ஒரு கையெழுத்து... ஒரு வாழ்க்கை! - வழக்கறிஞர் டி.எஸ். பார்த்தசாரதி
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சேமிக்கும் அனைத்து உழைப்பையும் முதலீடு செய்வது சொத்துக்களில்தான். ஆனால் தமிழகத்தில் இன்று நடைபெறும் பெரும்பாலான நில மோசடிகளுக்கும், சொத்து வழக்குகளுக்கும் சட்ட விழிப்புணர்வு இல்லாததே முதன்மை காரணம். போலி பத்திரங்கள், மோசடியான பவர் ஆஃப் அட்டர்னி, மறைக்கப்பட்ட வாரிசுகள், அடமான சொத்துக்கள், நீதிமன்ற வழக்கில் உள்ள நிலங்கள் என பல உள்குத்து விசயங்களை பதிவு அலுவலகம் வாயிலாக வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடியாது. ஒருமுறை பதிவு செய்துவிட்டால் அந்த சொத்தை விலை கொடுத்து வாங்கியவர் தான் அதன் அனைத்து பின் விளைவுகளையும் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டிய இக்கட்டான சூழல் உருவாகும்.
இதுபோன்ற தருணங்களை சட்ட ரீதியாக, பாதுகாப்பாக, எளிதாக கடப்பது எப்படி என்பது குறித்து விளக்குகிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டி.எஸ். பார்த்தசாரதி. ஒரு கையெழுத்து போடுவதற்கு முன்பாக எதை சரிபார்க்க வேண்டும், யாரிடம் சட்ட ஆலோசனை பெற வேண்டும், எந்த ஆவணங்களை நம்பலாம், எந்த இடத்தில் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் போன்ற பல கேள்விகளுக்கு இந்த கட்டுரை மிகச்சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
ஒரு நிலம் அல்லது வீடு, அடுக்குமாடி குடியிருப்புக்கு சட்டரீதியாக சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள் எவை?
நிலம் அல்லது வீடு, அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும் முன்பாக சட்ட ரீதியாக சரிபார்க்க வேண்டிய முக்கியமான ஆவணம் மூல பத்திரம். இதன்மூலம் தான் அந்த நிலம் யார், யாருக்கு எப்படி வந்தது என்பதைக் கண்டறிய முடியும். குறி்ப்பாக அந்த நிலம் விலைக்கு வாங்கப்பட்டதா, வாரிசு அடிப்படையில் பெறப்பட்டதா, தான செட்டில்மெண்டாக கிடைத்ததா, உயில் மூலமாக பெறப்பட்டதா என்பதைக் கண்டறிந்து உறுதிபடுத்த முடியும்.
இதற்கு தொடர் பத்திரங்கள் அவசியம். அடுத்ததாக பதிவாளர் அலுவலகம் வாயிலாக பெறப்படும் வில்லங்க சான்று. அதன்பிறகு சம்பந்தப்பட்ட நிலம், வீடு, குடியிருப்புக்கு கடன் வாங்கப்பட்டதா, வாங்கிய கடன் திருப்பி செலுத்தப்பட்டுள்ளதா, அந்த சொத்து தொடர்பாக நிலுவை வழக்கு உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
அதன்பின்னர் புதிதாக கம்ப்யூட்டர் பட்டா பெறப்பட்டுள்ளதா என்றும், அதில் சர்வே எண், உரிமையாளர் பெயர், நஞ்சை, புஞ்சை, வீ்ட்டுமனை என சரியாக வகைப்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். பட்டா இல்லாத எந்த சொத்தையும் வாங்கக்கூடாது. அதன்பிறகு சிட்டா அடங்கல் எனப்படும் ‘அ’ பதிவேடு சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். ஏனெனில் அந்த நிலம் கோயில் நிலமா, அரசு நிலமா, பஞ்சாயத்துக்கு சொந்தமான நிலமா என்பதைக் கண்டறியலாம்.
சிஎம்டிஏ, டிடிசிபி மற்றும் உள்ளூர் பஞ்சாயத்து அங்கீகாரங்கள் முறையாக பெறப்பட்டுள்ளதா என்பதையும், அதற்கான அப்ரூவல் எண் உள்ளதா என்பதையும், அந்த நிலம் குடியிருப்பு வகையா, விவசாய நிலமா என்பதையும் சரிபார்க்க வேண்டும். விவசாய நிலங்களை வாங்கினால் வீடு அல்லது குடியிருப்புகளை கட்ட முடியாது. வீடு அல்லது நிலம் மீது வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால், சம்பந்தப்பட்ட வங்கியின் ஆட்சேபனையில்லா சான்று கட்டாயம் பெற வேண்டும்.
முக்கியமாக பட்டா இல்லாமல், அங்கீகாரம் இல்லாமல், மூலப்பத்திரம் இல்லாமல் எந்த சொத்துக்களையும் வாங்கக்கூடாது. இதைத்தாண்டி கிரையப்பத்திரம், சொத்து வரி, மின்சார வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் ரசீதுகள், கட்டுமான திட்டம் மற்றும் வரைபட அனுமதி ஆகியவற்றையும் சரிபார்க்க வேண்டும்.
இதற்கு முன்பாக அடுக்குமாடி குடியிருப்பின் அடையாளத்துக்காக கட்டுமான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒருங்கிணைந்த கிரையப்பத்திரம் அடுக்குமாடி கட்டிடத்துக்காகவும், யுடிஎஸ் எனப்படும் பிரிபடாத பாகத்துக்காகவும் ஒன்றாக சேர்த்து வழங்கப்படுகிறது. பதிவு ஆவணங்களை வில்லங்க சான்றிதழில் பார்வையிடலாம். சொத்தின் உடமைக்கான ஆவணங்களை பட்டா மற்றும் சொத்து வரியின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
