புத்துயிர் பெறுமா சென்னை அண்ணா சாலை?

புத்துயிர் பெறுமா சென்னை அண்ணா சாலை?
Updated on
2 min read

அறியாதவர்கள் யாரும் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அப்படி யாராவது இருந்தாலும் அவர்களுக்குச் சென்னையில் நீண்டு கிடக்கும் மௌண்ட் ரோடு எனச் சொல்லப்படும் அண்ணா சாலை தெரியாமல் இருக்காது. ஏனெனில் பல தமிழ்த் திரைப்படங்களில் சென்னையின் பிரதான கட்டிடங்களில் ஒன்றாகக் காண்பிக்கப்படும் எல்.ஐ.சி., ஸ்பென்ஸர் பிளாசா போன்றவை இந்தச் சாலையில்தான் அமைந்துள்ளன. இந்தச் சாலையில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன.

சென்னையை மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கும் நாளை மாநகரின் மனிதர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். சென்னை நகரவாசிகளைப் போலவே ரியல் எஸ்டேட் துறையினரும் மெட்ரோ ரயிலை ஆர்வமாக எதிர்கொள்ளவிருக்கிறார்கள்.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாகத் தற்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும் ரயில் ஓடத் தொடங்கிய பின்னர் சென்னை அண்ணாசாலையில் தங்கள் துறை சார்ந்த வணிகம் பெருக வாய்ப்புள்ளதாக ரியல் எஸ்டேட் துறையினர் நம்புகின்றனர்.

ஒரு காலத்தில் அண்ணா சாலையில் அலுவலகங்களை அமைக்கப் போட்டா போட்டி இருந்தது. ஆனால் சென்னை மாநகரில் இரண்டு சக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் தொடர்ந்து அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் உருவானது. இதன் காரணமாக அண்ணா சாலையில் அலுவலகத்திற்கு வந்துபோக சிரமமானது. மேலும் அலுவலகங்களில் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக வணிக நிறுவனங்கள் தங்கள் பார்வையை வேறு பக்கம் திருப்பின. இந்த நிலை மெட்ரோ ரயில் இயங்கத் தொடங்கியதும் மாறிவிடும் என ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது அண்ணாசாலையில் இருக்கும் பல கட்டிடங்கள் சென்னை மாநகர் கட்டுமானச் சட்டம் உருவாகும் முன்னர் கட்டப்பட்டவை. எனவே அவை கட்டுமானச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றாதவை. நிலத்தின் பரப்புக்கும் அதில் உருவாக்கப்படும் கட்டிடத்தின் பரப்புக்கும் உள்ள விகிதத்தை அவை முறையாகப் பேணவில்லை. சில கட்டிடங்கள் அனுமதிக்கப்படும் அளவைவிட இரு மடங்கு பரப்பு கொண்ட கட்டிடத்தை எழுப்பியுள்ளன. ஆகவே அவை மறு சீரமைக்கப்பட வேண்டியது அவசியம் என்று ரியல் எஸ்டேட் அமைப்பு அரசிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தரமான அலுவலகம் என வகைப்படுத்தப்படும் கிரேடு ஏ அலுவலகங்களுக்கான இடம் அண்ணாசாலையில் மிகக் குறைவாகவே உள்ளது. அநேகமான கட்டிடங்களில் கிரேடு பி, சி போன்ற வகை அலுவலகங்களே அமைந்துள்ளன. வாகன நிறுத்தம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை அடிப்படையாக கொண்டே கிரேடுகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

சென்னையில் மெட்ரோ ரயில் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் பொதுப் போக்குவரத்து மேம்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கார்களிலும் பைக்களிலும் வந்தவர்கள் மீண்டும் பொதுப் போக்குவரத்தை நாடுவார்கள். இதனால் அண்ணாசாலை அலுவலகங்களுக்கு எளிதில் வந்து போகும் சூழல் உருவாகும்.

ஆகவே பெரும்பாலான கட்டிடங்கள் கிரேடு ஏ வகை அலுவலகங்களை உருவாக்கும் வாய்ப்பை மெட்ரோ ஊக்குவிக்கும். இதில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் நிலைமை ஏற்படும். ஏற்கனவே பல கட்டுமான நிறுவனங்கள் இந்த முயற்சியில் இறங்கியுள்ளன என ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நந்தனத்திலும் ஆயிரம் விளக்கிலும் நான்கு லட்சம் சதுர அடிக்கு மேல் அலுவலகம் அமைக்கும் அளவுக்கு இடத்தை வைத்துள்ள கட்டுமான நிறுவனம் இந்த நிலையை முன்னரே உணர்ந்துள்ளதாகக் கூறுகிறது. அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலம் அருகே அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று உருவாவதைக் குறிப்பிடும் அந்நிறுவனம் அநேக கிரேடு ஏ அலுவலகங்கள் விரைவில் உருவாகும் என நம்பிக்கையுடன் சொல்கிறது. அத்தனை அலுவலகங்களையும் எளிதில் சென்றடைய வசதியாக மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைவது ரியல் எஸ்டேட் துறையினருக்கும் உற்சாகம் அளிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in