

சங்கத் தமிழில் ‘அலர்' எனும் சொல்லுக்கு ‘மலர்ந்த பூ' என்பது பொருள். காதலரிடையே பூத்து மலர்ந்திருக்கும் காதலைப் பற்றிப் பேசுவதை ‘அலர் தூற்றுதல்' என்று சங்க இலக்கியம் சொல்லும். ‘சின்னஞ் சிறுசுங்க சந்திச்சிட்டுப் போறாங்க, நீங்க ஏன்பா சம்பந்தமில்லாம அதுகளத் தூத்துறீங்க' என்பது போல, ‘அலர் தூற்றுதல்' எனும் சொல்லின் அழகைக் கவனியுங்கள். சிலர் தமக்குள் மறைவாகப் பேசிக் கொள்வதை ‘அம்பல்' என்பார்கள் (இதுவே பிறகு அம்பலம் ஏறியிருக்க வேண்டும்). சிலர் அறிந்த ரகசியமான அம்பல், பலர் அறியப் பகிரப்பட்டால், அலராகி ‘ஊர் அறிந்த ரகசியம்' ஆகிவிடும். அலர்அம்பல் – அலம்பல் (துணியை நீரில் அலசுவது) என வரும்.
பறை என்பது ஊரறியச் சொல்வது. ஈழத் தமிழிலும் மலையாளத்திலும் பறை என்றால் பேசுதல்தான். “என்னடீ? ஊரெல்லாம் போயி பறையடிச்சிட்டு வந்திட்டியில்ல”, இப்படிப் போட்டு உடைப்பதே அலர்ப்பறை! இதுதான் இப்போது மதுரைத் தமிழில் ‘அலப்பர’ ஆகிவிட்டது! அலர்ப்பறை எனும் சங்கத் தமிழே ‘அலப்பர’ எனும் மதுரைத் தமிழானது. ‘அலப்பரை’ என்று (ரை - இடையினம் இட்டு) க்ரியாவின் ‘தற்காலத் தமிழ் அகராதி' சொல்கிறது,
குறிஞ்சியிலிருந்து முல்லைக்கு வந்த மனித குலம், விலங்குகளுக்கு இல்லாத சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு, நாகரிகம் வளர்த்தது. பாலியல் உள்ளிட்ட சில ஒழுக்க வரையறைகளை உருவாக்கிக்கொண்ட காலம் அது. இதை ‘முல்லை சான்ற கற்பு' என்று சங்க இலக்கியம் சொல்லும் (இதுவே பெண்ணடிமையின் தொடக்கப் புள்ளி என்பதையும் கவனிக்க வேண்டும்).
வரையறை - ஒழுக்கம் - சொல் தவறாமை. இவற்றை மீறி, மாறி நடந்தால் ‘முல்லைமாறி' தானே? ஆக, முல்லைமாறி எனும் சங்கத் தமிழ்தான் ‘மொள்ள மாரி' என சென்னைத் தமிழானது. கடன்வாங்கி ஏமாற்றுவதை ‘மொல்ல மாறித்தனம்' என்று விளிப்பது, தமிழ்நாடு முழுவதுமே காணப்படுவதுதான். இது பற்றி மேலும் அறிய இ.பு.ஞானப்பிரகாசம் எழுதிய, ‘சென்னைத் தமிழ், அன்னைத் தமிழ் இல்லையா?’ எனும் வலைப்பதிவைப் பார்க்கலாம்.
சோமாரி (சோம்பேறி, திட்டமில்லாதவன்) கசுமாலம் (கசுமாலர் - திருப்புகழ்) - ஒழுக்கமற்ற, வூட்டாண்ட, கயிதை, பயம் (பழம்), கீசிடுவேன், உலாத்தினு கீறே, பன்னாட, ஒண்யும் பிரியில – போலும் ஏராளமான சொற்கள் தமிழின் சிதைவு; ஆங்கிலம், உருது, இந்தி, வட்டாரச் சொற்களின் கலப்படச் சிதைவு ஆகும். இதன் இசை வடிவமே கானாப் பாடல். இது தனி வகையாக வளர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு பண்பாட்டு மக்கள் சேர்ந்து வாழும் நிலையில் அரசியல் பொருளியல் பண்பாட்டுக் கலப்பு, வாழ்க்கை வழியாக மொழியில் தெரிகிறது.
(தொடரும்)
- நா. முத்துநிலவன் | muthunilavanpdk@gmail.com