

‘அறுபதாம் கலியாணம்’ - தமிழ்க் குடும்பப் பண்பாட்டில் பெருமைக்குரிய நிகழ்வாக மதிக்கப்படுகிறது. சரி, அதை ‘60ம் கல்யாணம்’, ‘60தாம் கல்யாணம்’ என்று அழைப்பிதழில் அச்சிடும்போதுதான் மகன், மகள், பேரப்பிள்ளை, உறவுகளால் வராத சிக்கல், இந்தத் தொடரால் வந்துவிடுகிறது!
‘60ம் கல்யாணம்’, ‘60தாம் கல்யாணம்’ போன்றவை தவறான தொடர்கள். படித்துப் பாருங்களேன். நமது பழக்கத்தால் ‘60ம்’ என்பதை ‘அறுபதாம்’ என்று நாமாகவே ‘ஆ’ சேர்த்துப் படித்துவிடுகிறோம். அதை, 60 ம்- ‘அறுபதும்’ என்று தானே படிக்க முடியும்? இப்படியே ‘60தாம் கல்யாணம்’ என்பதை எழுத்தில் எழுதினால் ‘அறுபதுதாம் கல்யாணம்’ என்றல்லவா படிக்க வேண்டும்? எழுத்தில் ஒன்றும் ஒலிப்பில் ஒன்றுமாக வருவது, நமது பழக்கத்தில் வந்த பழம் பிழை. திருத்திக் கொள்ள வேண்டியது நம் தமிழ்க் கடன்.
எனவே, 60ம் என்பதும் 60வது, 60தாவது என்பன வும் தவறான தொடர் என உணர்ந்து 60ஆம், 60ஆவது, என்று எழுதுவதே சரியான தமிழாகும். இப்படியே, ‘100க்கு 100’ என்பதைவிட, ‘நூற்றுக்கு நூறு’ என்றோ நூறு விழுக்காடு (100%) என்றோ எழுதுவதுதான் சரி. 25ஆவது வெள்ளி விழாவுக்கும், 75ஆவது சுதந்திர நாள் விழாவுக்கும் இது பொருந்தும்.
தமிழ்ப் பண்பாட்டில் குடும்ப நிகழ்வுகளை நடத்தும் தமிழர்களே, இனி நாம் ‘60ஆம் கலியாணம்’ நடத்துவோம். அல்லது ‘அறுபதாம் கலியாணம்’ என விரிவாக எழுதுவோம். கல்யாணம் என்பதையும் கலியாணம் என நல்ல தமிழிலோ, திருமணம் எனத் தனித்தமிழிலோ எழுதுவோம். சரியா?
இனி, தமிழர் அனைவரும் இதைப் பின்பற்றி அறுபதாம் திருமணத்துக்கு அழகுத் தமிழில் அச்சிட்டு, சொந்தம் பந்தம் அனைவரையும் அழைத்துத் தமிழ்ப் பண்பாடு காத்து மகிழ்ந்து கொண்டாடி, இனிய தமிழ் வளர்ப்போமா?
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com