

பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்பது குறள் மொழி. மின்சாரம் இல்லையென்றால் இவ்வுலகமே இல்லை எனலாம் இப்போது. வார்தா புயலின் தாக்கத்துக்குப் பிறகு சென்னை வாசிகள் மின்சாரத்தின் முக்கியத்துவத்தை உண்மையாக உணர்ந்திருப்பார்கள். என்னதான் மெழுவர்த்தி, எண்ணெய் விளக்குகள் கொண்டு ஒருமாதிரியாகச் சாமளித்தாலும் மின்சார விளக்குகள் தரும் தெளிவு கிடைக்காது.
அது மட்டுமல்ல குளிர்பதனப் பெட்டி, மிக்சி, கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், செல்பேசி, கணினி என அன்றாடத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் மின்சாரத்தைச் சார்ந்தே இருக்கிறோம். மேலும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு இடம் பெயர வாகனத்தைப் பயன்படுத்துகிறோம். இந்த வாகனம் இயங்குவதற்கும் முதலில் மின்னாற்றல் தேவைப்படுகிறது. ஆக அதிலும் மின்சாரப் பயன்பாடு இருக்கிறது.
மின்சாரம் இல்லையென்றால் மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்தோ டீசல் ஜெனரட்டேர் கொண்டு உற்பத்திசெய்தோதான் பயன்படுத்துகிறோம். அந்த அளவுக்கு மின்சாரம் அத்தியாவசியமானதாகிவிட்டது. நம் நாட்டில் பல கிராமங்கள் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை மின்சாரப் பயன்பாட்டிலிருந்து விலகியே இருந்தன. இன்று கிராமங்கள்கூட மின் சாதனங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டன. இந்தச் சூழலில் மின் உற்பத்தி என்பது அந்தளவுக்கு இருக்கிறதா என்பது கேள்விதான். மின் பயன்பாடு கூடியிருக்கிறது. உற்பத்தி அந்த அளவுக்கு இல்லை என்பதுதான் நிதர்சனம். அதனால் மின் உற்பத்தி என்பது இன்றைக்கு அத்தியாவசியத் தேவை.
வெப்ப ஆற்றல், நீர் ஆற்றல், காற்று ஆற்றல், சூரிய ஆற்றல், அணு ஆற்றல் ஆகிய ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் மின்சாரம் என்பது மாற்று மின்னோட்ட வகை மின்சாரம் ஆகும். அதனால் இதைச் சேமித்து வைக்க முடியாது. அப்படியே மின் கடத்தி மூலம் பயன்பாட்டுக்கு அனுப்பிவைக்கத்தான் முடியும்.
இதைச் சமாளிக்க பல்வேறு இயற்கை ஆற்றல்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க ஆராய்ச்சிகள் தொடக்கக் காலத்திலிருந்தே நடந்துவருகின்றன. அந்த வகையில் ஒன்றுதான் கடல் அலை ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுவது.
இந்தத் தொழில்நுட்பம் முதன் முதலில் பிரான்ஸ் நாட்டில் 1799-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் முறையான உபகரணம் போச்சஸ்-ப்ரஸியூ என்னும் பிரெஞ்சுக்காரரால் 1910-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இவர் கடல் அலையை சுழலி (turbine) கொண்டு மின் ஆற்றலாக மாற்றித் தனது வீட்டுக்குப் பயன்படுத்தினார். ஆனால், இன்றைக்கு இருக்கின்ற கடல் அலை மின்சார உற்பத்தித் தொழில் நுட்பம் 1940-ல் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது. யோஷியோ மசுடா என்னும் ஜப்பானியக் கடற்படைத் தளபதி இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார். இவர் கடல் அலை ஆற்றலின் தந்தை எனவும் போற்றப்படுகிறார். கடல் அலை அசைவையே ஆற்றலாகப் பயன்படுத்தி மின்னாற்றலாக மாற்றும் தொழில்நுட்பம் அது.
இதற்கடுத்தபடியாக இந்தத் தொழில் நுட்பம் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டன. இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீபன் சட்லர் என்பவர் சட்லர் டக் என்னும் உபகரணத்தைக் கண்டுபிடித்தார். கடலையில் மேலும் கீழுமாக மிதக்கும் இந்த உபரணத்தின் அசைவு, இயந்திர ஆற்றலாக மாறி மின்னாற்றலாக உற்பத்திசெய்யப்படும். இந்த வகைத் தொழில்நுட்பம் மற்ற தொழில்நுட்பத்தைக் காட்டிலும் சிறந்தது. இதன் மூலம் அலை ஆற்றல் 90 சதவீத மின்னாற்றலாக மாற்றப்படுகிறது. மேலும் 81 சதவீதம் திறனும் கிடைக்கிறது.
கடல் பகுதி அதிகமாக உள்ள இந்தியா போன்ற நாடுகளில் இந்தக் கடல் அலை உற்பத்தி நிலையம் பயனுள்ளதாக இருக்கும். நமது மின் தட்டுப்பாடு ஓரளவு நீங்கும்.
முதன் முதலில் பிரான்ஸ் நாட்டில் 1799-ம் ஆண்டு கடல் அலை மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் முறையான உபகரணம் போச்சஸ்-ப்ரஸியூ என்னும் பிரெஞ்சுக்காரரால் 1910-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், இன்றைக்கு இருக்கின்ற கடல் அலை மின்சார உற்பத்தித் தொழில்நுட்பம் 1940-ல் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது.