

சொந்த வீடு என்பது எல்லோருக்கும் கனவு. அதேநேரம் வீட்டில் உள்ளவர்கள் எண்ணிக்கை, அவர்களுக்கு தகுந்த வசதிகள் கொண்டதாகவும் அந்த வீடு அமையும் போது தான் குடும்பத்தில் நிறைவான மகிழ்ச்சி உருவாகும்
அவ்வாறு வசதிகள் நிறைந்த வீட்டை உருவாக்க நிலத்தின் தன்மைக்கேற்ற கட்டுமானமும், அதை கட்டும் முறையும், பயன்படுத்தும் பொருட்களும் மிகவும் முக்கியம். வீட்டை கட்டிவிட்டு, அதன்பின், அடிக்கடி மாற்றங்கள் செய்யும் போது அதன் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவதுடன், செலவும் அதிகரிக்கும். எனவே, குடும்பத்தினருடன் அமர்ந்து திட்டமிட்டு, ஒவ்வொருவரின் தேவையும் அறிந்து, அதற்கேற்ப வடிவமைப்பது அவசியமாகிறன.
அடுக்குமாடி குடியிருப்புகளை பொறுத்தவரை ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு, கட்டமைப்பு வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். கட்டுமான நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை மற்றும் வளர்ச்சி அடிப்படையில், கட்டமைப்பில் மிகுந்த கவனம் செலுத்துவதை பார்க்க முடியும்.
இதே போன்ற முக்கியத்துவம் தனி வீடுகளுக்கும் அளிக்கப்பட வேண்டும். ஒரு கட்டிடத்தின் கட்டமைப்பு வடிவமைப்பு, அந்தக் கட்டிடம் பாதுகாப்பாக நிலைத்து நிற்கக்கூடியதாகவும், கட்டமைப்பு உறுப்புகளின் பொருத்துதல்கள், இணைப்புகள் அல்லது தடுப்புச் சுவர்களில் விரிசல் அல்லது செயலிழப்பு அல்லது குடியிருப்பவருக்கு அசவுகரியம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய அதிகப்படியான வளைவுகள் அல்லது அசைவுகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வெப்பநிலை, நெகிழ்வு, விரிசல் மற்றும் திணிக்கப்பட்ட சுமைகள் ஆகியவற்றால் ஏற்படும் அசைவுகள் மற்றும் விசைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். இதுபோன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு ஒரு வீட்டை கட்டமைக்க ‘ஸ்டிரக்சுரல் இன்ஜினியரிங்’ எனப்படும் கட்டமைப்பு பொறியியலின் பங்கு மிகவும் அவசியம். தனிவீடு, அடுக்குமாடி குடியிருப்பு, தொழிற்சாலைகள், பாலங்கள் என அனைத்துக்கும் அடிப்படை கட்டமைப்பு பொறியியல்.
கட்டமைப்பு வடிவமைப்பு நிலம், குடியிருப் போரின் தேவை ஆகியவற்றை பொறுத்து மாறுகிறது. கட்டமைப்பு பொறியாளர்கள் அளிக்கும் வடிவமைப்பின் அடிப்படையில் அவர்கள் பரிந்துரைக்கும் பொருட்களை பயன்படுத்தி, குடியிருப்பை அமைக்கும் போது ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்படும்.
இல்லாத பட்சத்தில் ‘மவுலிவாக்கம்’ போன்ற துயரங்களை தவிர்க்க இயலாமல் போய்விடும். எனவே, தனிவீடோ, அடுக்குமாடி குடியிருப்போ அதற்கு கட்டமைப்பு வடிவமைப்பு என்பது அதி முக்கியம்.