

கடந்த செவ்வாய்க் கிழமை 08.11.2016 அன்று இரவு, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் புழக்கத்திலுள்ள ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அன்று நள்ளிரவு முதல் புழக்கத்துக்குப் பயன்படுத்த முடியாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு நாட்டு மக்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைவசம் இருக்கும் ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 30 வரையிலும் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நடவடிக்கையால் சிறு வியாபார ஸ்தலங்கள் முதல் பெரிய நிறுவனங்களைக் கொண்ட பல துறைகள் சட்டெனச் சுணக்கம் கண்டன. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறை இந்த நடவடிக்கையால் இந்தக் குறிப்பிட்ட காலத்தில் பலத்த சரிவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அளவில் பெருமளவிலான கறுப்புப்பணம் ரியல் எஸ்டேட் துறையின் பரிவர்த்தனைக்குப் பயன்படுகிறது என்பதே பரவலான நம்பிக்கை. கறுப்புப் பணம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் ரொக்கமாகப் பண புழங்கும் துறை. கட்டிடப் பணிசெய்யும் கூலியாட்களுக்குத் தினமும் கூலி கொடுக்க, கட்டுமானப் பொருள்கள் வாங்குவதற்கு எனப் பெரிய அளவில் பணம் ரொக்கமாக ரியல் எஸ்டேட் துறையில் புழங்குகிறது. இப்போது ரொக்கமாகப் பணம் எடுக்க கொண்டுவரப்பட்டுள்ளது குறுகிய காலக் கெடுவும் ரியல் எஸ்டேட் துறையில் பின்னடவை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.
இந்திய அளவில் கணக்கில் காட்டப்படாத பணத்தைப் பயன்படுத்தி பெரிய மதிப்பிலான கட்டிடங்கள் வாங்கப்படுவதும் மிகவும் சகஜமாக வழக்கத்தில் உள்ளது என அத்துறைசார்ந்து இயக்குபவர்கள் சொல்கிறார்கள். கட்டுக் கட்டுக்காகப் பணம் பெற்றுக்கொண்டு நிலங்களையும் கட்டிடங்களையும் பதிவுசெய்வதே இதுவரையான வழக்கம். ஆகவே திடீரென ஐந்நூறு, ஆயிரம் ரூபாயின் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையானது நேரடியாக ரியல் எஸ்டேட் துறையைக் கடுமையாகப் பாதிக்கும் என்றே அத்துறையினர் கவலைகொள்கிறார்கள்.
புதிய ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் புழக்கதில் உடனடியாக விடப்படும் என அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ள போதும், ரியல் எஸ்டேட் துறைக்கு ஏற்படும் சுணக்கத்தைத் தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது என்கிறார்கள் முன்னணி கட்டுமான நிறுவனத்தினர். புதுக் கட்டிடங்களை வாங்குவதில் மாத்திரமல்லாமல், பழைய கட்டிடங்களை வாங்குவது விற்பது தொடர்பாகவும் பெருமளவிலான பணம் இந்தத் துறையில் பாய்வது அனைவரும் அறிந்தது. அத்தகைய நிலையில் அரசின் இந்த அறிவிப்பு சிறிது காலத்துக்கு இந்தத் துறையின் பாய்ச்சலை மட்டுப்படுத்தும் என்பதை இத்துறையினர் தெளிவாக உணர்ந்துகொண்டிருக்கின்றனர்.
ஏற்கெனவே விளைநிலங்களை வீட்டு மனைகளைப் பதிவுசெய்வதற்கு எதிராக உயர்நீதி மன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பத்திரப்பதிவு கிட்டதட்ட முடங்கிப் போயுள்ளது எனலாம். இதனால் அது சார்ந்த கட்டுமானத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இவை அல்லாமல் கட்டுமானத்துக்காக அனுமதி தருவதில் உள்ள சிக்கல், கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம், ஆற்று மணல் தட்டுப்பாடு எனத் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் அரசின் இந்த அறிவிப்பு ரியல் எஸ்டேட்டுக்குப் பின்னடவையே தரும் என அத்துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ரூபி மனோகரன், ரூபி பில்டர்ஸ்
இந்த அறிவிப்பு உண்மையிலேயே ரியல் எஸ்டேட் துறைக்குப் பெரும் சரிவை உண்டாக்கும். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை இறங்குமுகமாகத்தான் உள்ளது. பத்திரப்பதிவில் ஏற்பட்ட சுணக்கமும் இத்துறைக்குப் புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஆயிரம், ஐநூறு ரூபாய் தாள்கள் செல்லாதாக அறிவிக்கப்பட்டது மேலும் சரிவைத் தந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் சிறிய கட்டுமான நிறுவனங்கள்தான் நேரடியாகப் பாதிக்கப்படும்.
சொல்லப்போனால் இம்மாதிரியான தொடர் நெருக்கடியால் அவர்கள் கட்டுமானத் தொழிலிருந்தே விடைபெற்றுச் சொல்லக்கூடிய நிலையும் ஏற்படலாம். ஏனெனில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான கூலி, கட்டுமானப் பொருள்கள் என அன்றாடச் செயல்பாடுகளுக்கு ரொக்கப்பணத்தை நம்பித்தான் சிறிய கட்டுமான நிறுவனங்கள் இருக்கின்றன. நடுத்தர மக்கள் பெரும்பாலானோர் 8 வீடுகள் கொண்ட சிறிய கட்டுமானக் குடியிருப்பில் வீடு வாங்கத்தான் விரும்புகிறார்கள். இதனால் சிறிய கட்டுமான நிறுவனங்கள் தொழிலிருந்து வெளியேறுவது மக்களுக்கு இழப்புதான்.
சிட்டி பாபு, தலைவர் நிர்வாக இயக்குநர் அக்ஷயா பிரைவேட் லிமிடெட்
ரொக்கமாகப் பணம் புழங்கும் பொருளாதாரத்திலிருந்து டிஜிட்டல் பொருளாதாரம் என்னும் இடத்தை நோக்கி இந்தியா நகர்வதன் முதல் அடி இது. இதனால் பணப் பரிமாற்றம் தொடர்பாக ஒரு வெளிப்படைத் தன்மை பேணப்படும், இணையம் வழியேயான வர்த்தகம் வளரவும் வழி ஏற்படும். இந்தப் புதிய அறிவிப்பு முதலில் அதிர்ச்சியைத் தந்தாலும் நிதானமாக யோசித்தால் இது முன்னேற்றகரமான ஒரு முயற்சியே என்பதைப் புரிந்துகொள்ளலாம். இனி முதலீடு தொடர்பான விஷயங்களில் வெளிப்படைத் தன்மை, நம்பகத் தன்மை ஆகியவை மேம்படும் என்பதால் வர்த்தக நடவடிக்கைகள் குறைகளின்றி நடைபெறும் என நம்பலாம். இந்த நடவடிக்கை வரும் தலைமுறைக்கான சரியான முதலீடு என்றே சொல்லலாம்.