அதிகாரப் பத்திர முறை ஆபத்தானதா?

அதிகாரப் பத்திர முறை ஆபத்தானதா?
Updated on
2 min read

இன்று அதிகாரப் பத்திரத்தால் (power of attorney) அதிகமான அளவில் வீட்டுமனைகளும் மனைப்பிரிவுகளும் கைமாற்றப்படுகின்றன. மனையின் உரிமையாளார்கள் வெளிநாட்டிலோ வெளி மாநிலங்களிலோ இருக்கும்போது தங்களது மனைகளை நிர்வகிக்கும் பொறுப்பை அதாவது அதிகாரத்தை வேறு ஒருவருக்குக் கொடுப்பதுதான் அதிகாரப் பத்திரத்தின் முக்கியமான நோக்கம். அதிகாரம் பெற்ற நபர் அதை விற்கவும் முடியும். ஆனால் அதிகாரப் பத்திரம் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா, அதில் சில அம்சங்களைப் பயன்படுத்தி அந்தப் பத்திரப் பதிவு முறை துஷ்பிரயோகம் செய்யப்படுகிறதா என்ற கேள்விகள் இப்போது எழுகின்றன.

ஆனால், உண்மையில் மனை உரிமையாளர்கள் ரியல் எஸ்டேட் தரகர்களுக்குத் தங்கள் நிலத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரப் பத்திரம் செய்துகொடுக்கிறார்கள். இதனால் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மனைகளை பதிவு செய்ய 100 ரூபாய் அதிகாரப் பத்திரம் போதுமானது. இதனால் மனையின் உரிமையாளர்கள் பெயரில் மனை இருந்தாலும் வெறும் 100 ரூபாய் பத்திரத்தில் மனைகள் பதிவுசெய்யப்படுகின்றன.

இதை அத்தாட்சியாக உபயோகித்து பயிர் நிலங்கள் பஞ்சாயத்துத் தலைவர்களால் குடியிருப்புகளாக மாற்றப்படுகின்றன. பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு வயல்வெளிகளைக் குடியிருப்புகளாக மாற்ற அனுமதி கொடுக்க அதிகாரம் கிடையாது. ஆனால், குமரி மாவட்டத்தில் பல பஞ்சாயத்துக்களில் பஞ்சாயத்துத் தலைவர்கள் அரசு அதிகாரிகளின் உதவியுடன் வயல்வெளிகளில் மண் கொட்டி மனைகளாக மாற்றுகிறார்கள்.

புத்தேரி பஞ்சாயத்தை எடுத்துக் கொண்டால் சில அரசியல் தலைவர்கள் பஞ்சாயத்துத் தலைவர்களின் உதவியுடன் வயல்வெளிகளைக் குடியிருப்புகளாக மாற்ற அனுமதி கொடுக்கின்றனர். நகர ஊரமைப்பு இயக்ககத்திடமும் மாவட்ட ஆட்சியாளரிடமும் ஊரக வளர்ச்சி ஆணையரிடமும் பலமுறை இந்தச் சீர்கெட்டைப் பற்றி மனு கொடுத்தும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

புத்தேரி பஞ்சாயத்துத் தலைவர் மாரிமுத்து 2012-ல் வயல்வெளிகளைக் குடியிருப்பு மனைகளாக மாற்ற அனுமதி கொடுத்ததால் அன்றைய குமரிமாவட்ட ஆட்சியாளர் எஸ்.நாகராஜனால் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவருக்குப் பதிலாகப் பஞ்சாயத்துத் தலைவராகப் பணியாற்றிய லட்சுமணனும் 22.9.2016 அன்று புத்தேரியிலுள்ள வயல்வெளிகளைக் மனைப் பிரிவுகளாக மாற்றியதற்காக இன்றைய மாவட்ட ஆட்சியாளர் சஜன்சிங் சவானால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் புத்தேரியிலுள்ள விளை நிலங்களை நில உரிமையாளர்களிடமிருந்து அதிகாரப் பத்திரம் பெற்று தமிழ்நாடு ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியாளாரின் அனுமதியின்றி நிலங்களைத் தானம் செய்துள்ளார். இதைப் பற்றி இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளையினர் மாவட்ட ஆட்சியாளருக்கும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் கொடுத்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர், லட்சுமணனிடம் விளக்கம் கேட்டுள்ளார். அது திருப்திகரமாக இல்லாததால் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் மூலமாக நடவடிக்கை எடுத்தார். புத்தேரி பஞ்சாயத்துத் தலைவர் (பொறுப்பு) லட்சுமணன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் குளறுபடிகளுக்கும் அரசு வருமான இழப்புக்கும் முக்கியமான காரணம் அதிகாரப் பத்திரம்தான் எனத் தோன்றுகிறது. அதிகாரப் பத்திரங்கள் பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதனால் ரியல் எஸ்டேட் தரகர்கள் வருமானவரித் துறையின் கவனத்திலிருந்து தப்ப முடிகிறது. அது மாத்திரமல்ல அதிகாரப் பத்திரத்தைப் பெற்றுக் குறைந்த விலைக்கு வயல்வெளிகளை வாங்கி அதிக விலைக்கு விற்று கோடிக்கணக்கான ரூபாய் கறுப்புப் பணமாக மாற்றப்படுகிறது. கறுப்புப் பணத்தைத் தடுக்க வேண்டும் என்ற கொள்கையில் மும்முரமாக இருக்கும் அரசு செயலற்றுத் தவிக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் புத்தேரி வயல்வெளிகள் நெற் களஞ்சியமாகத் திகழ்கின்றன. ஆனால் இன்று புத்தேரிக் குளத்தின் மடைகள் அடைக்கப்பட்டு இந்தப் பாகம் ஒரு வறட்சி மிகுந்த பாலைவனமாகக் காணப்படுகிறது. அது மட்டுமல்ல, குமரிமாவட்டத்தின் வயல்வெளிகள் ஏறக்குறைய 52 ஆயிரம் ஹெக்டரிலிருந்து 16 ஆயிரம் ஹெக்டராக மாறியதற்கான முக்கியமான காரணங்களுள் ஒன்று இந்த அதிகாரப் பத்திர முறை.

அதிகாரப் பத்திர முறை இந்தியப் பெருளாதாரத்தைச் சீர்குலைப்பதால் அரசு அதிகாரப் பத்திர முறையைப் பரிசீலித்து, இது துஷ்ப்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும்.

கட்டுரையாளர் - குமரி மாவட்டச் சூழலியல் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: richardlalmohan2012@yahoo.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in