

பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஒரு நேர்முகத்தில், “This omission is not a setback. but just a stumbling block” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு என்ன பொருள்? கேட்கிறார் ஒரு வாசகர்.
‘Setback’ என்றால் பின்னடைவு; குன்றுதல். ‘The action of one of the parties resulted in a setback for the peace process’ என்றால், இரு தரப்பினரிடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை அல்லது செயல்பாடு நிகழ்ந்துகொண்டிருக்கும் போது அவர்களில் ஒரு தரப்பினர் செய்யும் ஒரு செயலால் அமைதிக்கான சூழலுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்று பொருள்.
‘He has suffered a serious setback in his political career’ என்றால் ‘அவரது அரசியல் வாழ்க்கையில் அவருக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது’ என்று அர்த்தம். ‘Stumbling block’ என்றால் விரும்புவதை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் வரும் இடர்ப்பாடு; முட்டுக்கட்டை. ஒவ்வொரு மாதமும் தனது வருமானத்தை இரண்டு மடங்காக்கிக் கொள்ளும் திறமை ஒருவருக்கு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
சென்ற மாதம் அவர் ரூ. 50,000 சம்பாதித்தார். இந்த மாதம் அவரால் ஏதோ காரணத்தால் அதைவிட அதிகமாகச் சம்பாதிக்க முடியவில்லை. எனில் அதை (அந்தக் காரணத்தை) ‘stumbling block’ எனலாம். மாறாக இந்த மாதம் ரூ. 25,000 மட்டுமே அவரால் ஈட்ட முடிகிறது என்றால் அது ‘setback’.
‘I beg to defer’ என்ற வாக்கியத்தை ஒரு மின்னஞ்சலில் பயன்படுத்தி இருந்தார் ஒரு நண்பர். அதில் காணப்பட்ட அவரது பிற வாக்கியங்களையும் வைத்துப் பார்க்கும்போது, ‘நான் உங்களிடமிருந்து மாறுபடுவதற்காக மன்னிக்கவும்' என்பதைத்தான் அவர் அப்படி கூறி இருக்கிறார் என்பது புரிந்தது. ‘Differ’, ‘defer’ என்ற வார்த்தைகளைச் சிலர் மாற்றிப் பயன்படுத்துகிறார்கள்.
‘Differ’ என்றால் மாறுபடுவது. ‘Defer’ என்றால் தள்ளிப்போடுவது. ‘Duffer’ என்றும் ஒரு சொல் உண்டு. எதையும் மிக மெதுவாகக் கற்றுக் கொள்பவரையும், மிகக் குறைந்த ஆற்றல் கொண்டவரையும் இந்தச் சொல்லால் குறிப்பிடுவார்கள். தமிழில் பேச்சு வழக்கில் ‘தத்தி’ என்கிறோமே, அது போன்றவர்.
‘Deference’ என்பது ஒருவர் மீது அல்லது ஒன்றின் மீது கொண்ட மரியாதை காரணமாக நாம் வெளிப்படுத்தும் பணிவு. ‘Indifference’ என்பது அக்கறையின்மை அல்லது அலட்சியத்தை உணர்த்துகிறது.
‘The lady treated her guests with due__________.’ இந்த வாக்கியம் எந்த வார்த்தையோடு முடிவடைய வேண்டும்? ‘Difference’ அல்லது ’deference?’
தன் விருந்தாளிகளை உரிய மரியாதையோடு அந்தப் பெண்மணி நடத்தினார் எனும் அர்த்தத்தில் கோடிட்ட இடத்தில் ‘deference’ என்ற சொல்தான் பொருந்துகிறது. விருந்தாளிகளை வேற்றுமை காட்டி நடத்தினார் என்கிற பொருளில் ‘difference’ என்று சொல் பொருந்தக் கூடாதா என்று கேட்டால், கூடாது. உரிய மரியாதை என்பதுதான் பொருத்தமே தவிர உரிய வேறுபாடு அல்ல. (தவிர ‘lady’ என்று சொல் பண்பாடு கொண்ட பெண்மணி என்பதை குறிக்கிறது).
சிப்ஸ்
‘996 work culture’ என்பது என்ன?
காலை ஒன்பது மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை வாரத்துக்கு ஆறு நாட்கள் கொண்ட பணிச்சூழல். சீன மாடல்!
‘Former Prime Minister claims he was forced out by a kangaroo court’ - என்று செய்தி வெளியாகி இருந்தது. ‘Kangaroo court’ என்றால் என்ன?
கட்டப்பஞ்சாயத்து.
‘Amp up productivity’ என்றால்?
உற்பத்தியைப் பெருக்குதல். ஒன்றை அதிகப்படுத்துவது என்பதைக் குறிக்க ‘amp up’ என்ற சொற்களைப் பயன்படுத்துவது உண்டு. ‘Amp’ என்பது ‘amplifier’ (ஒலிபெருக்கி) என்பதன் சுருக்கம்.
- aruncharanya@gmail.com