Last Updated : 29 Oct, 2016 10:37 AM

 

Published : 29 Oct 2016 10:37 AM
Last Updated : 29 Oct 2016 10:37 AM

வீட்டுக்கு வெளியே ஓர் அழகான அறை

அறை என்பது நான்கு சுவர்களுக்கு உள்ளேதான் இருக்க வேண்டுமா? ஒன்றிரண்டு பக்கச் சுவர்களைத் தவிர்த்துவிட்டு, பாதி கூரை மீதி வானம் எனப் பூச்செடிகளுக்கு மத்தியில், சிலுசிலு காற்றுடன் உங்கள் வீட்டிலேயே ஒரு திறந்த அறையினை அமைக்கலாம் வாருங்கள்.

வீட்டின் அமைப்பையே மாற்றும் அறை

பாரம்பரிய வீடுகளின் புழக்கடை, முகப்புத் திண்ணை, வெளி முற்றம் எனக் காற்றாட மேற்கொள்ளப்பட்ட சில ஏற்பாடுகளின் நவீன நீட்சிதான் இந்தத் திறந்த அறை. அளவில் சிறிய வீடானாலும், அறைகளில் ஒன்றைத் திறந்த முறையில் அமைப்பது வீட்டு அமைப்பை அடியோடு மாற்றிப் பிரம்மாண்டம் தரும். வீட்டின் தொடர்ச்சியாக அதன் ஒன்றிரண்டு பக்கச் சுவர்களைப் பயன்படுத்தியோ, அல்லது தனியாக வீட்டுத் தோட்டத்தின் மத்தியில் சுவர்கள் இல்லாமலோ திறந்த அறை அமைக்கலாம்.

மனசைத் திறக்கும் அறை

வீடென்பதைப் பெரும்பாலும் நம்மை நாமே அடைத்துக்கொள்ளும் விருப்பச் சிறையாக வைத்திருக்கிறோம். வெளியே வெயில் குறைந்து இதமான காற்று வீசுவதுகூடத் தெரியாது. நான்கு சுவர்களுக்குள் தொலைக்காட்சியில் முடங்கிக் கிடப்போம். மாறாக அமர்ந்து வாசிக்க, இசை கேட்க, காற்றாடக் குடும்பத்தினருடன் உரையாட, நண்பர்களைச் சந்திக்க எனப் பல வகையிலும் வீட்டுக்கு வெளியே கிடைக்கும் உணர்வை வீட்டிலேயே பெற திறந்த அறையின் கட்டுமானம் கைகொடுக்கும். அன்றாட மன அழுத்தத்திலிருந்து விடுதலைத் தரும் வகையில், திறந்த அறை வீட்டு உறுப்பினர்களின் விருப்ப அறையாக விரைவிலேயே மாறிப்போகும்.

வீடு கட்டத் திட்டமிடும்போதே திறந்த அறைக்கும் சேர்த்து வடிவமைப்புகளை மேற்கொள்வது சிறப்பு. தனி வீடுகள் இதற்கு உகந்தவை. வீட்டின் பக்கவாட்டில் அல்லது பின்பகுதியில், உரிய அமைப்புகளைத் திட்டமிடலாம். வீட்டின் தொடர்ச்சியாக, ஒரு கதவு அமைத்துத் திறந்த அறையை அமைப்பது ஒரு பாணி. வீட்டுக்கு அருகிலேயே, அதன் சுவர்களில் இருந்து துண்டித்துக்கொண்டதாக திறந்த அறையை அமைப்பது மற்றொரு பாணி. மேலும் திறந்த அறையை மையப்படுத்தி வீட்டுத் தோட்டத்தினைத் திட்டமிடுவது வீட்டின் அமைப்பிற்குக் கூடுதல் பொலிவினைத் தரும்.

வீட்டினுள் அறை அமைப்பதற்கான ஏற்பாடுகளில், பெரும்பாலானவை இந்தத் திறந்த அறையை அமைப்பதிலும் தேவைப்படும். அதே சமயம் அந்த ஏற்பாடுகளைச் சற்றே ரசனையுடன் பாதியில் நிறுத்தியது போன்ற தோற்றம் தருவது மொத்த வீட்டையும் வேறுபடுத்திக்காட்டும். திறந்த அறையை அமைக்கும் முன்னர், அதற்கு ஒதுக்கும் பரப்பைத் தீர்மானித்துக் கொள்ளலாம். இருக்கும் உபரி இடம் முழுக்க வளைத்துப் போட்டு அறையை அமைக்கக் கூடாது. சுற்றிலும் தோட்டம், புல்வெளிப் பரப்பு, தனித்துவ அழகுச் செடிகள் எனப் போதிய இடத்தை ஒதுக்கி, திறந்த அறையை நிர்மாணிப்பது நல்லது.

