

கட்டுமானப் பொருள்களைப் பொறுத்தமட்டில் என்றைக்கும் தேவை இருக்கும்தான். அதிலும் முக்கியமாக இயற்கையாகக் கிடைக்கும் கட்டுமானப் பொருளான ஆற்று மணலுக்குத் தட்டுப்பாடு நிரந்தரமானது. அதுபோல் செங்கற்களும் தட்டுப்பாடுதான். ஏனெனில் செங்கல்லும் மூலப் பொருளாக இயற்கையையே நம்பி தயாரிக்கப்படுகிறது. களி மண்ணைக் குழைத்து, செவ்வக வடிவில் சூளையில் எரித்துத் தயாரிக்கிறார்கள்.
இதனால் மண் வளம் பாதிக்கப்படுவது என்பது நிதர்சனம். மேலும் செங்கல் சூளையில் எரிக்க விறகுகள் தேவைப்படுவதால் மரங்கள் அதிகமாக வெட்டப்படும். மேலும் புகை, வெப்பம் போன்ற வெளியேற்றத்தால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். இந்தச் சூழலில்தான் மாற்றுக் கட்டுமானக் கற்கள் புழக்கத்துக்கு வந்தன.
அவற்றுள் ஒன்றுதான் ப்ளை-ஆஷ் கற்கள். இது மரபான செங்கல்லைக் காட்டிலும் சிறந்தது; நீடித்து உழைக்கக்கூடியது. ஆனால் இந்தக் கற்களைக் குறித்த விழிப்புணர்வு இன்னும் மக்கள் மத்தியில் வரவில்லை. சுற்றுச் சுவர் கட்டுவதற்கு மட்டுமே இந்தவகைக் கற்கள் பயன்படுகின்றன. இவற்றை வீடு கட்டப் பயன்படுத்தும்போது சிமெண்ட் பயன்பாடும் குறைய வாய்ப்பிருக்கிறது. ப்ளை-ஆஷ் கற்கள், ஹல்லோ ப்ளாக் கற்கள் தயாரிப்பு முறைப்படிதான் தயாரிக்க்ப்படுகின்றன.
இதன் முக்கியமான மூலப் பொருள் நிலக்கரிச் சாம்பல். அதாவது தொழிற்சாலைகளில் பறக்கும் நிலக்கரிச் சாம்பல். அதனால் ப்ளை-ஆஷ் கற்கள் என்ற பெயர் இதற்கு வருகிறது. நிலக்கரிச் சாம்பலுடன் மணல், சுண்ணாம்புக் கல், ஜிப்சம் ஆகியவற்றையும் சேர்க்கிறார்கள். இந்தக் கலவைகளுடன் தண்ணீரும் சேர்க்கப்படுகிறது. இது மரபான செங்கல்லுடன் ஒப்பிடும்போது எடை குறைவு. மேலே சிமெண்ட் பூச வேண்டிய அவசியம் இல்லை.