Published : 22 Oct 2016 11:50 AM
Last Updated : 22 Oct 2016 11:50 AM

கணினி பட்டா பெறுவது எப்படி?

பட்டாப் பதிவுகள் என்பது நில உரிமை மற்றும் நில அளவுக்குத் தொடர்பான உள்ளீடுகள் அடங்கியவை. பட்டா கிராமப் புறங்களில் ஹெக்டேர்ஃஆர்ஸ் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. 2008-ம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக் கிராமப் புறச் சொத்துக்களுக்கும் கணினி மூலம் பட்டா வழங்கப்படுகிறது. அதில் தாசில்தார், துணை தாசில்தார், அல்லது மண்டலத் துணை தாசில்தார் கையெழுத்து இடம் பெறும்.

கணினி பட்டா என்பது மாநகராட்சி, நகராட்சி, நத்தம் நிலம் அல்லாத இடங்களுக்கு வழங்கப்படும். மேலும் அதில் கிராமம், தாலுகா கணக்கெடுப்பு எண்கள் குறிப்பிடப்பட வேண்டும். உட்பிரிவு எண்கள் நன்செய் நிலம், புன்செய் நிலம் அளவு மற்றும் பிற நில அளவுகளும் அட்டவனையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கணினி மயமாக்கப்பட்ட பட்டா பெறுவது எப்படி?

2008-ம் ஆண்டு முதல் நிலப் பதிவுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ள 3-வது மாநிலம் தமிழகம் (கர்நாடகம், ஆந்திர பிரதேசம் முறையே முதல் இரு இடங்களில் உள்ள மாநிலங்கள்). கணினி மயமாக்கப்பட்ட பட்டாவில் சொத்தின் வரைபடம் இடம்பெறாது.

மேலும் 2011-ம் ஆண்டு முதல் தமிழக அரசாங்கம் நடைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதன்படி பட்டா விண்ணப்பதாரர் நேரடியாகக் கிராம நிர்வாக அலுவலகரிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துக் கிராம நிர்வாக அதிகாரியிடம் ரசீது பெறலாம்.

ஒருவேளை அந்தப் பட்டா உட்பிரிவுகளில் தொடர்புடையது இல்லையென்றால் விண்ணப்பதாரர் நேரடியாகச் சரிபார்த்து அசல் ஆவணங்களுடன் தாலுகா அலுவலகம் சென்று பட்டா பெறலாம்.

ஒருவேளை உட்பிரிவுகளில் தொடர்புடையதாக இருந்தால் விண்ணப்பதாரர் விண்ணப்பம் பதிவுசெய்ததில் இருந்து நான்காவது வெள்ளிக்கிழமை பெற்றுக்கொள்ளலாம் (சர்வேயர் இடத்தைப் பார்வையிட்டப் பிறகு).

விண்ணப்பதாரர் உட்பிரிவுகளுக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தைத் தாசில்தாரிடமிருந்த ஒப்புதல் பெற்ற அன்றே செலுத்த வேண்டும். உட்பிரிவு நடைமுறைகள் 30 நாட்களுக்குள் முடிக்கப்படவேண்டும்.

பட்டா ஆன்லைனில் சரிபார்க்கும் முறை

பட்டா ஆன்லைனில் சரிபார்க்க >www.tn.gov.in என்ற இணையதளத்தில் இ-சேவைகள் பரிவு மாவட்ட அலுவலகங்கள் என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். பட்டா அல்லது சிட்டா ஆகியவற்றில் குறிப்பிடப்பட வேண்டிய விவரங்களான மாவட்டம், தாலுகா, கிராமம் மற்றும் பட்டா எண் ஆகியவற்றைக் காணலாம். ஒருவேளை பட்டா எண் தெரியவில்லை என்றால் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். சர்வே எண் (ஏதாவது ஒரு சர்வே எண் போதுமானது) உடன் உட்பிரிவுகளும் நிரப்பப்பட வேண்டும்.

சென்னை சொத்துகள் ஆன்லைன் மூலம் சரிபார்க்கும் முறை:

சமீபத்தில் சென்னையிலுள்ள அனைத்துச் சொத்து விவரங்களையும் மேற்படி இணையதளத்தில் ஆன்லைன் மூலம் சரி பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு சான்றுகள் கிளிக் செய்ய வேண்டும். பிறகு தாலுகாவைத் தேர்வு செய்ய வேண்டும். பிளாக் நம்பர் மற்றும் தெருவைக் குறிப்பிட வேண்டும். பின்னர் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்களைக் குறிப்பிட வேண்டும். பின்னர் தேடுதலை கிளிக் செய்ய வேண்டும். சொத்தின் முகவரி, சர்வே எண், உட்பிரிவு எண், சொத்தின் அளவு, உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களை ஆன்லைன் மூலம் சரிபார்க்கலாம்.

கட்டுரையாளர், கேரள அரசின் சட்ட ஆலோசகர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x