

சாதாரணமாக வீடு கட்ட ஒரு சதுரடிக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரையில் பயன்படுத்தப்படும் பொருட்களை பொறுத்து செலவாகிறது. ஆயிரம் சதுரடி வீடு கட்ட குறைந்த பட்சம் 6 மாத காலமாவது ஆகும். ஆனால், நாம் எதிர்பார்க்கும் அளவு வீடு, உள் அலங்காரம் ஆகியவற்றுடன் மிகக் குறைந்த நாட்களில் எடுத்து வந்து நிலை நிறுத்தப்படும் ‘கண்டெய்னர்’ வீடுகள் தற்போது மிகப் பிரபலமாக உள்ளன. ஆனால், இவை தொடர்பான சந்தேகங்களும் அதிகளவில் உள்ளன.
இவற்றுக்கு தீர்வு சொல்கிறார் சென்னையில் கண்டெய்னர்களை கொண்டு வீடுகள், அலுவலகங்களை நிர்மாணிக்கும் சென்னை மணலி நியூ டவுனில் செயல்படும் மேக்வெல் கண்டெய்னர் கேர் நிறுவனத்தின் ம.வான்மதி கூறியதாவது: வீடு, அலுவலகங்கள் உருவாக்கப்படும் கண்டெய்னர்கள், கப்பல்களில் சரக்கு கொண்டுவர பயன்படுத்தப்படுபவை. அவை தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த பின், 7 ஆண்டுகளில் இருந்து 15 ஆண்டுகளுக்குள் நாங்கள் வாங்கி, நெளிவுகளை சரி செய்து, துரு இருந்தால் அவற்றை நீக்கி, ஓட்டைகள் இருந்தால் அவற்றையும் அடைத்து நல்ல நிலையில் மாற்றம் செய்வோம்.