மின் உபயோகத்தைக் கட்டுப்படுத்த உதவும் தொழில்நுட்பங்கள்

மின் உபயோகத்தைக் கட்டுப்படுத்த உதவும் தொழில்நுட்பங்கள்
Updated on
2 min read

காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் இன்று நம் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கும் விதமாக விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன. புவி வெப்பமயமாதல், அபரிமித மழை வெள்ளம், அடிக்கடி தாக்கும் சூறாவளி, காட்டுத்தீ என அதன் பாதிப்புகள் உலகை இன்று அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளன. காலநிலை மாற்றத்துக்குப் பல காரணிகள் இருக்கின்றன என்றாலும், நம் வீட்டில் நாம் பயன்படுத்தும் மின்சாரமும் அதற்கு முக்கிய காரணியாக உள்ளது.

நம் நாட்டில் இன்னும் மின் உற்பத்திக்குப் பெருமளவு அனல்மின் உற்பத்தி நிலையங்களையும் அணுமின் உற்பத்தி நிலையங்களையும் நம்பியுள்ளோம். இவை மற்ற எல்லாவற்றையும்விட அதிகப் பாதிப்பைப் புவிக்கு ஏற்படுத்துகின்றன.

எனவே, மாத வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை எடுத்துக்கொள்ளும் மின்சாரத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது வீட்டுக்கு மட்டுமல்ல; நாட்டுக்கே நன்மையளிக்கும். தேவையைக் குறைக்காமல் அதே சமயம் மின் உபயோகத்தைக் கட்டுப்படுத்த உதவும் சில எளிய தொழில்நுட்பங்கள்:

ஸ்மார்ட் பவர் ஸ்டிரிப்ஸ்

பல மின் உபகரணங்கள், நாம் அதை அணைத்தபின்னும் மின்சாரத்தைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றன. ஸ்மார்ட் பவர் ஸ்ட்ரிப், உபகரணங்கள் பயன்பாட்டில் இருக்கின்றனவா என்பதை உணரும் தன்மைகொண்டது. பயன்பாட்டில் இல்லை என்று தெரிந்தால், அதற்குச் செல்லும் மின்சாரத்தை முழுமையாக நிறுத்திவிடும். சில வகை ஸ்மார்ட் ஸ்ட்ரிப்கள், இன்னும் ஒருபடி மேலாக, தொலைக்காட்சிப் பெட்டி உபயோகத்திலில்லை என்பதை உணர்ந்தால், மின்சாரத்தை டிவிக்கு மட்டுமல்ல, டிவிடி பிளேயருக்கும் சேர்த்து நிறுத்திவிடும். இதன் விலை சுமார் இரண்டாயிரம் ரூபாய் இருக்கும். ஆனால், இது நம் மின் கட்டணத்தை 5% முதல் 10% வரை குறைக்கிறது.

ஆட்டோமேட்டிக் டோர் குளோசர்

ஏசி அறையின் கதவைச் சரியாக மூடவில்லையென்றால் மின் இழப்பு அதிகமாக இருக்கும். அதிலும் வீட்டில் குழந்தைகள் இருந்தால், இந்தக் கதவு மூடும் விஷயம் பற்றிக் கேட்கவே வேண்டாம். வெறும் 200 ரூபாய் பெறுமானமுள்ள இந்தச் சாதனம் தானாக மூடி, இந்தப் பிரச்சினையை முற்றிலும் களையும். இதன் மூலம் 10% முதல் 20% வரை மின்கட்டணத்தைக் குறைக்கலாம்.

சூரியத் தகடுகள்

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெற, சூரியத் தகடுகள் (Solar photovoltaics, solar PV) தகடுகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. சூரியத் தகடுகள், சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுகின்றன. அரசு மானியமளித்தாலும் இது கொஞ்சம் செலவு அதிகம் பிடிக்கும் விஷயம்தான். ஆனால் வீட்டுக் கட்டுமானச் செலவிலேயே இதைச் சேர்த்தோம் என்றால், வாழ்நாள் முழுவதும் மின்கட்டணம் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கலாம்.

பசுமைக் கூரை

வெள்ளை வண்ணம், ஒளியையும், வெப்பத்தையும் பிரதிபலிக்கக்கூடியது என்ற கருத்தின் அடிப்படையில் உருவானதுதான் இந்தப் பசுமைக் கூரை. இது சூரிய ஒளியையும், வெப்பத்தையும் நம் வீட்டுக்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்புவதால், நம் வீட்டினுள் வெப்பம் வெகுவாகக் குறைகிறது. இதன் மூலம் நம் மின்கட்டணம் 10% முதல் 15% வரை குறைகிறது.

சிறுதுளி பெருவெள்ளம்

அரசாங்கம் புவிவெப்பமயமாலைத் தவிர்க்கத் திட்டங்கள் போடலாம். ஆனால் நாமும் ஒத்துழைத்தால்தான் அது உண்மையில் சாத்தியப்படும். சிறுதுளி பெருவெள்ளம், நமது இந்த சிறு முயற்சி, நம் பணத்தை மட்டும் மிச்சப்படுத்தவில்லை, நம் புவியின் ஆயுளையும் அதிகரிக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in