

வங்கிகளில் வாங்கும் கடனை முறையாக திருப்பிச் செலுத்தாத பட்சத்தில் வங்கிகள் SARFAESI சட்டத்தின் கீழ் வீடு, நிலம் போன்ற சொத்துக்களை கடன் வாங்கியவர்களிடமிருந்து பறிமுதல் செய்து அவற்றை ஏலம் விடும். இவ்வாறு வங்கிகள் ஏலம் விடும் சொத்துக்கள் சந்தை விலையை விட குறைவாக கிடைக்கும் என்பதால் பலரும் இதுபோன்ற சொத்துக்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் சட்ட ரீதியாக முழுமையாக ஆய்வு செய்யாமல் இதுபோன்ற சொத்துக்களை ஏலத்தில் எடுத்தால் பின்னாளில் வழக்குகள், உரிமைத் தகராறு, குடியிருப்பாளர் பிரச்சினை, மறைமுகக் கடன் போன்ற சிக்கல்கள் உருவாகலாம்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் டி.எஸ். பார்த்தசாரதி கூறியதாவது: பொதுவாக பொதுமக்கள் மத்தியில் வங்கி ஏலம் மூலம் கிடைக்கும் சொத்து என்றால் பாதுகாப்பானது என்ற தவறான எண்ணம் உள்ளது.
அந்த சொத்துக்களின் ரிஷி மூலத்தை ஆராயாமல் அவசரகதியில் வாங்கினால் பி்ன்னர் அவதிக்குள்ளாக நேரிடும். இதுபோன்ற சொத்துக்களை வாங்கும் முன்பாக பல்வேறு சட்ட நுணுக்கங்களை அலசி ஆராய வேண்டும்.