

நமக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்யும் வழிமுறைதான் ஷாப்பிங் மால். உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஷாப்பிங் மால்கள் உள்ளன. இந்தியாவிலும் டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற முதல் நிலை நகரங்களில் நாளுக்கு நாள் ஷாப்பிங் மால்கள் பெருகி வருகின்றன. சென்னையைப் பொருத்தமட்டில் சில பத்தாண்டுகளில் எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஸ்கைவாக், பீனீக்ஸ், சிட்டி சென்டர் எனப் பல ஷாப்பிங் மால்கள் கட்டப்பட்டுள்ளன. இப்போது இந்த ஷாப்பிங் மால்கள் நாட்டில் அடுத்த நிலையில் உள்ள மற்ற நகரங்களிலும் வர இருப்பதாக சமீபத்தில் வெளியான அஸோஸம் நிறுவனம் (Assocham) தெரிவித்துள்ளது. அஸோஸம் நிறுவனம் இது தொடர்பாக நேரடி ஆய்வை மேற்கொண்டது.
அந்த சர்வேயின் படி கடந்த இரு வருடங்களில் 300-ல் இருந்து 350 மால்கள் நமது நாட்டில் பல்வேறு நகரங்களில் கட்டப்பட்டுள்ளன. இதில் 75 சதவிகித மால்களில் பல கடைகள் காலியாக இருப்பதாக அஸோஸம் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மால்களின் கடைகளை வாடகைக்கு எடுத்திருப்போர் தங்களது தொழில்களைப் பெரு நகரங்களில் இருந்து நடுத்தர நகரங்களுக்கு மாற்ற உள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. இம்மாதிரியான நகரங்களில் போட்டிகள் குறைவாக இருக்கும் எனக் கடைக்காரர்கள் நினைப்பதுதான் இதன் முக்கியமான காரணம்.
“இரண்டாம் நிலை நகரங்களில் கடையை நடத்த ஆகும் குறைந்த செலவும், அங்கு நிலவும் குறைவான தொழில் போட்டியும் கடைக்காரர்களைக் கவர்கின்றன” என்கிறார் அஸோஸம் தலைவர் ரானா கபூர். மேலும் மால்கள் அமைந்துள்ள இடத்திற்கு இடையிலான தொலைவு மிகக் குறைவாக இருக்கின்றன. இந்தக் காரணத்தாலும் முதல் நிலை நகரங்களில் தொழில் போட்டிகள் கூடுதலாக இருக்கின்றன. உதாரணமாக கடந்த மூன்று வருடங்களில் பூனேயில் மட்டும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் 12 மால்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் முதல் நிலை நகரங்களில் நிலத்தின் விலையும் கட்டுமானச் செலவும் மிக அதிகமாக இருப்பதால் வாடகைக் கட்டணமும் அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது. இது மால்களில் கடையை வாடகைக்கு எடுப்பவர்களுக்குக் கட்டுப்படி ஆவதில்லை. வருமானம் முழுவதும் வாடகைக்கே செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இம்மாதிரி பல காரணங்களை இந்த ஆய்வு முன்வைக்கிறது. இதனால் சென்னை போன்ற பெரிய நகரங்களில் மேலும் மால்கள் கட்டுவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.