திறந்த அறையைக் காற்றோட்டத்துக்குத் தோதாகத் தீர்மானிக்க வேண்டும். நமது வீட்டின் சுவர்கள், சுற்றுச்சுவர், பக்கத்து வீட்டின் சுவர்கள் எனக் காற்றோட்டத்தைத் தடுக்கும் அம்சங்களை முன்பே கணக்கிட்டுத் திறந்த அறையைத் திட்டமிடலாம். இருக்கும் வீட்டின் சுவரை ஒட்டியே திறந்த அறையைத் தீர்மானிப்பது, செலவைக் குறைக்கும். பாதுகாப்பு, தனிமை, வீட்டுடனான போக்குவரத்து போன்றவற்றுக்கும் இது உதவியாக இருக்கும். மேலும் வீட்டை அடைத்துக்கொண்டிருக்கும், வாஷிங் மெஷின் போன்றவற்றின் உபயோகத்தையும் திறந்த அறையை ஒட்டித் தீர்மானிக்கலாம்.

கூரை இல்லாத அறை எனில் மழை, வெயில் காலத்துக்கு ஈடுகொடுக்க நீளக் கருங்கல் முதல் கிரானைட் வரையிலானவற்றைக் கொண்டு இருக்கை மேசைகளை வடிவமைக்கலாம். பகுதி கூரை எனில் மர இருக்கைகளுக்கு போதிய வார்னிஷ் பாதுகாப்பு தருவது அவசியம். பிளாஸ்டிக் இருக்கைகள் பட்ஜெட்டுக்கு உகந்தது என்றபோதும், சூழலுக்குப் பொருத்தமாகத் தேர்வு செய்யத் தவறினால் பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் உறுத்தல் தரும். கூரை அவசியம் எனில் குடில்கள் அமைப்பதற்கான இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தலாம். குறுக்கும் நெடுக்குமாகச் சாரங்கள் அமைத்து அதில் தேவையானபோது தார்ப்பாய் மாதிரியிலான தற்காலிகக் கூரைகள் அல்லது ஒளி ஊடுருவும் செயற்கைக் கூரைகளை அமைத்துக்கொள்ளலாம். வெறுமனே சாரங்களின் மேலாகப் பசுமையான கொடிகளைப் படரச் செய்து, கூரையாக்குவதும் ரசனையானது.

சொகுசு தரும் நகாசு வேலைகள்

திறந்த அறையைச் சுற்றி வளைத்துத் தோட்டம் அமைக்கப் போதிய இடமில்லாதவர்கள், அறையின் உட்புறம், வெளிப்புறம் இருக்கும் சுவர்களில் செங்குத்து வாக்கில் பூச்சட்டிகளை அமைத்துத் தொங்கும் தோட்டம் அமைக்கலாம். இருக்கைகளின் அருகிலும், மேசையின் மத்தியிலும், கூரையின் சாரத்திலிருந்து தொங்கும் வகையிலும் பூச்செடிகள், அழகுத் தாவரங்கள் அமைப்பது பார்வைக்குப் பசுமையான அழகைச் சேர்க்கும். அதற்காக, அடர்த்தியாகச் செடிகள் சேர்ப்பது கொசு மற்றும் பூச்சித் தொல்லைக்கு வழி வகுத்துவிடும். அறைக்குள் ஒன்றிரண்டு பளிச் விளக்குகள் தவிர்த்து ஏனைய விளக்குகளை மங்கலான வெளிச்சத்தில் அமைப்பது இரவு நேரத்தில் ரம்யம் தரும். கூழாங்கல் பாதையில் வழிந்தோடும் சிறிய நீருற்று அமைப்பது பார்வைக்கு மட்டுமல்ல அதன் சலசலப்பு சூழலுக்கு ஏகாந்தம் தரும்.

வெளியே இடம் இல்லையா?

தனி வீடுகள் வாய்க்கப்பெற்றவர்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களும் திறந்த அறைக்கான அமைப்பை ஓரளவு உருவாக்கிக்கொள்ளலாம். வீட்டின் தரைப்பகுதியில் இடம் இல்லாதவர்கள் மொட்டை மாடியில், வீட்டுத் தோட்டத்தின் மத்தியில் இந்த திறந்த அறையை அமைக்கலாம். அடுக்கங்களில் வசிப்பவர்கள் சற்றே அகலமான பால்கனி இருப்பின், அங்கு இந்த அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x