

தொடக்கக் காலத்தில் நம்முடைய கட்டிடக் கலையானது முழுக்க இயற்கை சார்ந்ததாகவே இருந்துள்ளது. அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பொருள்களையே கட்டுமானப் பொருள்களாகப் பயன்படுத்தி வந்தனர். உதாரணமாக பாறைக் கற்கள் கிடைக்கும் பகுதிகளில் அதையே கட்டுமானக் கற்களாகப் பயன்படுத்தி வந்தனர். இன்றைய காலகட்டத்தில் கன்னியாகுமரியில் வீடு கட்டினாலும் காஷ்மீரில் கட்டினாலும் சரி ஒரே மாதிரியான கான்கிரீட் கட்டிடமாகக் கட்டுகிறோம். வட்டாரம் சார்ந்த பொருள்களைக் கொண்டு வீடு கட்டினால்தான் அது உயிர்ப்புடன் இருக்கும். அம்மாதிரியான கட்டுமானப் பொருள்களுள் ஒன்றுதான் மூங்கில். மூங்கில் நல்ல இயற்கை மணத்தை அளிக்கக்கூடியது.
மூங்கில் தொடக்கத்தில் இருந்தே கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டுவரும் முக்கியமான கட்டுமானப் பொருள். அறிவியல் தொழில்நுட்பம் வளர வளர நாம் இம்மாதிரியான பசுமைக் கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துவிட்டோம். மூங்கிலைப் பல விதங்களில் கட்டுமானப் பொருள்களாகப் பயன்படுத்தலாம். அறைக்கலன்கள் செய்யவும் பயன்படுத்தலாம். ஜன்னல் திரைகளுக்கும் பயன்படுத்தலாம். மேலும் மூங்கிலைக் கொண்டு தரையும் அமைக்கலாம். மூங்கில் தரைத் தளம் வீட்டுக்கு ஒரு பாரம்பரியத் தோற்றத்தை அளிக்கும்.
மூங்கில் சுற்றுச் சூழலுக்கு உகந்தது. மூங்கில் தரைத் தளம் பராமரிப்புக்கு எளிது. மிகச் சாதாரண முறையில் சுத்தப்படுத்தலாம். எளிதில் வழுக்காது. அதனால் தண்ணீர் அதிகம் புழங்கும் இடங்களில் இதைப் பயன்படுத்தலாம். முக்கியமாக ஆரோக்கியத்துக்கு நல்லது. வீட்டில் பெரியவர்கள், குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்குப் புழங்க மூங்கில் தரைத் தளம் சரியான தேர்வாக இருக்கும். சந்தையில் இருக்கும் மற்ற டைல்களுடன் ஒப்பிடும்போது இவை விலை மிக அதிகமில்லை. மேலும் மூங்கில் நீடித்த உழைப்பைத் தரக்கூடியது.