வாங்கலாம், உழைக்கலாம், வாழலாம்!

வாங்கலாம், உழைக்கலாம், வாழலாம்!
Updated on
2 min read

சென்னை நகரத்தில் ஒரே பகுதியில் வீடுகள், கடைகள், உணவகங்கள், பள்ளிகள் எனக் கலவையான பயன்பாட்டு வளர்ச்சிகள் வேகமாகப் பரவிவருகின்றன.

இந்தக் கலவையான நிலப் பயன்பாடு பிரபலமாகிவருவதால் கட்டுநர்கள் இப்போது வணிக-குடியிருப்புப் பகுதிகளை சோதனை முயற்சியாக உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பணியாற்றுவது, விளையாடுவது, பொருட்கள் வாங்குவது, தங்குவது எனக் குடியிருப்பவர்களின் எல்லாத் தேவைகளையும் ஒரே பகுதியில் அமைப்பதற்கான கருத்தாக இது உருவாகியிருக்கிறது.

அத்துடன், நகர்ப்புறப் பகுதிகள் ஒரு நாள் முழுக்கத் துடிப்புடன் இயங்குவதும் இந்தத் திட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தப் பகுதிகளில் பள்ளிகள், அலுவலகங்கள், உணவகங்கள், பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்றவை வளர்ச்சி அளவைப் பொறுத்து அமையவிருக்கின்றன. “இந்தப் பகுதிகள் பெரிய விரிவாக்கங்களாகப் படிப்படியாக உருவாக்கப்படவிருக்கின்றன. நிதி வரவுகளை உருவாக்குவதற்காக முதலில் குடியிருப்புப் பகுதிகளையும் அதற்குப் பிறகு வணிகப் பகுதிகளையும் அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது” என்கிறார் ஜெஎல்எல் நிறுவனத்தின் தேசிய தலைவர் ஏ. சங்கர்.

இதில் நகரத்துக்குள்ளே ஆடம்பரம், பிரீமியம் போன்ற குடியிருப்புப் பகுதிகள் பெரிய அளவிலான நடுத்தர வசதிகள் கொண்ட வணிகப் பகுதிகளுடன் அமையும். அதுவே, புறநகர்ப் பகுதிகளில் நடுத்தரம், மலிவு விலை குடியிருப்புப் பகுதிகள் சிறிய வணிகப் பகுதிகளுடன் அமையும்.

இந்தத் திட்டங்களில் குடியிருப்பு, வணிகப் பகுதிகள் ஒன்றுக்கு ஒன்று துணையாகச் செயல்படும். இன்று பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகள் வணிகம் மற்றும் பிற வசதிகளுடன்தான் திட்டமிடப்படுகின்றன. “நகரத்தின் வரம்புகள் விரிவாக்கத்துடன் குடியிருப்புப் பகுதிகளின் தேவை அதிகரித்திருப்பது, பல்வேறு குடியிருப்பு தேர்வுகள் பெரிய அளவில் இருப்பது போன்றவை முதன்மையான காரணங்கள். கிடைக்கக்கூடிய வளர்ச்சி, செழிப்பான வணிக வளர்ச்சிகள், இந்தப் பகுதிகள் அமையவிருக்கும் இடங்கள் போன்றவையும் குடியிருப்பு-வணிக மாதிரிக்கான தெறிப்பாக இருக்கின்றன” என்கிறார் நவீன்'ஸ் வர்த்தக வளர்ச்சித் தலைவர் ஜி. ஷேஷசாயீ. “இந்தத் திட்டங்களை நிலப் பயன்பாட்டை ஒருங்கிணைக்கும் விஷயங்களாக மட்டும் பார்க்க முடியாது. இது ஒரு தூய்மையான, பசுமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான வாழிடத்தை உருவாக்கும் முயற்சியாகவும் பார்க்க வேண்டும்” என்கிறார் ஹிரானந்தானி கம்யூனிட்டிஸ் தலைமை நிர்வாக இயக்குநர் நிரஞ்சன் ஹிரானந்தானி.

“இந்த ஒருங்கிணைந்த வளர்ச்சிகள் கட்டுநர்கள், வாங்குபவர்கள் என இருதரப்புக்கும் வெற்றிகரமானதாக இருக்கின்றன. இந்தத் திட்டங்கள் நீண்ட காலத் திட்டங்களாக இருந்தாலும் காலப்போக்கில் லாபகரமானதாகவே இருக்கின்றன. இதில் அபாயங்களும் குறைவானதாக இருக்கின்றன. வணிகத் தேவைகள், குடியிருப்பு தேவைகள் என இரண்டையும் இந்தத் திட்டம் ஊக்குவிக்கிறது.

நகரப்பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளின் நெரிசல் அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒருங்கிணைந்த வணிக-குடியிருப்பு பகுதிகள் தீர்வாக உருவாகியிருக்கின்றன” என்கிறார் அக்ஷ்யா தலைமை செயல் இயக்குநர் சிட்டிபாபு.

எஸ்பிஆர் குரூப், வடசென்னையில் திட்டமிட்டிருக்கும் தன்னுடைய குடியிருப்பு பகுதியில் பிரத்யேகமான மொத்த வர்த்தக மண்டலத்தை (Wholesale Trading Zone) அமைக்கவிருக்கிறது. “இந்தத் திட்டங்கள் வாங்குபவர்களுக்கு மட்டுமல்லாமல் முதலீடு செய்பவர்களுக்கும் சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது. தற்போது சவுகார்பேட்டை, பாரிமுனை பகுதிகள் இந்த மொத்த விற்பனைக்கு ஏற்றப்பகுதிகளாக இருக்கின்றன. இந்தப் பகுதிகளைக் கூடுதல் வசதிகளுடன் உருவாக்கவிருக்கிறோம். அத்துடன் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், இன்று மக்கள் ஒருங்கிணைந்த சமூக வாழ்க்கைக்காக இந்த வீடுகளை வாங்க விரும்புகிறார்கள். இது அவர்களுக்கு ஒருவித இணைப்பை மற்ற குடியிருப்புவாசிகளிடம் உருவாக்குகிறது” என்கிறார் எஸ்பிஆர் குரூப் தலைமை சந்தைப்பிரிவு அதிகாரி.

வட சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த ஒருங்கிணைந்த குடியிருப்பு திட்டத்தை விரும்புவதாகச் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சந்தை ஆய்வு தெரிவிக்கிறது.

மெட்ரோக்களின் விளிம்பு பகுதிகளில் அமைந்திருக்கும் இந்தச் சொத்துகள் மற்ற முக்கிய இடங்களில் அமைந்திருக்கும் சொத்துகளைவிட குறைவான விலையில் கிடைக்கின்றன. மலிவான, நடுத்தர குடியிருப்பு பகுதிகள் ஒரு சதுர அடி ரூ. 3,200 முதல் ரூ. 7,200 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன. நகரத்துக்குள் அமைந்திருக்கும் பிரீமியம் திட்டங்கள் ஒரு சதுர அடி ரூ. 12,000 முதல் ரூ. 15,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன.

தி இந்து (ஆங்கிலம்) தமிழில்: என். கௌரி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in