ஸ்மார்ட் வீடியோ அழைப்பு மணி

ஸ்மார்ட் வீடியோ அழைப்பு மணி
Updated on
2 min read

அழைப்பு மணியும் பாதுகாப்பு கேமராவும் இண்டர்காமும் இணைந்த கையடக்க அளவிலான அமைப்பு இது. 2012-ம் ஆண்டு ஜேம்ஸ் சைமன் என்னும் தொழிலதிபர் அமெரிக்காவில் முதன்முதலாக இந்த வகை அழைப்பு மணியைச் சந்தையில் அறிமுகப்படுத்தினார்.

சாதாரண அழைப்பு மணி நிறுவப்பட்ட வீடுகளில் அழைப்பு மணியை அழுத்தியது யார் என்பதைப் பார்ப்பதற்கு நாம் கதவின் அருகே வந்தே ஆக வேண்டும். ஆனால், இந்த வீடியோ அழைப்பு மணி அவர்களை நம் படுக்கை அறையிலிருந்தோ சமையல் அறையிலிருந்தோ பார்க்கும் வசதியை நமக்கு அளிக்கிறது. இதன் மூலம் நாம் வீட்டின் எந்த மூலையிலிருந்தும் அவர்களுடன் உரையாடவும் முடியும்.

வகை

  • வயர் வீடியோ அழைப்பு மணி,
  • வயர்லெஸ் வீடியோ அழைப்பு மணி,
  • ஸ்மார்ட் வீடியோ அழைப்பு மணி

என இதில் இதில் மூன்று வகை உள்ளன. தற்போது ஸ்மார்ட் வீடியோ அழைப்பு மணியே மக்களின் விருப்பத் தேர்வாக உள்ளது.

ஸ்மார்ட் வீடியோ அழைப்பு மணி

இதில் கேமராவுடன் இணைந்து ஒரு மைக்கும் ஸ்பீக்கரும் உண்டு. இதற்கென்று தனியே ஒரு செயலி உண்டு. இந்தச் செயலியை நாம் நமது கைப்பேசியில் நிறுவிக்கொள்ள வேண்டும். இதன் பொத்தானை அமுக்கியவுடன் சாதாரண அழைப்பு மணியைப் போன்று சத்தம் எழுப்பும்.

அதே நேரம் நம் கைப்பேசியிலும் அதன் செயலி விழித்துக்கொண்டு நம்மை உஷார் படுத்தும். அந்தச் செயலியைத் திறந்தவுடன் வெளியில் நிற்பவரின் உருவம் நம் கைப்பேசியில் தெரியும். வழக்கமான கைப்பேசியில் பேசுவது போன்று நாம் அவர்களிடம் உரையாடவும் முடியும்.

எப்படி வேலை செய்கின்றன?

புளுடூத் இணைப்போ வயர்லெஸ் இணைப்போ இதற்கு அவசியம். இதன் செயலியைக் கொண்டு நேரடியாகக் கைப்பேசியுடனும் இணைக்கலாம்; ஸ்மார்ட் ஹப்புடனும் இணைக்கலாம். புளுடூத் இணைப்பு என்றால் அதன் செயல்திறன் 40 மீட்டருக்குள் சுருங்கும். வயர்லெஸ் இணைப்பு என்றால் அதை எங்கிருந்தும் இயக்கலாம்.

கேமராவின் திறன்

  • இதன் கேமரா 180 டிகிரி பார்க்கும் திறன் கொண்டது.
  • இந்த கேமராவால் பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் பார்க்க முடியும்.

இதை எவ்வாறு நிறுவுவது?

இதை நிறுவுவதற்கு எந்தத் தொழில்நுட்ப வல்லுநரும் தேவையில்லை. கதவிலோ சுவரிலோ இரண்டு துளைகள் போடத் துளையிடும் கருவி மட்டும் போதும். பழைய அழைப்பு மணி பொருத்திய இடத்தில் பொருத்தினால் அந்த வேலையும் மிச்சமாகும்.

இதன் செயலியை ஸ்மார்ட்போனில் நிறுவுவதும் மிகவும் எளிது. நம் வீட்டில் ஸ்மார்ட் ஹப் இருந்தால் அதனுடனும் இந்தச் செயலியைப் பயன்படுத்தி எளிதாக இணைத்துக் கொள்ளலாம். வயர்லெஸ் இணைப்பு இதற்கு முக்கியம் என்பதால் அதன் சிக்னல் அளவை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

இதன் சிறப்பம்சங்கள்

  • கதவின் வெளியே நிற்பவர் யார் என்பதை நாம் உலகின் எந்த மூலையிலிருந்தும் அறிந்து அவர்களுடன் பேசும் வசதியை நமக்கு இது அளிக்கிறது.
  • பள்ளியிலிருந்து நம் குழந்தைகள் பத்திரமாக வீடு திரும்பிவிட்டதையும் நாம் உறுதிசெய்துகொள்ள முடியும்.
  • இதில் பேசுவதைப் பதிவுசெய்யும் வசதியும் இருப்பதால், விருந்தாளிகள் தங்கள் தகவலை அதில் பதிவுசெய்துவிட்டுச் செல்ல முடியும்.

இதன் விலை

இந்த வகை அழைப்பு மணிகள் பத்தாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. தயாரிக்கும் நிறுவனங்களின் மதிப்பு, கேமராவின் தரம், பதிவுசெய்யும் திறன் ஆகியன அடிப்படையில் இதன் விலை மாறுபடுகிறது.

கியுபோ, எல்&ஜி, டென்லர், ஆகஸ்ட் ஹோம், டோர் பேர்ட், கோ கன்ட்ரோல், ஹீத் செனித், ஸ்கைபெல் டெக்னாலஜி, விவிண்ட், சுமொடொ போன்ற நிறுவனங்களின் வீடியோ அழைப்பு மணிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in