்கிறது?
எனவே பெற்றோர்கள் குழந்தைகளுடன் கூடுதல் நேரத்தைச் செலவழிக்க வேண்டிய காலம் இது. கற்றல் என்பது பாடப் புத்தகங்களையும் தாண்டியது என்பதை உணர்ந்து, குழந்தைகளை வழிநடத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் பெற்றோர்க்கு இருக்கிறது. குழந்தைகளை வீட்டுக்கு வெளியே அழைத்துச் செல்லுங்கள்.
ஒவ்வொரு மரமாகக் காட்டுங்கள். அவற்றை வெட்டுவதால் ஏற்படும் துயரங்களையும் பயன்களையும் சொல்லிக் கொடுங்கள். உங்களைவிடச் சிறந்த தாவரவியல் ஆசிரியர் உங்கள் குழந்தைக்கு இருக்க முடியாது. அந்தக் குழந்தை பள்ளி நாள்களில் இதனை பாடத்தோடு ஒப்பிட்டுப் படிக்கும்.
நீச்சல் சொல்லிக் கொடுங்கள். அது உடலையும் மனதையும் உரமேற்றும். எல்லாத் துயரங்களில் இருந்தும் நீந்த முடியும், வெளியேற முடியும் என்ற கற்பனையையும் படிப்பினையையும் கற்றுத் தரும். நம்புங்கள், பாட நூல்களைக் கடந்து கற்றுத் தரவும் கற்றுக்கொள்ளவும் ஏராளம் இருக்கிறது.
நாம் அந்த வாசல்களை எல்லாம் அடைத்துவிட்டு, ஜன்னலை மட்டுமே திறந்து விடுகிறோம். அந்தச் ஜன்னலின் குறைந்த காற்றில் குழந்தைகள் மூச்சுமுட்டி, விழிபிதுங்கி வெளியேறப் பார்க்கிறார்கள்.
குழந்தைகளை அப்படியே விட்டுவிடுங்கள், எல்லாவற்றையும் மறந்து விளையாடட்டும் என்பதெல்லாம் பொத்தம் பொதுவான பார்வை. அவர்களை அவர்களின் போக்கிலேயே விட்டுவிட்டு என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனில் நீங்களும் பங்கேற்பாளராக மாறுங்கள்.
கூச்சம் , அச்சம், பயம் இவற்றில் இருந்தெல்லாம் குழந்தைகளை மீட்டெடுங்கள். எக்காரணம் கொண்டும் எப்போதும் குழந்தைகளைப் பாட புத்தகத்தை எடுத்துப் படியுங்கள் என்று வழக்கமான வார்த்தைகளைச் சொல்லாமல், நடைமுறை வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பதற்கென நேரத்தை வாரந்தோறும் ஒதுக்கி, அதை நடைமுறைப்படுத்துங்கள்.
கட்டுரையாளர், தமிழாசிரியர்