‘சுயம்வர’ கட்டிடங்கள்

‘சுயம்வர’ கட்டிடங்கள்
Updated on
2 min read

உங்கள் வீட்டைக் கட்ட உங்களுக்கு எத்தனை மாதங்கள் ஆயின என்பதை மனதில் கொண்டு இதற்குப் பதில் சொல்லுங்கள். 30 மாடிகள் கொண்ட ஒரு பிரம்மாண்டக் கட்டிடத்தைக் கட்ட எவ்வளவு காலம் பிடிக்கும்? வெறும் இரண்டு வாரங்கள்தான். சீனாவைச் சேர்ந்த பிராட் குரூப் என்ற கட்டிட அமைப்பு நிறுவனம் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறது.

ஈஃபில் டவரைக் கட்ட எவ்வளவு காலம் பிடித்தது தெரியுமா? இரண்டு வருடங்களைவிடக் கொஞ்சம் அதிகம். மேலே குறிப்பிட்ட 200 மாடிக் கட்டிடத்தைக் கட்ட 30 கட்டிடப் பணியாளர்கள் ஒரே நேரத்தில் உழைத்தார்கள். இது எழும்புவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சீன இடம் ஹூனான் மாகாணத்தில் அமைந்தது. போங்டிங் என்ற ஏரிக்கருகே அமைந்துள்ளது இந்தப் பகுதி.

இதை அறிந்ததும் சீனர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள். காரணம் இதுதான்: இப்பகுதி நிலநடுக்கங்கள் உண்டாக வாய்ப்புள்ள பகுதி என்று கருதப்படுகிறது. இந்த இடத்தில் இப்படியொரு பிரம்மாண்ட ஹோட்டல் எழுப்பினால் அதில் தங்கியிருப்பவர்களின் கதி என்னவாகும்?

எனினும் 9 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கங்களைத் தாங்கும் அளவுக்கு இதில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவாம். விரைவில் கட்டி முடித்ததால் இது சுற்றுப்புறச் சூழலுக்கும் சாதகமாக அமைந்தது என்கிறார் இந்த கட்டிடத்தின் பின்னணியில் உள்ள ஜாங் யூ என்பவர். கட்டுமானம் நடைபெறும் நாள் குறைவு என்பதால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பும் குறைவாக இருக்கும் என்கிறார் இவர்.

அதே சீனக் கட்டுமான நிறுவனம் 57 மாடிக் கட்டிடம் ஒன்றை பத்தொன்பதே நாட்களில் கட்டி முடித்திருக்கிறது. உலகிலேயே மிக வேகமாகக் கட்டப்பட்ட கட்டிடம் தங்களுடையதுதான் என்கிறது இந்த நிறுவனம். இதில் 800 குடியிருப்புப் பகுதிகளும், 4000 பேர் வேலை செய்யக்கூடிய அலுவலகத்துக்கான இடமும் உள்ளதாம்.

இந்தியாவில் எப்படி?

இந்தியாவில் உள்ள ஒரு நகரம் மொஹாலி. பஞ்சாபில் உள்ளது. இங்கு இரண்டே நாட்களில் 10 மாடிக் கட்டிடத்தை எழுப்பியிருக்கிறார்கள். இதற்கான அடிக்கல்லை நாட்டியவர் பஞ்சாபின் துணை முதல்வரான சுக்பீர்சிங் பாதல். ஒரு வியாழக்கிழமை மாலை தொடங்கியது இதன் கட்டுமானம். அடுத்த நாள் மாலையில் ஏழு தளங்கள் முடிவடைந்துவிட்டன! திட்டமிட்டபடி 48 மணி நேரத்தில் இந்தக் கட்டுமானம் முடிவடைந்தது. கண்ணாடிகளைப் பொருத்துவதற்கு மட்டும் கொஞ்சம் அதிக நேரம் தேவைப்பட்டது. இந்தியாவில் இரண்டு நாட்களில் உருவான கட்டிடம் இதுதான்.

இவையெல்லாம் எப்படிச் சாத்தியம் ஆனது?

Pre-fabrication என்ற முறை இதற்குப் பெரிதும் உதவுகிறது. Pre-fabrication என்பது கட்டுமானப் பணியின் நவீன அம்சம். ஒரு மோட்டார் காரின் பாகங்களைப் பல இடங்களில் தயாரித்து அவற்றை ஒரே இடத்தில் இணைப்பது (assemble செய்வது) நமக்குத் தெரிந்ததுதான். வீட்டின் பகுதிகளையும் பல இடங்களில் கட்டுமானம் செய்து பிறகு அவற்றை ஓரிடத்தில் கொண்டு வந்து இணைக்கும் முறை சமீபத்தில் அறிமுகமாகிவிட்டது. சில தொழிற்சாலைகள் அவற்றிற்கான கட்டிடப் பகுதிகளை வேறு இடங்களில் உருவாக்கி அவற்றைக் கப்பலில் கொண்டு வந்து பொருத்தி இணைக்கின்றன.

தமிழில் சுயம்வரம் என்ற திரைப்படத்தை எடுத்தார்கள். ஒரே நாளில் இது படமாக்கப்பட்டது. கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இது இடம் பெற்றது. மூன்று இயக்குநர்கள் ஒரே சமயத்தில் தனித்தனியாகப் பல்வேறு நடிகர்களை வைத்து இயக்கி பெரும் ஒத்திகைக்குப் பின் ஒரே நாளில் படமாக்கப்பட்டதாம். Pre-fabricated வீடுகளைப் பற்றி அறியும்போது இந்தத் திரைப்படத்தின் நினைவு வந்தது.

இது போன்ற கட்டுமானங்களால் என்ன நன்மை?

கட்டிடத் தொழிலாளர்களுக்கு இதில் பாதுகாப்பு அதிகம் (15 மாடிக் கட்டிடம் ஒன்று, ஐந்து மூன்று அடுக்குக் கட்டிடங்களாக உருவாக்கப்பட்டு இணைக்கப்படுவதை மனதில் கொள்ளுங்கள்).

இதனால் விலை குறைகிறது. எங்கே குறைவான ஊதியத்தில் தொழிலாளர்கள் வேலை செய்வார்களோ அங்கே உருவாக்கிக் கொள்ளலாம். இதனால் வேகமாக வீடுகளைக் கட்ட முடிகிறது. இது போன்ற நவீன தொழில்நுட்பம் கட்டுமானத் தொழிலில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதன் சாதகங்கள் பாதகங்களை மிஞ்சி நிற்குமா என்பதைக் காலம்தான் கூற வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in