

அ
றுபது வருடங்களுக்கு முன்பெல்லாம் கம்பெனிகள் அண்ணா சாலையிலும் ஜார்ஜ் டவுனில் மட்டுமே இயங்கிக்கொண்டிருந்தன. குடியிருப்புப் பகுதிகளில் மளிகைக் கடைகளும் பிரபல வங்கிகளின் கிளைகளும் இயங்கின. பிறகு 1960-ன் நடுவில் நுங்கம்பாக்கம் சாலையில் அரசு அலுவலகங்களும் நட்சத்திரத் தங்கும் விடுதிகளும் தொடங்கப்பட்டன. தி.நகர் சிறிய கடைகள் லேசாக முளைக்கத் தொடங்கின.
உலகமயமாக்கலுக்குப் பிறகு கடைகளும் அலுவலகங்களும் அதிகரிக்கத் தொடங்கின. இன்று சென்னையின் மூலைமுடுக்குகளிலெல்லாம் கடைகள், அலுவலகங்கள் வந்துவிட்டன. வணிக வளாகங்களையும் தாண்டி அடுக்குமாடி வீட்டுக் குடியிருப்புகளைக்கூட வணிக நிறுவனங்கள் தங்கள் அலுவலங்களை அமைக்கத் தொடங்கிவிட்டன. இம்மாதிரி அடுக்குமாடிக் குடியிருப்புகளை வணிக நிறுவனத்துக்கு வாடகைக்கு விடுவது நல்ல பலன் தரக்கூடியதாகவும் இருப்பதால் இதில் அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுபோல வணிக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதற்கு முன்பு சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்:
முதலில் வாடகைக்கு வரவிருக்கும் நிறுவனம் தனி நபர் ஸ்தாபனமா பங்குதாரர் ஸ்தாபனமா என முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஸ்தாபனத்தில் பான் அட்டையின் நகல், உரிமையாளரின் ஆதார் நகல் ஆகிவற்றை வாங்கிவைத்துக்கொள்வது அவசியம்.
நிறுவனத்தைப் பற்றி இணையதளத்தில் சரிசெய்துகொள்ளுங்கள். முன்பின் அறிந்திராத நிறுவனத்துக்கு ஓர் அறிமுகத்தை வலியுறுத்துங்கள்
இந்தக் காலத்தில் வங்கிக் கிளை என்றால் பெரிய இடம் தேவை இல்லை. கவுண்டர்கள் அமைக்கவும் இரும்பு அறை அமைக்கவும் இடம் தேவை. ஒருவேளை இந்த மாற்றத்துக்காக நீங்கள் உங்கள் வீட்டின் அமைப்பையே மாற்ற வேண்டியிருக்கும். இந்தச் செலவு வீட்டு உரிமையாளரான உங்கள் பொறுப்பு என்றால் அதற்கான முன்பணத்தை வாங்குவது நல்லது.
வங்கிக் கிளைகள் மட்டுமல்லாது கொரியர் அலுவலகமென்றாலும் அதற்காக கவுண்டர் தேவைப்படும். பழுதுநீக்கும் அலுவலகமாக இருந்தாலும் வாடிக்கையாளரை எதிர்கொள்ள கவுண்டர் தேவைப்படும். முக்கியமாக அக்கம் பக்கத்தினருக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
நிறுவனத்தின் பெயர் பளிச்செனத் தெரியுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். “தெரியாமலிருக்கும்போது வீட்டு வரி குறையுமே?” என்று நினைக்க வேண்டாம். நாளைக்கு வேறு எதாவது சிக்கல் வந்தால் அது உங்களையும் பாதிக்கும்.
இடத்தை வாடகைக்கு விடும்போது குத்தகைக்கா, வாடகைக்கா என்பதை முடிவெடுத்து, வழக்கறிஞரை நாடி ஒப்பந்தம் எழுதிக்கொள்ளுங்கள். ஏனென்றால், குடியிருப்புக்கு வாடகை விடுவதுபோல அல்ல; வணிகப் பயன்பாட்டுக்கு விடுவது. ஒப்பந்தத்தில் குறிப்பிட மறந்த சிறிய விஷயம்கூடப் பின்னால் பிரச்சினையை உண்டாக்கும்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்முன் கையெழுத்திடும் நபருக்கு அதற்கான தகுதி உள்ளதா, எனக் கவனிக்க வேண்டும். ஏனென்றால், அமையவிருக்கும் நிறுவனம் பெரும் நிறுவனத்தின் கிளையாக இருக்கலாம்.
குடிவந்த பிறகு சில நிறுவனங்கள் முகமை அமைப்புகள் என்ற பெயரில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடலாம். அப்படித் தெரியவந்தால் உடனடியாகச் செயல்பட்டு முடுவெடுத்துவிடுங்கள்.