

‘வீ
ட்டைக்கட்டிப்பார்! கல்யாணம் செய்துப்பார்!’ என்ற பழமொழியை எல்லோரையும்போல் நானும் சொல்லியிருக்கிறேன். ஆனால், அதன் உண்மையான அர்த்தம் என்னெவென்று நானும் ஒரு வீடு கட்டியபோதுதான் தெரியவந்தது.
தேடித் தேடி ஒரு மனை வாங்கிப் பார்த்துப் பார்த்து அதில் வீடு கட்டி முடிக்கும்வரை வீடு கட்டுபவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் சொல்லில் அடங்க முடியாதவை. வீடு முழுமை பெறும்போதுதான் இந்த வேதனைகள் எல்லாம் சாதனைகளாகும்.
கடந்த ஆண்டு வீட்டு வசதி வாரியத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட என் பழைய வீடு மழையால் கான்கிரீட் பெயர்ந்து விழ வீட்டை இடித்துக் கட்ட முடிவு செய்தேன். அதற்கான வேலைகளுக்காகவும் வங்கிக் கடனைப் பெறுவதற்காகவும் நான் பட்ட சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. அதுவும் நானும் என் மனைவியும் அரசுப்பணியில் இருந்தும் வீட்டுக் கடன் பெற வங்கிகள் எங்களை அலையவிட்டன. பலரும் எளிதாகக் கடன் பெறும்போது நமக்கு மட்டும் ஏன் இப்படி, என நொந்ததுதான் மிச்சம். அது மறக்க முடியாதது. அவர்கள் கேட்கும் ஆவணங்களான ஃபார்ம் 16-லிருந்து 16 வகையானவற்றைத் தயார்செய்வதற்குள் உயிர்போய் உயிர் வந்தது. அதனால் அதைக் கைவிட்டுவிட்டு என் மனைவி நகைகளை அடகு வைத்தே பழைய வீட்டை இடித்துக் கட்ட முடிவெடுத்தோம்.
வீட்டை இடிக்க முடிவெடுத்தால் உடனே இடித்துவிட முடியாது. அதற்கு நகராட்சியில் இருந்து, மின்சார வாரியம் வரை பல இடங்களுக்கு ஏறி, இறங்க வேண்டும் என்பதை நடைமுறையில் கண்டுகொண்டேன். எல்லாப் பரிகாரங்களூம் செய்து முடித்த பின் 7 அடி மட்டம் வரும்போது கொஞ்சம் மூச்சை இழுத்துவிட்டேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் என் மனைவியின் ஊக்கம் எனக்குப் பெரிய தெம்பைத் தந்தது.
வீடு கட்டும்போது பல சங்கடங்கள் வரும் அதைப் பொறுமையுடன் சமாளிக்க வேண்டும் என ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் என்னை வழிநடத்தினார். எதற்கெடுத்தாலும் கோபப்படும் எனக்கு என் மனைவியின் அறிவுரைகள் பெரிய ஆதரவாக இருந்தன. இதற்கிடையில் அண்டைவீட்டார் வேறு சில தொந்தரவுகளைக் கொடுத்தனர். இந்தச் சிக்கல்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு கீழ்த்தளம் மேல்தளம் என வீடு கட்டி முடித்த பிறகுதான் நிம்மதிப் பெரு மூச்சுவிட்டேன். பெரும் சாதனையைச் செய்த பெருமிதம் ஏற்பட்டது. எல்லாரும் வீடு கட்டினால் இப்படி எல்லாவற்றையும் சந்தித்துத்தான் வெற்றிபெறுவார்களோ?