

‘ஜிம் ஜிம் ஜிம்ப்பா.. ஜிம் ஜிம் ஜிம்ப்பா.. ஜிம் ஜிம் ஜிம்ப்பா..’ – இப்படிச் ஆடிப்பாடும் ஆசிரியர்களின் காணொளிச் செயல்பாடு சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் பேசுபொருளானது. மாநில அளவிலான ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சியில் ஆசிரியர்களின் கற்றல், கற்பித்தலுக்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடைபெற்றது இது. ஆசிரியர்கள் இலைதழைகளைக் கட்டிக் கொண்டும் சில இலைதழைகளை கைகளில் பிடித்துக்கொண்டும் முகமெல்லாம் வண்ணங்கள் பூசிக்கொண்டும் ‘ஜிம் ஜிம் ஜிம்ப்பா.. ஜிம் ஜிம் ஜிம்ப்பா..’ என்று பாடிக்கொண்டு பயிற்சி அரங்கில் வலம்வந்தக் காட்சிதான் காணொளியில் இடம்பெற்றிருந்தது.
கற்பித்தல் முறை
‘என்ன இது அநியாயம்? ஆசிரியர்கள் எவ்வளவு புனிதமான வர்கள்? அவர்களை இப்படி ஆட விடலாமா? இப்படி செய்யலாகுமா? மதிப்பு கெட்டுவிட்டது’ எனத் தனிப்பட்ட ஆசிரியர்கள் தொடங்கி ஆசிரியர் இயக்கங்கள் வரை ஆர்ப்பரித்தனர். இது 4, 5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சி. தொடக்க வகுப்புகளில் எப்போதும் ஆடலும் பாடலும் பேச்சும் விளையாட்டுமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையிலோ இது மிகவும் அரிதாகத்தான் இருக்கிறது. ‘கையைக் கட்டு, வாயில் விரலை வை, கரும்பலகையில் இருப்பதைக் குறிப்பேட்டில் எழுது’ எனச் சொல்வது எளிதாக இருக்கிறது. கற்பித்தல் நிகழும். ஆனால், கற்றல் நிகழுமா? குழந்தைகள் என்ன ஆவார்கள்?
குரு தன் விரலைக் கேட்டால் உடனே சிஷ்யன் வெட்டிக் கொடுத்துவிட வேண்டும். அதுதான் குரு பக்தி என்று புளகாங்கிதம் அடைகிற மனநிலை இன்னும் நிரம்பித் ததும்பி வழிகிறது. கற்றல் என்பது வெறுமனே ‘சொல்வதும் கேட்பதும்’ என்கிற புரிதல் நமக்குள் ஆழமாக ஊறிப் போய்க்கிடப்பதன் விளைவுதான் இது. உணர்தல், உள்வாங்குதல், அனுபவித்தல் நிகழ வேண்டும். அதுதானே கற்றல். திணித்தல் அல்லவே. வழங்குதல், உள்வாங்கச் செய்தல், உணரவைத்தல், அனுபவம் பெற வைத்தல், ஆழமாக மனதில் நிலைநிறுத்துதல். இவைதானே கற்பித்தலின் அடிநாதமாக இருக்க வேண்டும்.
எது தேவை?
“வனத்திலே ஒரு விழா... வனவிலங்குத் திருவிழா” என்கிற பாடலை உருக்குக் கம்பிபோல நீட்டமாக, அசையாமல் நின்று வாசிக்கும்போது வருகிற எதிர் வினைக்கும், அதை ராகத்தோடும் உடல் அசைவுகளோடும் பாடும்போது குழந்தைகளிடம் நாம் பார்க்கிற எதிர் வினைக்கும் வித்தியாசம் இருக்கிறது. குழந்தைகளின் சிரிப்பையும், குறும்புகளையும், ஆசைகளையும், கவலைகளையும் கவனித்துப் பார்க்கிற, ரசிக்கிற, கண்களால் நிச்சயம் இதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், பள்ளியில் எந்த நேரத்தில் நுழைந்தாலும் குழந்தைகள் நேர் வரிசையில் அமர்ந்திருக்க வேண்டும். அச்சுப் பிசகாமல் கவனிக்க வேண்டும். குண்டூசி விழுந்தாலும் கேட்கிற அமைதி நிலவ வேண்டும் என்று எதிர்பார்க்கிற அதிகாரிகளால், அதிகாரிகள் தோரணையுடைய ஆசிரியர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியாது.
