ஆங்கிலம் அறிவோமே 4.0 - 36: உங்களுக்கு எத்தனை ‘Issue’ இருக்கு?

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 36: உங்களுக்கு எத்தனை ‘Issue’ இருக்கு?
Updated on
2 min read

“குழந்தை என்பதை ‘issue’ என்று குறிப்பிடுவது சரியா?” என்று கேட்கிறார் ஒரு வாசகர். ‘Issue’ என்பது பிரச்சினையைக் குறிக்கும் ஒரு சொல். குழந்தை வளர்ப்பிலும் பிரச்சினைகள் உண்டு என்பதாலோ என்னவோ குழந்தை என்பதைக் குறிப்பிடவும் ‘issue’ என்கிற சொல் பயன்படுகிறது. ஏற்றுக்கொள்ளப்பட்ட சில நடைமுறைகள் இவை:

‘He has two issues’ - அவனுக்கு இரண்டு பிரச்சினைகள். (இரு குழந்தைகள் என்பதைக் குறிக்க ‘He has two children’ என்பதே சரி).
‘I have no issue’ - எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை (அல்லது) எனக்குக் குழந்தைகள் இல்லை.
அதே நேரம், ஒருவருக்குக் குழந்தை இல்லை என்றால் ‘He has no issue’ என்றுதான் குறிப்பிட வேண்டுமே தவிர ‘He has no issues’ என்று குறிப்பிடக் கூடாது.

***

இங்கே உள்ள நான்கு விடைகளில் எது கீழ்க்கண்ட பகுதியின் சரியான தொடர்ச்சியாக இருக்கும்?

The size of the shoe should be the same
(a) as this shoe
(b) as that of this shoe
(c) as these shoes
(d) as that of these shoes
இந்த ஷுவின் அளவு, அந்த ஷுவைப் போன்றது என்பது தவறு. இந்த ஷுவின் அளவு அந்த ஷுவின் அளவைப் போன்றது என்பதே சரி. அதாவது இங்கே ஒப்பிடப்படுவது ஷு அல்ல. ஷுவின் அளவுதான். எனவே (a) மற்றும் (c) ஆகியவை தவறானவை. மீதமுள்ள இரண்டில் ஒரு ஷுவின் அளவு மற்ற ‘ஒரு’ ஷுவின் அளவோடு ஒப்பிடப்படுவது மேலும் இயல்பானது. எனவே (b) என்கிற விடையே சரியானது.

***

'Ail' என்பதற்கும் 'Hail' என்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
உடலிலோ மனத்திலோ ஏதோ வலி அல்லது அசௌகரியத்தால் ஒருவர் பாதிக்கப்படுவதை ‘ailing’ என்று கூறுவோம்.
‘The doctor asked her the nature of ailment’. ‘I do not know what ails him.’
ஆலங்கட்டி மழையை ‘hail’ என்பதுண்டு. மற்றபடி (உரத்துப்) பாராட்டுவதை ‘hail’ என்கிற சொல்லால் குறிப்பிடுவோம். ‘They hailed the Supreme Court's verdict’. ‘He hailed the victory.’

***

“நான் மதிக்கும் ஓர் ஆங்கில இதழில் ஒரு திரைப்பட விமர்சனத்தின் தலைப்பில், அந்தப் படத்தின் பெயருக்கு பின்னால் அடைப்புக்குறிக்குள் ‘drama’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். இது எனக்குப் புரியவில்லை. அந்தத் திரைப்படம் நாடகத்தன்மையுடன் இருக்கிறது என்று எதிர்மறையாகக் குறிப்பிடுகிறார்களா?” என்கிற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார் ஒரு நண்பர்.

ஒரு திரைப்படம் எந்த வகையைச் சார்ந்தது என்பதைக் குறிப்பிட ‘crime’, ‘horror’, ‘romance’ என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் உங்களுக்கு விளங்குகிறது இல்லையா? அது போலத் திரைப்படத்தின் மற்றொரு பிரிவுதான் ‘drama’ என்பது.
இதுபோன்ற திரைப்படத்தில் கதை சீரியஸாக இருக்கும். உணர்வுபூர்வமாக இருக்கும். நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். திரைப்படம், தொலைக்காட்சித் தொடர் ஆகிய இரண்டிலுமே ‘drama’ என்கிற பிரிவு உண்டு.

சிப்ஸ்

# கள்ளச்சாராயம் ஆங்கிலத்தில்?
hooch
# ‘Tad different’ என்றால்?
கொஞ்சமே கொஞ்சம் வித்தியாசமாக.
# ஒரு படத்தின் 50ஆவது நாள் நிறைவை ’humongous victory’ என்று சமீபத்தில் விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அதற்கு என்ன அர்த்தம்?
பெரிய வெற்றி.

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in