

முன் எப்போதும் இல்லாத அளவில் வெளிநாட்டுக்குச் சென்று படிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்துவருகிறது. அதேநேரத்தில், போலிப் பல்கலைக்கழகங்களில் பணம் கட்டி ஏமாறுதல், போலிப் பட்டப்படிப்பு, போலி விசா என மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் ஏராளம். போலி பல்கலைக்கழகங்களை அடையாளம் காண்பது எப்படி?
அங்கீகாரம்: கடந்த காலத்தில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்குப் படிக்கச் சென்ற மாணவர்கள், போலி சேர்க்கை அனுமதி, போலி விசா பிரச்சினைகளில் சிக்கியது நினைவிருக்கலாம். வெளிநாட்டில் படிக்க ஏற்பாடு செய்யும் முகவர்கள் மூலம் வெளிநாடு சென்றவர்கள் இவர்கள். இது இணைய யுகம். எல்லாம் இணையமயமாகிவிட்ட இன்றைய சூழலில், முன்புபோல் அல்லாமல் எல்லாத் தகவல்களும் இணையத்தில் கிடைக்கின்றன. ஆகவே, வெளிநாட்டில் படிக்க முகவர்களை நாட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான தேடலை இணையத்தில் மேற்கொண்டாலே போலிகளிடமிருந்து எளிதாகத் தப்பிவிடலாம்.
படிக்க விரும்புகிற வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தைத் தேர்வுசெய்தவுடன், அந்தப் பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட நாட்டின் உயர் கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா என்பதைச் சோதித்து அறிய வேண்டும். உதாரணமாக, நம் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டியல் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) இணையதளத்தில் கிடைக்கிறது. அதுபோல வெளிநாட்டில் தேர்ந்தெடுக்கும் பல்கலைக்கழகம் பற்றி அந்நாட்டு உயர்கல்வி இணையதளத்தைப் பார்த்தால் உண்மைத் தன்மையை அறியலாம்.
தரவரிசை: அடுத்து, தேர்வுசெய்த பல்கலைக்கழகம் அங்கீகரிக்கப்பட்ட தரவரிசை நிறுவனங்களின் உலகத் தரவரிசைப் (Global ranking) பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். உதாரணமாக, ‘Times Higher Education World University Rankings’, ‘Quacquarelli Symonds (QS) World University Rankings’ போன்ற நிறுவனங்களால் வெளியிடப்படும் தரவரிசை முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் தேர்வுசெய்த பல்கலைக்கழகம் இதுபோன்ற தரவரிசைப் பட்டியலில் இல்லையெனில் கவனம் தேவை.
நேரடிச் சேர்க்கை: உயர்கல்வியில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களில் சேர உலக அளவில் கடும் போட்டி நிலவும். அப்படிப்பட்ட பல்கலைக்கழகங்கள் முகவர்களை வைத்து மாணவர்களைச் சேர்ப்பதில்லை. மேலும், இதுபோன்ற பல்கலைக்கழகங்களில் பல கட்ட நேர்முகத் தேர்வுகளுக்குப் பிறகே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இங்கே முகவர்களால் எந்த வகையிலும் உதவ முடியாது. முகவர்கள் மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தும் பல பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. நீங்கள் தேர்ந்தெடுத்த பல்கலைக்கழகத்தை ஏதேனும் ஒரு முகவர் மூலமாக மட்டுமே தொடர்புகொள்ள முடியும் என்றால், அது போலி பல்கலைக்கழகமாக இருக்க அதிக சாத்தியம் உண்டு. அத்தகைய பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்வியின் தரமும் சொல்லிக்கொள்ளும் அளவில் இருக்காது.