‘எண்ணும் எழுத்தும் பயிற்சி வந்த பிறகு குழந்தைகள் சந்தோசமாக இருக்கிறார்கள். ஆசிரியர்களுக்குத் தான் வேலை.. வேலை வேலை என விழி பிதுங்கிவிடுகிறது’ என்கிற கருத்து நிலவுகிறது. வகுப்பறையை உயிரோட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளை மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ள வேண்டும். ஆக, மகிழ்வான கற்றல் கற்பித்தல் சூழல் – இதுதான் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்குமான முதன்மைத் தேவை.
செய்ய வேண்டியது என்ன?
பள்ளியின் தேவைகள் பூர்த்தியாக வேண்டும். வகுப்புக்கு ஓராசிரியர் வேண்டும். ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரம் குறைக்கப்பட வேண்டும். கற்பித்தல் தவிர்த்த பிற பணிகளிலிருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்பட வேண்டும். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பதுபோல, மாநிலம் முழுவதும் ‘ஒரே பாடம், ஒரே பாடவேளை’ என இல்லாமல் ஒவ்வொரு வகுப்புக்குமான சூழலின் அடிப்படையில் கற்றல் கற்பித் தலைத் திட்டமிடுகிற சுதந்திரம் வேண்டும். மகிழ்ச்சிகரமான கற்றலை, கற்பித்தலை, அதற்கான சூழலை, கற்பித்தல் சுதந்திரத்தைத்தான் வலியுறுத்த வேண்டும். நாம் எல்லாரும் எழுப்ப வேண்டியது அதற்கான குரல்களைத்தான். ஆசிரியர்களும் ஆசிரியர் இயக்கங்களும் கவனிக்க வேண்டியது இதைத்தான்.
அதைப் போல, குழந்தைகள் எப்படித் தனித்தன்மையானவர்களோ, அதைப் போலத்தான் ஆசிரியர்களும். ஒருவர் நன்றாக நடிப்பார், நடிக்கட்டும். ஒருவர் அழகாகப் பாடுவார், பாடட்டும். கதை சொல்பவர், சொல்லட்டும். நடனம் ஆடுபவர், ஆடட்டும். இங்கு உறுதிப்படுத்தப்பட வேண்டியது என்ன செயல்பாடு என்பதல்ல, என்ன கற்றல் விளைவு என்பது மட்டுமே.
அது குழந்தைகளுக்குப் போய்ச் சேர்கிறதா இல்லையா என்பதைத்தான் பள்ளிக் கல்வித் துறையும் பார்வையிடும்அதிகாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாநிலப் பயிற்சியில் இலை தழையெல்லாம் கட்டிக்கொண்டு ஆடினார்களே? மாவட்டப் பயிற்சியில் வட்டமாக நின்று கும்மி அடித்தார்களே? நீங்கள் ஏன் சதுரமாக நின்று கும்மியடிக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தால் சரிசெய்ய வேண்டியது ஆசிரியர்களை அல்ல!
‘கையைக் கட்டு, வாயில் விரலை வை, கரும்பலகையில் இருப்பதைக் குறிப்பேட்டில் எழுது’ எனச் சொல்வது எளிதாக இருக்கிறது. கற்பித்தல் நிகழும். ஆனால், கற்றல் நிகழுமா?
- தேனி சுந்தர் | thenisundar123@gmail.com