வீட்டுக்கு வீடு மிதியடிகள்

வீட்டுக்கு வீடு மிதியடிகள்
Updated on
1 min read

வீட்டுக்கு வீடு வாசப்படி வேண்டும் என்பதுபோல வீட்டுக்கு வீடு மிதியடியும் வேண்டும் எனச் சொல்லலாம். அந்தளவுக்கு வீட்டுக்கு மிதியடிகள் அவசியம். ஏனெனில் எங்கெங்கோ சுற்றிவிட்டு வீட்டுக்குள் நுழையும் நம் பாதங்களில் தூசிகள் படிந்திருக்கும். அவற்றைக் களைய இந்த மிதியடிகள் உதவுகின்றன. வீட்டின் முன்வாசலுக்கு மட்டுமல்லாமல் சமையலறை, குளியலறை என ஒவ்வோர் அறைக்கும் மிதியடிகளின் பங்கு முக்கியமானது.

குளியலறையிலிருந்து வெளியே வரும்போது கால்களில் ஈரம் படர்ந்திருக்கும் அவற்றைத் துடைத்துவிட்டே வருவோம். இல்லையெனில் அறையெங்கும் ஈரம் படர்ந்துவிடும். இதனால் வீட்டிலுள்ள வயதானவர்கள் வழுக்கி விழ நேரலாம். ஈரம் காரணமாக வீட்டில் ஆரோக்கிய சூழல் பாதிக்கப்படலாம். இப்படியான சிறிய மிதியடிகளையும் தரைவிரிப்புகளையும் கூடுமானவரை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அடிக்கடி அவற்றைத் துவைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். தரையில் விரிக்கும் துணிதானே என மெத்தனமாக இருந்துவிட முடியாது.

தரைவிரிப்புகளிலும் மிதியடிகளிலும் தூசி அதிகம் இருந்தாலோ ஈரம் அதிகம் இருந்தாலோ அதனால் நோய்க்கிருமிகள் வீட்டுக்குள் பரவிவிடக் கூடிய வாய்ப்பு உண்டு. தரைவிரிப்புகளிலும் மிதியடிகளிலும் ஈரம் அதிகமாக இருந்தால் அதிலிருந்து பரவும் துர்நாற்றம் வீட்டின் சுகந்த சூழ்நிலையைக் கெடுத்துவிடும். எனவே அவற்றின் சுத்தத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அழகான மிதியடிகளைப் பார்த்து பார்த்து வாங்குவது போலவே அவற்றின் சுத்தத்திலும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

மிதியடிகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். துணியிலான மிதியடிகளை ஒரு வாரத்துக்கு ஒரு முறையாவது சலவைசெய்து பயன்படுத்தினால் நல்லது. ஒருநாளைக்கு ஒரு முறை மிதியடிகளை உதறிவிட வேண்டும். இல்லையெனில் தூசிகளைக் களைய பயன்படும் மிதியடிகளை தூசிகளைக் கொடுக்கும் பொருளாக மாறிவிடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in