திருநெல்வேலி- பழைய வீடுகளை வாங்குவதில் ஆர்வம்

திருநெல்வேலி- பழைய வீடுகளை வாங்குவதில் ஆர்வம்
Updated on
2 min read

திருநெல்வேலி பழமையான நகரம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இன்றைய தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய பெரும்பகுதிக்கான தலைநகராக இருந்தது.

அதனால் ஜங்ஷன், டவுன் போன்ற திருநெல்வேலியின் மையப் பகுதிகளில் குடியிருப்புகள் பெருகிவிட்டன. பல்வேறு தேவைகளின் பொருட்டு திருநெல்வேலி நகர்ப் பகுதிகளில் குடியேறுபவர்கள் வாடகை வீட்டில் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள்.

அப்படி இல்லாத பட்சத்தில் திருநெல்வேலி புறநகரில் வீட்டு மனைகள் வாங்கி வீடு கட்ட வேண்டும். மற்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு அவர்கள் நகரைச் சார்ந்தே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் புறநகரில் கிடைப்பதுபோல நகரில் வீடு வாங்குவது சுலபமான விஷயம் அல்ல.

விலையும் எக்கச்சக்கமாக உள்ளது. அதே சமயம் தேவைக்கு ஏற்ப விலையை இரட்டிப்பாக்கும் காரியமும் நடக்கிறது. இந்நிலையிலும் திருநெல்வேலியைச் சொந்த ஊராகக் கொண்ட பலர் நகரின் மையப் பகுதியில் வீடு வாங்க ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

எர்ணாகுளம், கொச்சி போல, ஹைதராபாத், செகந்திராபாத் போல திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரமாகும். அதனால் திருநெல்வேலிக்கு உள்ள அதே பாதிப்பு பாளையங்கோட்டைக்கும் உண்டு. பாளையங்கோட்டையின் மையப் பகுதியில் பழைய வீடு வாங்கும் கலாச்சாரம் அதிகரித்துவருகிறது.

பாளையங்கோட்டையின் புறநகர்ப் பகுதியான கேடிசி நகரைப் பொறுத்தவரை அங்கு இட நெருக்கடியாக மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள். மேலும் கேடிசி நகரில் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளே விற்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இக்காரணங்கள் நகருக்குள் பழைய வீடுகளை வாங்குவதில் கவனம் திரும்பியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

வண்ணாரப்பேட்டை, ஜங்ஷன், டவுன் பகுதிகளில் சில இடங்களில் வீட்டு விலைகள் சந்தை மதிப்பை விட மிக அதிகமாக உள்ளன. அதாவது தேவை இருக்கும்பட்சத்தில் விலையை உயர்த்திவிடுகிறார்கள்.

இடத்திற்கான சந்தை மதிப்பை நிர்ணயிப்பதிலும் சில கட்டுப்பாடுகள் வர வேண்டும். இந்தச் சிரமங்களுக்கு அப்பாற்பட்டும் இந்தப் பகுதியில் பழமையான வீடுகள் வாங்கும் ஆர்வம் அதிகரித்துவருகிறது. இவற்றை வாங்குவதில் இன்று மக்கள் ஆர்வம் செலுத்திவருகின்றனர்.

தான் வசிக்கும் பாளையங்கோட்டை பகுதிகளில் இந்தப் பழக்கம் பெருகிவருவதாகச் சொல்கிறார் கட்டுமானச் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினர் என். இசக்கி. “பழைய வீடுகளை வாங்குபவர்கள் பெரும்பாலும் அந்த வீட்டையே புதுப்பித்துப் பயன்படுத்திக்கொள்கின்றனர். சிலர் இடித்துக் கட்டுவதும் உண்டு” என்கிறார் அவர்.

ஆனால் நகருக்குள் வீட்டை இடித்துக்கட்டுவதை விடப் புதுப்பிப் பது சிறந்தது. ஆனால் வீட்டைப் புதுப்பிக்கும் செலவு கிட்டத்தட்ட புதிய வீட்டுச் செலவை சமயங்களில் தொட்டுவிடும் என்கிறார் இசக்கி. “வீட்டைப் புதுப்பிக்கும்போது டைல்ஸ், தளம், சமையல் அறை வடிவமைப்பு ஆகியவற்றில் சிக்கனம் இருக்கும்பட்சத்தில் செலவு குறையும்” என்கிறார் கட்டுமானச் சங்கத் தலைவர் ராஜேஷ்.

திருநெல்வேலியைப் பொறுத்தவரை காரைக்குடி போன்ற ஊர்களில் உள்ளதுபோன்ற பாரம்பரியமான கட்டிடக் கலை வீடுகள் இல்லை. அதனால் இவற்றைப் புதுப்பிப்பது எளிதுதான்.

பழைய வீடு வாங்கும் கலாச்சாரம் வண்ணாரப்பேட்டை, சிந்துபூந்துறை, டவுன், ரத வீதிகள் ஆகிய பகுதிகளிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது வீடு வாங்குபவர்களில் 40 - 60 சதவீதம் பேருக்கு இந்த ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பழைய கட்டிடங்களின் ஆயுள்காலத்தைப் பொறுத்தவரை எல்லோரும் கூறுவதுபோல் கிடையாது என்கிறார் இசக்கி. “இன்றைக்கு நாம் பார்த்துப் பார்த்து மிக வலுவாகக் கட்டுகிறோம். ஆனால் அந்தக் காலத்து வீடுகள் இந்தக் காலத்து வீடுகளைவிடப் பலமானவை” என்கிறார் அவர்.

பெரும்பாலும் டவுன் பகுதியில் பழைய வீடுகளைப் புதுப்பிக்கும் பணிகளைப் பார்க்க முடிந்தது. ஆனால் திருநெல்வேலி, பாளையங் கோட்டையின் மையப் பகுதிகள் எல்லாவற்றிலும் இந்தக் கலாச்சாரம் பெருகிவருவதாகக் கூறுகிறார் இசக்கி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in