தமிழ் இனிது: தமிழால் அறிவோம் நம் வாழ்க்கையை

தமிழ் இனிது: தமிழால் அறிவோம் நம் வாழ்க்கையை
Updated on
2 min read

உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழின் உண்மையான பெருமை அதன் தொடர்ச்சிதான். தொல்காப்பியரின் சங்கப் பலகையில் கிடந்த தமிழ் இப்போது பில்கேட்சின் சன்னல் (விண்டோஸ்) பலகையிலும் கிடைப்பதுதான் உண்மையான பெருமை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளில் கிடந்த தமிழ் இப்போது அனைத்துக் கண்டங்களையும் கடந்து ஆறாம் திணையாக இணையத் தமிழாக வளர்வது பெருமை.

ஜனநாயகத் தமிழ்: உலக மொழிகள் பலவற்றுக்கு இல்லாத பெருமை தமிழுக்கு உண்டு என்றால், அனைத்து மதங்களுக்கும் இடம்கொடுத்து அனைத்து மக்களுக்குமான ஜனநாயக மொழியாகத் திகழ்வதைச் சொல்ல முடியும்.

சமணத்துக்குச் சிந்தாமணி, பௌத்தத்துக்கு மணிமேகலை, சைவத்துக்குத் திருமுறைகள், வைணவத்துக்குப் பிரபந்தங்கள், இஸ்லாத்துக்குச் சீறாப்புராணம், கிறிஸ்துவத்துக்குத் தேம்பாவணி, மத ஒற்றுமைக்குத் திருக்குறள், சிலப்பதிகாரம், தற்கால இலக்கியங்கள். இவற்றோடு, எதிர் நாயக நிலைக்கு ராவண காவியம் என அனைத்து மக்களுக்குமான ஜனநாயக மொழி தமிழ். இதுதான் உண்மைப் பெருமை.

காவிய காலத்துக்கு முந்தைய சங்கப் பாடல்களைப் பற்றிய கருத்து ஒன்று இன்னும் அருமையானது. ஏ.எல்.பாஷம் தொகுக்க ஆக்ஸ்ஃபோர்டு கிளாரெண்ட்டன் அச்சக வெளியீடாக (1975) வந்திருக்கும் ‘இந்தியாவின் பண்பாட்டு வரலாறு’ (A CULTURAL HISTORY OF INDIA) எனும் 600 பக்க நூல் அது. அதில் 34ஆம் பக்கத்தில் சங்க இலக்கியம் பற்றி, ‘இவை சமயச் சார்பற்றவை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிநாதம் இன்று வரை தொடர்கிறதே.

வெறும் இலக்கிய இலக்கணமல்ல, வாழ்க்கைமுறை: தமிழறிவு என்பது பலதுறை அறிவு என்பதே உண்மை. இரண்டாயிரம் ஆண்டுகள் நிறைந்த கல்லணையும், ஆயிரமாண்டு நிரம்பிய தஞ்சைப் பெரிய கோயிலும் தமிழின் அறிவியல், கணக்கு, பொறியியலுக்கு அடையாளம். வணிகம் இல்லையென்றால் ஒரு மொழி வளர முடியாது. யவனர் எனும் சங்கச் சொல் தமிழரின் வணிக மரபுச் சொல் (அகநானூறு-149). கல்வி, மருத்துவம் ஆகியவற்றையும் தாண்டி வாழ்க்கைக்கான மொழி தமிழ்.

பாகற்காய் எனும் காய் கசப்பானது. அதைக் கசப்புக்காய் என்று சொல்லாமல் பாகு (இனிப்பு) அல்லாத பாகுஅல்-காய் என்றது பாகற்காயையே இனிப்பாக்கும் பண்பாட்டுச் சொல்லல்லோ!

‘ஊழல்’ எனும் சொல்லுக்கான பொருள், வியப்பானது. ஊழ் என்றால் விதி, அரசு விதி. அதற்கு மாறான, ஊழ்அல்லாத, அரசு விதிக்குப் புறம்பானது ஊழல்! சரியா? (ஊழல் சரியல்ல, விளக்கம் சரிதானே?)

இப்படி, தொல்காப்பியம் முதல் அறிஞர் தொ.பரமசிவன் வரை அலசுவோம். முன்னைத் தமிழிலிருந்து சென்னைத் தமிழ்வரை பேசுவோம். அரசுத் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர், சாதாரண வாசகர் என அனைவரும் வாழ்க்கைமுறை நுட்பங்களை அறிய தமிழால் முயல்வோம். தமிழ் இனிது!

- muthunilavanpdk@gmail.com

நா.முத்துநிலவன்: அறிவொளி இயக்கத்துக்காக இவர் எழுதிய ‘சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி’ பாடல் இந்திய மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டது. இவரது ‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!’ உள்ளிட்ட கல்வி, கலை-இலக்கியம் சார்ந்த கட்டுரை நூல்களும், ‘புதிய மரபுகள்’ உள்பட்ட கவிதை, சிறுகதைகளும் கல்லூரிகளில் பாட நூல்களாகி உள்ளன. 34 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.

(தொடரும்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in