

அறையின் அளவுக்குப் பொருந்தும்படி பொருட்களைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அறையை வடிவமைக்கப் பயன்படுத்தும் பொருட்களைக் கச்சிதமாக அளவெடுத்து வாங்கி அலங்கரிப்பதைப் பற்றித் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ஆனால், வீட்டின் வடிவமைப்பாளர்கள் பொருட்களை அளவெடுத்து வாங்குவதும், அடுக்கி வைப்பதும் மிக முக்கியமான அலங்கார உத்தி என்று தெரிவிக்கின்றனர். இப்படிக் குறிப்பிட்ட அளவில் அறைக்கலன்களைத் தேர்ந்தெடுத்து அடுக்கிவைத்தால் வீட்டின் தோற்றம் கூடுதல் அழகாக விளங்கும். அதற்கான சில வழிமுறைகள்...
‘குஷன்’ விதி
சோஃபாவின் மூலையில் குஷன்களைக் குறிப்பிட்ட அளவில் அடுக்கிவைக்கும்போது வரவேற்பறை தோற்றம் கூடுதல் அழகுடன் மாறும். பளிச்சென்று வடிவமைக்கப்பட்டிருக்கும் 20 அங்குல அளவில் இரண்டு சதுர குஷன்களைத் தேர்ந்தெடுக்கவும். அவற்றின்மீது 16 அங்குலமுள்ள இரண்டு அடர்நிற குஷன்களைச் சேர்த்து சோஃபாவின் மூலையில் வைக்கவும். அத்துடன், மிதமான வடிவமைப்பில் இருக்கும் ஒரு கீழ்முதுகு (Lumbar) தலையணையையும் சேர்த்து அடுக்கிவைக்கவும். இந்த வடிவமைப்பு அறைக்கு ஒரு சமநிலையான தோற்றத்தைக் கொடுக்கும்.
புத்தகங்களை மாற்றி அடுக்குவோம்
உங்களுடைய புத்தக அலமாரியில் அறுபது சதவீதப் புத்தகங்களைச் செங்குத்தாக அடுக்கவும். மீதமிருக்கும் நாற்பது சதவீதப் புத்தகங்களைக் கிடைமட்டமாக அடுக்கிவையுங்கள். இப்படி அடுக்குவதால் புத்தக அலமாரி சமநிலையான வடிவமைப்புடன் காணப்படும். செங்குத்தாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களுக்குக் கீழே கிடைமட்டமான புத்தகங்களை வைக்கவும். செங்குத்தாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்கள் பன்னிரண்டு அங்குல உயரமிருந்தால் அவற்றுக்குமேலே நான்கு அங்குல உயரமிருக்கும் புத்தங்களைக் கிடைமட்டமாக அடுக்கவும். புத்தக அலமாரியில் பூக்கள் இல்லாத சிறிய செடிகளை அடுக்கிவைக்கவும். இது புத்தக அலமாரிக்கு மென்மையான தோற்றத்தைக்கொடுக்கும்.
எது சரியான உயரம்?
பெரும்பாலானவர்கள் கலைப் பொருட்களை அறையில் உயரமான இடத்தில் மாட்டிவைப்பார்கள். இப்படி மாட்டிவைப்பதால் எந்தப் பயனும் இல்லை. உங்கள் அறைக்கலனில் இருந்து மூன்றிலிருந்து எட்டு அங்குலம் வரையுள்ள உயரத்தில் கலைப் பொருட்களை மாட்டிவைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், அறைக்கலனுக்கும், ஓவியத்துக்கும் இடையே உயரம் அதிகமாக இருந்தால் அதைக் கண்களால் ரசிக்க முடியாது. அதனால் இந்த அளவில் ஓவியங்கள், ஒளிப்படங்கள் போன்றவற்றை மாட்டிவைப்பதுதான் சரியானதாக இருக்கும்.
