

ஒரு சொந்த வீடு எல்லோருக்கும் கனவு. அப்பார்ட்மென்ட்டை விட இன்றும் சொந்தமா ஒரு மனை வாங்கி, அதில் நம் தேவை மற்றும் விருப்ப அடிப்படையில் ஒரு வீட்டை கட்டுவது என்பது அடிப்படை ஆசையாக இருக்கும், அப்படிப்பட்டஒரு சொந்த வீட்டை கட்டுவதற்கு ஒரு பொறியாளர் அல்லது மேஸ்திரியிடம் பணியை ஒப்படைக்க வேண்டும்.
அவ்வாறு ஒப்படைக்கும் நிலையில், தற்போது சில புது வகையான கான்ட்ராக்ட் முறைகள் வந்துவிட்டாலும், பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது ஒன்று லேபர் கான்ட்ராக்ட், மற்றொன்று பில்டிங் அதாவது மொத்த கான்ட்ராக்ட் முறை.
மனையையும், கையில் பணத்தையும் வைத்துக் கொண்டு எதை தேர்வு செய்யலாம் என காத்திருப்போருக்கு நிபுணர்கள் தரும் செய்தி, கட்டிடம் தொடர்பான அடிப்படை அறிவு அவசியம் என்பது தான். அந்த வகையில் எந்த கான்ட்ராக்ட் முறையை தேர்வு செய்யலாம், என்பது குறித்து விளக்குகிறார் தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் தமிழக பிரிவு துணைத்தலைவர் ப.மணிசங்கர்.
முதலில் சொந்த வீடு கட்ட வீட்டின் வரைபட அனுமதியை பெற வேண்டும். அது இல்லாமல் வீடு கட்ட முடியாது. வரைபட அனுமதியை சிஎம்டிஏ, டிடிசிபி அல்லது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் இருந்து பெற வேண்டும். அதன்பின், வரைபடத்துக்கு ஏற்ற ‘எஸ்டிமேஷன்’ அதாவது மொத்த தொகுப்பு அமைப்பு என்ன என்பதை முடிவு செய்ய வேண்டும்.
தொகுப்பு மதிப்பு கணக்கு ஒரு சதுரடிக்கு ரூ.2200 முதல் ரூ.3000 வரை வரலாம். இது அந்த கட்டிடத்தில் பயன்படுத்தும் பொருட்களை பொறுத்து மாறுபடும். அதாவது முழுமையாக கதவும், ஜன்னல் அதற்கான ப்ரேம் என அனைத்தும் தேக்கு, இதர பொருட்கள் அனைத்தும் உயர்ந்த தரம் கொண்டவை என்றால் தோராயமாக ரூ.3000 வரை வரும்.
இதன்படி நாம் கட்டும் வீடு, 1000 சதுரடி அளவு என்றால், அதற்குண்டாகும் தொகையை கணக்கிட வேண்டும். அதன்பின், எந்த வகையிலான தளவாடம் பயன்படுத்த உள்ளோம் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
கட்டிடத்துக்கு செங்கலா, ப்ளை ஆஷ் கல்லா, போரோதெர்ம் கல்லா, சிமென்ட் எந்த வகை, எம்-சாண்ட், மணல் பயன்படுத்தப்படும் இடம், கட்டிட உட்பகுதி கூரையின் உயரம் என்ன, ஜன்னல் மரமா யுபிவிசி-யா என்ற பொருட்கள் பட்டியலை நாம் தயாரிக்க வேண்டும். இதனை பொறியாளர் அல்லது அனுபவம் நிறைந்தவர்களிடம் கொடுத்து தயாரித்து வாங்கலாம்.
வரைபட அனுமதி, பொருட்கள் பற்றிய அறிக்கையை வைத்துக் கொண்டு பட்ஜெட் முடிவு செய்ய வேண்டும். அதன்பின், வீட்டை யாரிடம் கொடுத்து கட்டுவது என்பதை தேர்வு செய்ய வேண்டும். கட்டுமான தொழிலில் யார் திறம்பட, நேர்மையான முறையில் குறிப்பிட்ட நேரத்தில் கட்டிக் கொடுக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
அது நிச்சயம் சிக்கல் மிகுந்த விஷயம்தான். நாம் ஒரு சதுரடி ரூ.2200 ல் கட்டலாம் என்று முடிவெடுக்கும் நிலையில், ஒரு கான்ட்ராக்டர் சதுரடி ரூ.1900ல் கட்டித்தருவதாக கூறுவார். நாமும் குறைந்த தொகை என்பதால் அவரிடம் தந்துவிடுவோம். அதன்பின் தான் டார்ச்சர் தொடங்கும்.