

வீடு கட்டுவது பலருடைய வாழ்நாள் கனவு. அந்தக் கனவைப் பாதுகாப்பான கட்டிடமாக மாற்றுவதில் கட்டுமானப் பொருட்களின் தரம் மிக முக்கியமானது. குறிப்பாக, தூண்கள், பீம்கள், மேற்கூரை உள்ளிட்ட கான்கிரீட் உறுப்புகளில் பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பிகள், கட்டமைப்பில் ஏற்படும் இழுவிசையைத் தாங்க உதவுகின்றன.
எனவே, இரும்பு கம்பிகளை வாங்கும்போது நிறுவனத்தின் பெயரையும் விலையையும் மட்டும் பார்த்துத் தேர்ந்தெடுப்பது சரியான நடைமுறை அல்ல. கம்பியின் தரம், வலிமை, அளவு, எடை, சோதனைச் சான்றிதழ் மற்றும் கட்டிட வடிவமைப்புக்கு அது பொருத்தமானதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
டிஎம்டி என்பது Thermo Mechanically Treated என்பதன் சுருக்கமாகும். அதாவது அதிக வெப்பத்தில் இயந்திரவியல் ரீதியாக பதப்படுத்தப்பட்ட கம்பி என்பதாகும். கான்கிரீட் அழுத்த விசையைத் தாங்குவதில் சிறப்பாகச் செயல்படுகிறது; இரும்புக் கம்பிகள் இழுவிசையைத் தாங்க உதவுகின்றன. இவை இரண்டும் சரியான கட்டமைப்பு வடிவமைப்பின்படி இணைந்து செயல்படும்போதுதான் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் கட்டமைப்பு உருவாகிறது. எனவே, கம்பியின் தரத்துடன் அதைச் சரியான முறையில் பயன்படுத்துவதும் அவசியம்.
தர அளவீடு
டிஎம்டி கம்பிகளில் Fe 415, Fe 500, Fe 500D, Fe 550, Fe 550D, Fe 600 போன்ற தரங்கள் உள்ளன. இவற்றில் உள்ள எண், கம்பியின் குறைந்தபட்ச விளைவு வலிமையைக் (Minimum Yield Strength) குறிக்கிறது. இதில் Fe 500 மற்றும் Fe 500D இரண்டுக்கும் குறைந்தபட்ச விளைவு வலிமை ஒன்றுதான். ஆனால் Fe 500D வகையில் நீட்சி தொடர்பான தேவைகள் அதிகம். இதனால் கம்பியின் நெகிழ்வுத்தன்மை முக்கியமான கட்டமைப்புகளில் இந்தப் பண்புக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
அதிக எண் கொண்ட கம்பிதான் எல்லாக் கட்டிடங்களுக்கும் சிறந்தது என்று கூற முடியாது. கட்டிடத்தின் சுமை, தளங்களின் எண்ணிக்கை, கட்டமைப்பு வடிவமைப்பு, மண் தன்மை மற்றும் நிலநடுக்க அபாயம் உள்ளிட்ட அம்சங்களுக்கேற்ப கம்பியின் தரம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கட்டமைப்பு வரைபடத்தில் ( Structural Design ) குறிப்பிடப்பட்டுள்ள தரத்தைத் தன்னிச்சையாக மாற்றக்கூடாது