தரைவிரிப்பின் அளவு
காபி மேசைக்குக் கீழே போடப்படும் தரைவிரிப்புதான் உங்களுடைய சோஃபாவை எப்படி வடிவமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும். அதனால், எட்டுக்குப் பத்து அடியிருக்கும் தரைவிரிப்பைப் பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும். இந்த அளவில் சோஃபா மற்றும் நாற்காலிகளின் முன்னங்கால்கள் தரைவிரிப்புக்குள் இருக்கும். பின்னங்கால்கள் தரைவிரிப்புக்கு வெளியே இருக்கும். ஐந்துக்கு எட்டு அடியிருக்கும் தரைவிரிப்பைப் பயன்படுத்தினாலும் இந்த முறையில்தான் வைக்கமுடியும். பெரிய வரவேற்பறையாக இருந்தால் இரண்டு தரைவிரிப்புகளுடன் இரண்டு அமரும் இடத்தை தனித்தனியாக உருவாக்கலாம்.
கண்ணாடியை எப்படி வைப்பது?
சுவரில் மையத்தில் 57 அங்குல உயரத்துடன் இருக்கும் கண்ணாடியை மாட்டுவதுதான் சரியானதாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர் நிபுணர்கள். இதுதான் எல்லோருடைய பார்வை மட்டத்துக்கும் பொருந்தக்கூடிய அளவு. அறைப் பெரிதாகத் தெரிய வேண்டுமென்றால் ஜன்னலுக்கு எதிரில் கண்ணாடியைப் பொருத்துங்கள்.
சாப்பாட்டு மேசையின் அளவு
சாப்பாட்டு மேசை புதிதாக வாங்கப்போகிறீர்களா? 36 அங்குல அகலத்துக்குமேல் இருக்கும்படி வாங்குங்கள். இந்த அளவில் வாங்குவதால் அறையில் கூடுதலான இடமிருக்கும் தோற்றத்தைக் கொடுக்கும். ஒருவேளை, அறை சிறியதாக இருந்தால் வட்டமான சாப்பாட்டு மேசையை வாங்குவது பொருத்துமாக இருக்கும்.
காபி மேசை வாங்கப் போகிறீர்களா?
ஒரு சரியான காபி மேசையின் அளவு பதினைந்து அங்குலத்திலிருந்து இருபது அங்குல உயரத்தில்தான் இருக்க வேண்டும். சோஃபாவில் இருந்து பதினெட்டு அங்குலம் இடைவெளி இருக்கும்படி காபி மேசையைப் போடவேண்டும். இந்த இடைவெளி ஒருவர் அமர்ந்து காபி குடிப்பதற்கும், நடப்பதற்கும் சரியானதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. சோஃபாவைவிட மூன்றில்இரண்டு பங்கு அகலத்தில் இருக்கும்படி வாங்கவும்.
வண்ணங்களின் விதி
அறைக்கான வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது ஆதிக்கம் செலுத்தும் வண்ணத்தை அறுபது சதவீதம் பயன்படுத்துங்கள். இடைநிலை வண்ணத்தை முப்பது சதவீதம் அறையில் பயன்படுத்துங்கள். பத்து சதவீதம் ‘ஆக்சன்ட்’(Accent) வண்ணங்களைப் பயன்படுத்துங்கள். ஒரு பாரம்பரிய அறையில், ஆதிக்க நிறத்தைச் சுவர்களுக்கும், இடைநிலை நிறத்தை மெத்தை விரிப்புகள், திரைச்சீலைகள் போன்றவற்றுக்கும், ‘ஆக்சன்ட்’ நிறத்தைப் பூக்களுக்கும், குஷன்களுக்கும் பயன்படுத்தலாம். உங்களுடைய ஜன்னலுக்கு வெளியே அழகான இயற்கை காட்சிகள் இருந்தால், உட்புற ஜன்னலுக்கும் சுவருக்கு அடித்திருக்கும் ஆதிக்க நிறத்தை அடிக்கலாம்.