ஆங்கிலம் அறிவோமே 4.0 - 38: ‘இமோஜிக்கள்’ இல்லை என்றால்?

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 38: ‘இமோஜிக்கள்’ இல்லை என்றால்?
Updated on
2 min read

‘Emoji’ என்பதை எப்படி உச்சரிப்பது என்றும் அந்தச் சொல் எப்படி உருவானது என்றும் ஒரு வாசகர் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

இது ஜப்பானிய மொழியிலிருந்து உருவான சொல். ‘e’ என்றால் படம், ‘mo’ என்றால் எழுதுதல், ‘ji’ என்றால் தன்மை. 1982இல் ‘emoticons’ அறிமுகமாகிவிட்டன. :) என்பது மகிழ்ச்சியையும் :( என்பது சோகத்தையும் குறித்தன.

இதன் தொடர்ச்சி என்று ‘emoji’யைக் குறிப்பிடலாம். இந்தச் சொல்லை பல விதமாக உச்சரிக்கிறார்கள் என்றாலும் பலரும் ஏற்றுக்கொண்ட ஒன்று ‘இமோஜி’ என்பதுதான். இதில் முதல் எழுத்தை மிருதுவாகவும், இரண்டாவது எழுத்தை அழுத்தமாகவும், மூன்றாவது எழுத்தை சாதாரணமாகவும் உச்சரிக்க வேண்டும்.

வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாததை (அல்லது வெளிப்படுத்தாததை), ஒரு இமோஜியைச் சேர்ப்பதன் மூலம் வெளிப்படுத்த முடியும். அதனால்தான் இமோஜிக்கள் சமூக ஊடகங்களில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

‘நாளைக்கு உன்னைத் தொலைபேசியில் தொடர்புகொள்கிறேன்’ என்று ஒருவர் தகவல் அனுப்புகிறார். பதிலுக்கு நீங்கள் ‘நீ நிச்சயம் தொடர்பு கொள்வாய் என்று எனக்குத் தெரியும்’ என்று பதில் அனுப்புவது வேறு. அந்த வாக்கியத்துக்குப் பிறகு சிரிக்கும் இமோஜியைச் சேர்த்தால், அதற்கான பொருள் வேறு. ‘உன் லட்சணம் தெரியாதா? நீ நிச்சயம் தொடர்புகொள்ள மாட்டாய்’ என்றும் அர்த்தப்படும்.

சிப்ஸ்

l Artefacts என்றால்?

கலைப்பொருள்கள். பொதுவாக முற்காலத்தில் உருவாக்கப்பட்டவை.

l Patrolling என்றால்?

ஒரு பகுதி அல்லது கட்டிடம் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை உறுதிசெய்துகொள்ள அதைச் சுற்றி நடந்தபடி கண்காணிப்பது.

l அவர் மின்னலால் தாக்கப்பட்டார் என்பதை ஆங்கிலத்தில் எப்படி கூறலாம்?

He was struck by lightning.

இந்த இடத்தில் முன்பு ஒரு வாசகர் கேட்ட கேள்வி நினைவுக்கு வருகிறது. ‘What is the past tense of fit?’. இந்தச் சொல்லின் கடந்த காலச் சொல் ‘fitted.’ அதே சமயம் ’fit’ என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே, அவருக்குச் சந்தேகம் வந்திருக்கலாம் என்று முதலில் தோன்றியது. ஆனால் ‘What is the past tense of fit?’ என்ற கேள்விக்கு முன்னால் ‘Sat is the past tense of sit’ என்ற வாக்கியம் காணப்பட்டது. முக்கியமாக அவரது கேள்விக்குப் பின் காணப்பட்ட சிரிக்கும் இமோஜி அவர் கூற வந்ததைத் தெளிவாக உணர்த்தியது. ‘Fat is the past tense of fit’ என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டு புன்னகைத்திருக்கிறார். அதாவது இன்று சிக்கென்று இருப்பவர்கள் கடந்த காலத்தில் பருமனாக இருந்திருப்பார்களாம். இமோஜி இல்லை என்றால் இது விளங்கி இருக்க வாய்ப்பு குறைவு.

  

‘First things first, first come first serve’ இரண்டும் ஒரே பொருள் கொண்டவைதானே?’ என்பது ஒரு வாசகரின் கேள்வி.

இல்லை. ‘First come first serve’ என்பதன் பொருள் முதலில் வந்தவர்கள், பின்னால் வந்தவர்களுக்கு முன்பாகக் கவனிக்கப்படுவார்கள்.

‘First things first’ என்றால் முதலில் செய்யவேண்டியதை முதலில் செய்ய வேண்டும் என்று பொருள்.

மருத்துவமனையில் நோயாளிகள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். ‘First come first serve’ என்றால் அதே வரிசையில் நோயாளிகளை அடுத்தடுத்து மருத்துவர் கவனிப்பார். ஆனால், அந்த வரிசையில் ஐந்தாவதாக நின்றுகொண்டிருப்பவர் இதயத்தைப் பிடித்தபடி துடித்துக்கொண்டிருக்கிறார் என்றால் அவரை முதலில் கவனிப்பார். அது ‘First things first’.

  

‘My hands are tied’ என்று ஒருவர் கூறினால் என்ன பொருள்? நிச்சயமாக, அவர் வில்லனால் கடத்தப்பட்டு அவரது கை கால்கள் கட்டப்பட்டு இருக்கின்றன என்பதல்ல. ஒரு குறிப்பிட்ட சூழலில் அவரால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்று பொருள். அதாவது அப்போதைக்கு அவரால் அந்தச் சூழலை மாற்றிவிட முடியாது.

கீழே உள்ள கேள்விகளுக்கு ஒருவர் ‘My hands are tied’ என்று பதிலளித்தால், அவர் உணர்த்துவது என்ன என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

எனக்கு ரூ.10,000 கடன் கொடுத்து உதவ முடியுமா? இன்று நீங்கள் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொள்ள முடியுமா? தினமும் ஒரு மணி நேரம் என் மகனுக்கு டியூஷன் எடுப்பீர்களா?

(தொடரும்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in