

முகில் தவழும் மலைத் தொடர்களும் ஆர்ப்பரிக்கும் கடலும் சூழ்ந்த அழகிய குட்டித் தீவு நாடு தைவான். அதன் முக்கிய நகரங்களான தைப்பே (தலைநகரம்), தைநான், கவுசிங், தைச்சுங், கெண்ட்டிங், பிண்ட்டுங், யூச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. உலக அளவில் 6-வது உயர்ந்த கட்டிடமும் தைவானின் மிக உயர்ந்த கட்டிடமுமான ‘தைப்பே 101’ உள்ளிட்ட பிரம்மாண்டமான வானுயர் கட்டுமானங்களைப் பார்வையிடுதலும் எங்கள் பயணத் திட்டத்தில் முக்கிய இடம் வகித்தது.
வழிதவறியதால் கண்டது!
எங்கு பார்த்தாலும் நீர் நிலைகள் கொண்ட தைவானின் மிகப் பெரிய நீர்த்தேக்கம் யூச்சி நகரில் உள்ள சன் மூன் லேக் (Sun Moon Lake). ஏரியைச் சுற்றி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த அழகிய குட்டி நகரம் இரவு நேரச் சந்தைக்கும் பிரசித்தி பெற்றது. தெருவோரக் கடைகளில் கிடைக்கும் உணவு, விதவிதமான சாவிக்கொத்து, ஆடை, ஆபரணங்கள், காலணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என ஏகப்பட்ட தைவான் தயாரிப்புகள் இங்கு மலிவான விலையில் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றைப் பார்க்கவும் வாங்கவும் சென்ற சிலர் வழி தவறிப்போனோம். தங்கியிருந்த விடுதியின் பெயரும் சன் மூன் லேக் ஹோட்டல் என்பதால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் என லேசான பனி விழும் இரவிலும் நம்பினோம்.
ஆனால் ஆள் அரவமில்லா நீண்ட சாலைகளை நெடு நேரம் கடக்க வேண்டியிருந்தது. வீதியோரக் கடைகளெல்லாம் மூடப்பட்ட பிறகு யூச்சி நகரின் வீடுகள் தெள்ளத்தெளிவாகக் கண்களுக்குத் தெரிந்தன. பகல் நேரத்திலும் இது போன்ற வீடுகளை நாங்கள் கடந்து சென்றோம். ஆனால் அவை வீடுகள் என்றே எங்களுக்கு உறைக்கவில்லை. காரணம், அவற்றின் அமைப்பு. வீட்டின் வரவேற்பறையில் டிவி, சோஃபா, நாற்காலி மட்டுமல்லாமல் ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின், சைக்கிள், ஸ்கூட்டர், கார் என அத்தனையும் நிறுத்தப்பட்டிருந்தன.
கவுசிங் நகர வீதியில் ஒரு வீடு
ஒரு விடு இரண்டு வீடு அல்ல. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடை பயணத்தில் பார்த்த வீடுகளெல்லாம் பொருட்களின் குவியலாக இருந்தன. சில வீடுகளின் முகப்பறையிலேயே சமயலறைப் பாத்திரங்கள்கூட அடுக்கப்பட்டிருந்தன. இத்தனைக்கும் இடையில் இல்லத்தரசியும் இல்லத்தரசரும் குழந்தைகளும் அவர்களுடைய வழக்கமான வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள்.
கண்ணாடிச் சுவர்
அட, வீதியில் நடந்த எங்களுக்கு இவ்வளவும் எப்படித் தெரிந்தது என்கிற யோசனை எழுகிறதல்லவா! ஆமாம் தைவானின் வீடுகளின் தனித்துவம் அதுதான். கண்ணாடிச் சுவர் கொண்ட வீடுகள்! வீட்டின் முன்புறம் கடைகளில் இருப்பதுபோலக் கண்ணாடிக் கதவுகளும், கண்ணாடிச் சுவர்களும் கொண்டிருந்தன. ஆகையால், வரவேற்பறையில் இருக்கும் அத்தனையும் காட்சிப் பொருள்கள்போல் தெருவில் இருப்பவர்களுக்குத் தெரிகின்றன. ஷோரூம் போல இருக்கும் இந்த வீட்டுக்குப் பாதுகாப்பு ஏது? அதுவும் கடைகளில் உள்ளதுபோலவேதான். இரும்பு ஷட்டர் கதவுகள்.
வாகனங்களை நிறுத்தும் இடமோ, வீட்டுக்கு முன்பாக வாசல்; மதில் சுவரெல்லாம் கிடையாது. இட நெருக்கடி காரணமாகவும் திருட்டுப் பயத்தினாலும் வாகனங்களை வீட்டுக்குள்ளேயே பூட்டிவைக்கிறார்கள்.
தமிழகத்தின் பரப்பளவோடு ஒப்பிட்டால் மூன்றில் ஒரு பங்குதான் தைவான். மக்கள் தொகை 2 கோடியே 351 லட்சம்தான். ஆனாலும் பெருவாரியான பகுதிகள் மலையால் சூழப்பட்டிருப்பதால் குடியிருப்புப் பகுதிகளைக் கட்டியெழுப்புவது அவர்களுக்குச் சவாலாக உள்ளது. பொருளாதார ரீதியாக மளமளவென வளர்ந்துவரும் இந்நாட்டின் விலைவாசியும் இந்தியாவோடு ஒப்பிட்டால் பல மடங்கு.
சன் மூன் லேக் அருகே உள்ள வீடுகள்
ஆகையால் குடியிருக்க வீடு கிடைப்பதே கடினம். கார், ஸ்கூட்டர் எனச் சொந்தமாக வாகனம் வைத்துக்கொள்ள வசதியிருந்தாலும் அவற்றை நிறுத்த இடம் இல்லை. பாதுகாப்பு அச்சுறுத்தலும் இருப்பதால் ஜன்னல்களெல்லாம் கம்பிகளால் பூட்டப் பட்டிருக்கின்றன. பெரும்பாலான வீடுகள் இரண்டு அடுக்கு மாடி வீடுகளாக இருப்பதால். வரவேற்பறை தவிர மற்ற எல்லா அறைகளும் மாடியில் கட்டப் பட்டிருக்கின்றன. அதிலும் கவுசிங் நகரில் பெருவாரியான வீடுகள் கடைகளுக்கு மேலேயே கட்டப் பட்டிருக்கின்றன.
இட நெருக்கடி, திருட்டு பயம் என இத்தனை சிக்கல்கள் இருந்தும் ஏன் கடை விரித்தாற்போல கண்ணாடி போட்டு வரவேற்பறையில் இருக்கும் அத்தனையையும் தைவான் மக்கள் காட்டுகிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை. ஆனால் இத்தனை நெருக்கடியிலும் ஒவ்வொரு வீட்டிலும் ஏதோ ஒரு செடி, கொடி வளர்க்கப் பட்டிருப்பதை பார்க்க ஆச்சரியமான படிப்பினையாக இருந்தது!
கவுசிங் நகரில் கடைகளுக்கு மேல் வீடுகள்