

நாளுக்கு நாள் சமூக வலைதளப் பயனர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இன்று சமூக வலைதளத்தின் வாயிலாகக் கோரிக்கை விடுத்து வேலை பெறும் அளவுக்கு அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே, நிறுவனங்களும் சமூக வலைதளத்தில் பக்கங்களை உருவாக்கித் தங்கள் நிறுவனம் சார்ந்த தகவல்கள் மட்டுமல்லாமல், வேலை வாய்ப்புத் தகவல்களையும் அளிக்கின்றன. அது மட்டுமல்ல, சமூக வலைதளம் என்பது வெறுமனே பொழுதுபோக்குத் தளம் மட்டுமல்ல; வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடியதாகவும் இருக்கிறது. இந்தச் சூழலில், சமூக வலைதளம் சார்ந்து சில வேலைவாய்ப்புகளை அறிவோம்:
சமூக வலைதள மேலாளர்: ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளப் பக்கங்களை நேர்த்தியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்தான், சமூக வலைதள மேலாளார். எழுத்து, ஒளிப்படம், காணொளி வாயிலாக ஒரு தகவல், பொருள், நிகழ்வை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பொறுப்பும் சமூக வலைதள மேலாளருடையது.
சமூக வலைதளங்கள் கோலோச்சும் இந்தக் காலத்தில் தேர்தல் முதல் சினிமா வரை பெரும்பாலும் அனைத்துத் துறை சார்ந்த விளம்பரங்களுக்கும் சமூக வலைதளங்களின் உதவியையும் பெற வேண்டியிருக்கிறது.
இந்த விளம்பரங்களைச் சரியாக நிர்வகிக்கும் ஆள்களுக்கு வேலை வாய்ப்புகள் இத்துறையில் கொட்டிக்கிடக்கின்றன. இதழியல், தகவல் தொடர்பியல் படிப்புகளைப் படித்தவர்கள் மட்டுமல்ல, வேறு படிப்புகளைப் படித்தோரும், சான்றிதழ் படிப்புகளைப் படித்து இத்துறையில் பணியாற்றலாம்.
உள்ளடக்கம் எழுதுபவர்: சமூக வலைதளம் என்பது காணொளி, ஒளிப்படங்களால் மட்டும் நிறைந்தது அல்ல. எழுத்துகளாலும் நிறைந்தது. சமூக வலை தளத்தில் சரியான உள்ளடக்கத்தைப் (Content) பதிவிட்டால் மட்டுமே ஒரு பொருள் அல்லது நிகழ்வைச் சரியாகப் பயனர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும். இதனால், சமூக வலைதளம் சார்ந்த வேலைகளில் எழுதுபவர்களுக்கும் அதிக முக்கியத் துவம் தரப்படுகிறது.
தமிழ், ஆங்கிலம் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் சரியான உள்ளடக்கத்தை எழுதுபவருக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. இதற்கு ஆங்கிலம் அல்லது பிற மொழி சார்ந்த பட்டப் படிப்புகள், இதழியல் அல்லது தகவல் தொடர்பியல் சார்ந்த படிப்புகளைப் படித்தால் போதுமானது. முக்கியமாக, திறமை யாகவும் சுவையாகவும் எழுதுவதற்கான திறன் இருப்பது அவசியம்.
டிஜிட்டல் மார்க்கெட்டர்: திறன்பேசி, மடிக்கணினி, இணையதள வசதி இருந்தால் போதும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வட்டத்துக்குள் வந்துவிடலாம். குறிப்பாகச் சமூக வலைதளத்தில் உங்களுக்கு அதிகப் பின்தொடர்வோர் இருந்தால், நீங்களே ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டராகப் பணியாற்றிவிடலாம். விளம்பரப்படுத்துவதுதான் டிஜிட்டல் மார்க்கெட்டரின் பிரதான வேலை. போட்டி மிகுந்த சூழலில் தனித்துச் செயல்பட விரும்புவோர் இப்பணியை ஏற்று செய்ய முடியும்.
ஆனால், நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும் டிஜிட்டல் சூழலுக்கேற்ப அப்டேட் செய்துகொள்ள வேண்டியது அவசியம். இதற்கு எந்தப் பட்டப் படிப்பும் போதுமானது. ஆனால், பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய வகையில் பேசும் திறன் இருக்க வேண்டும். தேவைப்படுவோர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பான குறுகிய கால படிப்புகளைப் படித்து இத்துறையில் வேலை ஈட்டலாம்.
சைபர் பாதுகாப்பு நிபுணர்: தரவுகளால் இணைய உலகம் நிரம்பி வழிகிறது. ஒரு நிறுவனம் அல்லது தனிநபரின் தரவுகளைப் பாதுகாப்பது கட்டாயமாகிறது. தகவல் திருட்டு, மொத்தமாகவே சமூக வலைதளப் பக்கத்தை ‘ஹேக்கிங்’ செய்வது போன்ற குற்றங்கள் இணைய உலகில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இன்னும் சொல்லப்போனால், தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இணையக் குற்றங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன.
இவை அனைத்துமே சைபர் குற்றங்களில் சேருபவை. எனவே, இதுபோன்ற சைபர் குற்றங்கள் நடைபெறாதபடி முழுப் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக் கண்காணிப்பதும் அவசியமாகிறது. இதற்கு மிகத் திறமையாகப் பணியாற்றக்கூடிய சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் உதவியும் தேவைப்படுகிறது.
நாளுக்கு நாள் சைபர் பாதுகாப்புக்கான வேலைக்கும் ஆள்களின் தேவை அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்தப் பணிக்கு சைபர் பாதுகாப்பு பி.டெக் படிப்புகள் அல்லது தகவல் பாதுகாப்பு தொடர்பான படிப்புகளைப் படிக்கலாம்.