

மெளலிவாக்கம் கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தென்னிந்தியாவில் நடந்த பெரிய கட்டிட விபத்துகளில் ஒன்று எனப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. மண் பரிசோதனை முறையாக மேற்கொள்ளாததாலேயே விபத்து நடந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
மண் பரிசோதனை என்றால் என்ன?
கட்டும் இடத்தைத் தேர்வுசெய்த பின்னால் அந்த இடத்தில் உள்ள மண் கட்டுமானத்திற்கு உகந்ததா எனப் பரிசோதனைக்கு உட்படுத்தும் முறையாகும். கட்டிடப் பணிகள் தொடங்க இருக்கும் இடத்தில் நான்கு, ஐந்து இடங்களில் துளையிட்டுக் கீழே உள்ள மண்ணை எடுத்து மண் பரிசோதனைக்கென இருக்கும் ஆய்வகங்களில் அதைப் பலவிதமான சோதனைக்கு உட்படுத்துவர்கள். உதாரணமாக அந்த மண் எவ்வளவு அளவு எடை தாங்குகிறது என்பதை அழுத்தம் கொடுத்துச் சோதிப்பார்கள். அதன் அடிப்படையில் கட்டிடத்தின் அடித்தளத்தை ஆழப்படுத்தப் பரிந்துரைப்பார்கள். எவ்வளவு ஆழத்திற்குத் துளையிடுவது என்பது இடத்திற்கு இடம் மாறுபடும். உதாரணமாகச் சென்னையைப் பொறுத்தவரை அடையார் பகுதியில் 12-லிருந்து 14 மீட்டர் வரை துளையிட்டுச் சோதனையிட வேண்டும். வேளச்சேரி பகுதியில் 8 மீட்டர் ஆழம் வரை துளையிடுவார்கள் என்கிறார் புறநகர் கட்டுமானச் சங்கச் செயலாளர் பிரிட்டோ பிரான்சிஸ்.
மண் பரிசோதனைகளைச் செய்து தருவதற்கு தமிழ்நாட்டில் பல தனியார் ஆய்வகங்கள் இருக்கின்றன. மண் பரிசோதனை முடிவின் அடிப்படையில்தான் கட்டுமானப் பொறியாளர் கட்டிடப் பணிகளை வடிவமைப்பார்.
மெளலிவாக்கத்தில் நடந்தது என்ன?
மெளலிவாக்கம் 11 கட்டிட விபத்தைப் பொறுத்தவரை இடி தாக்கியதுதான் விபத்துக்கான காரணமாக முதலில் சொல்லப்பட்டது. ஏரி இருந்த இடத்தில் அந்தக் கட்டிடம் எழுப்பப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஏரி இருந்த இடத்திற்குப் பட்டா வாங்குவது சாத்தியமல்ல என்றும் சொல்லப்படுகிறது. அது ஏரிக்கரைப் பகுதியாக இருக்கலாம். அதனால் அந்தப் பகுதி ஈர மணல் மிகுந்த பகுதியாக இருக்கலாம். தொழில்நுட்ப ரீதியாக இதைக் கரிம மண் (organic soil) என்கிறார்கள். மெளலிவாக்கம் விபத்து நடந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் இம்மாதிரியான ஆர்கானிக் மண்தான் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அது உறுதிசெய்யப்படவில்லை. மீட்புப் பணி முடிந்த பிறகு விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முடியும்.
“மண் பரிசோதனைதான் கட்டுமானத்திற்கு ஆதாரமானது. மண்ணில் உள்ள ஈரப் பதத்திற்குத் தகுந்தமாதிரி கட்டுமானத்தை ஆழப்படுத்த வேண்டும். சில இடங்களில் அடித்தளத்தில் ஈர மண்ணாக இருக்கும் பட்சத்தில் பாறை தட்டுப்படும் வரை முழுவதும் தோண்டி மண்ணை எடுத்துவிட்டுக் கட்டுமான உறுதி தரும் மண்ணை இட்டு நிரப்பிப் பிறகு அடித்தளம் இடுகிறார்கள். உதாரணமாகக் கோவையில் அமைந்துள்ள ப்ரூக்பீல்டு (Brookfield Multiplex) வணிக வளாகம் இந்த முறையில்தான் கட்டப்பட்டது. அந்தக் கட்டிடம் அமைந்த இடம் ஈரப் பதம் உள்ள மண் உள்ள இடமாகும். அதை முழுமையாக நீக்கிவிட்டு உறுதியான மண் வகையை நிரப்பினார்கள்” என்கிறார் கோவையைச் சேர்ந்த கட்டுமானத் துறைப் பேராசிரியை சபரிகா.
“ஆனால் மண் பரிசோதனையைப் பொறுத்தவரை அது கட்டுமானப் பொறியாளரைப் பொருத்ததுதான். அதற்காக சிஎம்டிஏவைப் பொறுப்பாக்க முடியாது” என்கிறார் பிரிட்டோ பிரான்சிஸ். மேலும் “விபத்துக்குள்ளான கட்டிடம் மணல் பரிசோதனையின்படி அடித்தளம் அமைக்கவில்லையா என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது” என்கிறார்.
விபத்துக்குள்ளான கட்டிடம் பைல் ஃபவுண்டேசன் முறையில் அமைக்கப் பட்டதாகச் சொல்கிறார் சபரிகா. பொதுவாக பைல் பவுண்டேஷன் முறையில் அடித்தளம் அமைப்பதற்கு அதிகச் செலவு ஆகும். அதனால்கூடப் போதிய அளவு ஃபவுண்டேஷன் இல்லாமல் அமைத்திருக்கலாம். அந்தக் கட்டிடம் 30 அடியில் அடித்தளம் கொணடதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அந்தக் கட்டிடத்தின் மண் பரிசோதனையின்படி 80 அடி அடித்தளம் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் மண் பரிசோதனை குறித்த விழிப்புணர்வை அளித்திருக்கிறது. குறைவான விலையில் வீடு என்பது தரையின் தளம், உள் அலங்காரம் போன்றவற்றில் அலங்காரங்களைக் குறைப்பதே தவிர கட்டுமானத்தின் தரத்தைக் குறைப்பதல்ல. கட்டுமான நிறுவனங்களும் பொறியாளர்களும் வீடு வாங்க இருப்போரும் ஒரே புள்ளியில் சிந்திக்க வேண்டிய தருணம் இது.