

நகரமயமாக்கலின் அதிவேக வளர்ச்சி, வீடுகளின் தேவையையும் அதிகரித்திருக்கிறது. பெரு நகரங்களில் வீடுகளின் தேவையைப் பூர்த்தி செய்வதில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றன. அடுக்குமாடி வீடுகள் என்றாலே இரண்டு படுக்கையறை (2 பிஹெச்கே), மூன்று படுக்கையறை (3 பிஹெச்கே) கொண்ட வீடுகளைக் கட்டுவது மற்றும் வாங்குவது மட்டுமே முறையே கட்டுநர், வாங்குபவரின் விருப்பமாக இருக்கும்.
அடுக்குமாடிக் கட்டுமானத்தில் இரண்டு படுக்கையறை, மூன்று படுக்கையறை வீடுகள் போகக் கிடைக்கும் சிறிய இடத்தில் ஒரு படுக்கையறை (1 பிஹெச்கே) வீட்டைக் கட்டி கட்டுநர் விற்பது இன்றுவரை உள்ள நடைமுறைதான். இப்படிக் கிடைக்கும் இடத்தில் கட்டப்பட்டு வந்த ஒரு படுக்கையறை வீடு இன்று பலபல பெயர்களில் புதிய பரிணாமத்தைப் பெற்று வருகிறது. இன்று ஒரு படுக்கையறை வீட்டைத் திட்டமிட்டே ஸ்டுடியோ அபார்ட்மெண்ட், ஸ்டுடியோ ஃபிளாட், பேச்சுலர் ஃபிளாட் எனப் பெயர்களில் உருவாக்கும் முறை பரவலாகி வருகிறது. வெளிநாடுகளில் பெரிய அளவில் பரவலாகிவிட்ட இந்தக் கட்டுமான முறை இப்போது இந்தியாவிலும் அறிமுகமாகி வருகிறது.
வழக்கமாக 1பிஹெச்கே என்றால் 500 முதல் 600 சதுர அடியில் வீடு இருக்கும். ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் என்பது ஒரு படுக்கையறை கொண்ட வீடுதான். ஆனால், இந்த வீடு மொத்தமும் ஒரே அறையில் அமைக்கப்பட்டிருக்கும். வீடு 300 முதல் 400 சதுர அடி அளவிலேயே இருக்கும். ஒரு வரவேற்பறை, சமையலறை, ஒரு படுக்கையறை இதில் உண்டு. அதோடு தனியாகக் கழிவறை மற்றும் குளியலறை கலந்து ‘பாத்ரூம்’ கட்டப்பட்டிருக்கும். இந்த வகையான வீடு தடுப்புச் சுவர்கள் இல்லாமல் மற்ற வசதிகள் இருக்கும்.
இதன்காரணமாக வழக்கமான அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள 1பிஹெச்கே-யைவிட இந்த வீடு பார்வைக்குப் பெரியதாகத் தோற்றமளிக்கும். மிகச் சிறிய வீட்டில் குடியிருக்கவில்லை என்ற எண்ணத்தையும் வீட்டின் உரிமையாளுக்குத் தரக்கூடியது.
சிறிய குடும்பத்தினர், பேச்சுலர்கள் போன்றவர்களுக்கு ஏற்ற வீடாக இது வெளிநாடுகளில் உள்ளது. இந்தியாவிலும் பெருநகரங்களில் இந்த வகையான வீடுகள் கட்டுவதைக் கட்டுநர்கள் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். சொந்த ஊரை விட்டுப் பெருநகரங்களில் வசிக்கும் திருமணமாகாத தகவல் தொழில்நுட்பத்துறையினர் இந்த ரக வீடுகளை விரும்புகின்றனர். இதன் காரணமாகப் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் தகவல் தொழில்நுட்பத்தினர் அதிகமாக உள்ள பகுதிகளில் இந்த வீடுகள் அறிமுகமாகி வருகின்றன. கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இந்தப் பாணி வீடுகள் இன்னும் அதிகரிக்கலாம்.
பெரு நகரங்களில் மனையின் விலையே எக்குத்தப்பாக உயர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் குறைவான இடம், அழகான கட்டுமானம், குறைந்த விலை போன்ற காரணங்களால் இந்தப் பாணி வீடுகளுக்கு இந்தியாவிலும் வரவேற்பு கிடைக்கலாம். இந்த ரக வீடுகள் பெருநகரங்களில் இடத்தின் மதிப்பைப் பொறுத்தவரை விலை குறைவாகவே உள்ளதாகச் சொல்கிறார்கள் கட்டுநர்கள். சுமார் 12 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய்க்குள் இந்த வீடுகள் பெருநகரங்களில் கிடைப்பதாகவும் சொல்கிறார்கள்.
சொந்த வீடு என்ற கனவை அடைய ஸ்டுடியோ வீடுகள் நிச்சயம் உதவும். வெளிநாடுகளில் தனியாக வாழும் பழக்கவழக்க நடைமுறைகள் இருப்பதால், ஸ்டுடியோ அடுக்குமாடிக் குடியிருப்புகள் வெற்றிகரமாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், கூட்டுக் குடும்பம், பெற்றோரை வீட்டிலேயே வைத்துப் பராமரிக்கும் இந்தியர்களுக்கு இந்தச் சிறிய ரக வீடுகள் பொருத்தமாகுமா என்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. ஆனால், அதிகபட்சம் 3 அல்லது நான்கு பேர் உள்ள குடும்பத்தினர் நிச்சயம் இது ஏற்ற வீடாக இருக்கும்.