அதிகாரப்பூர்வ இணையம்: ஒரு பல்கலைக்கழகம் உண்மையா, போலியா என்பதை கண்டறிவதில் அந்தப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் முக்கியப் பங்கு வகிக்கிறது. உண்மையான, தரமான கல்வி வழங்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாணவர் சேர்க்கையை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமே நடத்துகின்றன. அந்தப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்வி உதவித்தொகை, மாணவர் சேர்க்கை, விசா நடைமுறைகள் என மாணவர்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் இணையதளத்தில் வெளியிட்டிருப்பார்கள். விண்ணப்பிப்பவர்களுக்கு உதவ தனிப்பட்ட உதவி மையத்தையும் அப்பல்கலைக்கழகங்கள் வைத்திருக்கும்.
தொடர்புகொள்ளும்போது பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை உள்ளடக்கிய மின்னஞ்சல் முகவரியில்தான் தொடர்புகொள்வார்கள். உதாரணமாக, நெதர்லாந்தில் உள்ள டுவெண்டி பல்கலைகழகத்தை (University of Twente) மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டால், utwente.nl என்கிற domain பெயரை உள்ளடக்கிய மின்னஞ்சலில் இருந்துதான் பதில் வரும். மேலும், பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் படிப்புகள், பணியாற்றும் பேராசிரியர்களின் தகவல்கள், பல்கலைக்கழகத்தில் உள்ள வசதிகள் என அனைத்துத் தகவல்களும் அந்தப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளிப்படையாக இடம்பெற்றிருக்கும். புகழ்பெற்ற Oxford, Stanford, Cambridge, Harvard, MIT போன்ற பல்கலைக்கழகங்களின் இணையதளங்களைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.
கல்வி உதவித்தொகை: உண்மையான பல்கலைக்கழகங்கள் சிறந்த மாணவர்களுக்குப் பெரும்பாலும் கல்வி உதவித்தொகை வழங்குகின்றன. அதற்கான விரிவான தகவல்கள் அந்தப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் தேர்வுசெய்த பல்கலைக்கழகம் கல்வி உதவித்தொகை எதுவும் வழங்கவில்லை என்றாலோ, உங்களிடமிருந்து கல்விக் கட்டணத்தைப் பெறுவதிலேயே குறியாக இருந்தாலோ கவனத்துடன் செயல்பட வேண்டும்.
விசா, தங்கும் உதவி: உண்மையான பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையோடு தங்கள் கணக்கை முடித்துக்கொள்வதில்லை. மாறாக மாணவர்களுக்குத் தேவையான விசா அழைப்புக் கடிதங்கள் வழங்குவதிலும், விசாவுக்கு எங்கு, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்கிற விசா நடைமுறைகளிலும் அவை உதவி செய்கின்றன. நெதர்லாந்து பல்கலைக்கழகங்களுக்குப் படிக்க வரும் மாணவர்களுக்கான விசா நடைமுறைகளை அந்தப் பல்கலைக்கழங்களே செய்துவிடுகின்றன. விசா கிடைத்தவுடன் அதற்கான அனுமதி கடிதத்தை மின்னஞ்சல் மூலம் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அனுப்பி விடுகின்றன. அந்தக் கடிதத்துடன் அவர்கள் நேரடியாக நெதர்லாந்து தூதரகத்தைத் தொடர்புகொண்டு விசாவைப் பெற்றுக்கொள்ளலாம். இங்கே இடைத்தரகருக்கும் முகவருக்கும் இடமில்லை.
மேலும், புதிதாக வரும் மாணவர்கள் தங்குவதற்கென வீடுகளை வாடகைக்கு எடுப்பதிலும் பல்கலைக்கழகங்கள் உதவுகின்றன. இது போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு உங்கள் நாட்டில் உள்ள முகவரைத் தொடர்புகொள்ளுங்கள் என்று பல்கலைக்கழகங்கள் கைகாட்டினால் கவனம் தேவை.
- கண்ணன் கோவிந்தராஜ்
கட்டுரையாளர்: நெதர்லாந்து டுவெண்டி பல்கலைக்கழக அறிவியலாளர்.
merchikannan@gmail.com