

சொந்த வீட்டுக் கனவு உங்களுக்கு இருக்கிறதா? புதிய வீடுதான் வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்றில்லை. பழைய வீட்டையும் வாங்கலாம். இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும்.
பழைய வீடு வாங்க வீட்டுக் கடன் கிடைக்குமா என்பதுதான் அது. பழைய வீடு வாங்க வங்கிகள் வீட்டுக் கடன் அளிப்பதுண்டு. பழைய வீடு வாங்க வீட்டுக் கடன் வாங்குவதில் உள்ள சாதக பாதக விஷயங்களைப் பார்ப்போம்.
புதிய வீடு கட்ட அல்லது வாங்க வீட்டுக் கடன் வழங்குவது போல பழைய வீடு வாங்கவும் வங்கிகள் வீட்டுக் கடன் வழங்குகின்றன. ஆனால், பழைய வீடுகளுக்கு வங்கிக் கடன் பெறுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.
இதனால் பழைய வீடுகளுக்கு வீட்டுக் கடன் வாங்க நிறைய கெடுபிடிகளை வங்கிகள் காட்டும். அந்தக் கெடுபிடிகளைத் தாண்டிவிட்டால் வீட்டுக் கடனை வாங்கி விட முடியும்.
சரி, பழைய வீடு வாங்குவதில் என்ன சிக்கல்? வீட்டுக் கடன் வழங்குவதற்கு முன்பு வீடு அமைந்துள்ள இடம், வீட்டின் மதிப்பு, மனையில் அங்கீகாரம், வில்லங்கம் எதுவும் இருக்கிறதா எனப் பல விஷயங்களை வங்கிகள் ஆராயும்.
குறிப்பாக வங்கியிலிருந்து மதிப்பீட்டாளர் ஒருவர் வந்து வீட்டை மதிப்பீடு செய்வார். புதிய வீடு என்றால், வீட்டை மதிப்பிடுவது மிகவும் சுலபம். அதுமட்டுமல்லாமல், அதற்காக ஆவணங்கள் அளிப்பதும், விதிமுறைகளைப் பின்பற்றிக் கடன் வழங்குவதும் வங்கிகளுக்கு மிகவும் எளிது.
இதுவே பழைய வீடு என்றால் சிக்கல் வரும். பழைய வீட்டை மதிப்பீடு செய்வது கொஞ்சம் கடினம். வீட்டின் வயது, அந்த வயதுக்கு ஏற்ப வீட்டின் தேய்மானம், வீட்டின் தாங்குதிறன், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வீடு தாங்கும் போன்ற விஷயங்களை நுணுக்கமாக ஆராய வேண்டும்.
இதை வங்கியிலிருந்து வரும் மதிப்பீட்டாளர் ஆராய்வார். வீட்டின் தேய்மானம், தாங்குத்திறன் போன்ற விஷயங்களில் துல்லியமாகக் கணக்கிடுவது என்பது கொஞ்சம் சிரமம். என்றாலும் மதிப்பீட்டாளர் வீட்டின் அறிக்கையை வங்கியிடன் அளிப்பார்.
அதன் அடிப்படையில்தான் வங்கிகள் பழைய வீட்டுக்குக் கடன் வழங்குவது பற்றி இறுதி முடிவு செய்யும். ஒரு வேளை மதிப்பீடு விஷயங்கள் திருப்திகரமாக இல்லாவிட்டால் வங்கிகள் வீட்டுக் கடன் வழங்காமலும் போகலாம்.
ஒரு வேளை பழைய வீட்டுக்கு வங்கிக் கடன் வழங்க வங்கிகள் ஒத்துக்கொண்டாலும் கேட்ட தொகை முழுவதும் கிடைத்துவிடாது. வழக்கமாகப் புதிய வீடு என்றால்கூட வங்கிகள் 100 சதவீதம் வீட்டுக் கடனை வழங்காது. 80 சதவீதம் மட்டுமே வழங்கும்.
இதில் பழைய வீடு என்றால் 60 முதல் 65 சதவீதம் வரை கடன் கிடைத்தாலே பெரிய விஷயம்தான். பழைய வீடு என்பாதல் அதன் மதிப்பை மிகவும் குறைவாகவே வங்கிகள் மதிப்பிடும்.
இதுவே தனி வீடாக இருந்தால் இடத்துக்கான மதிப்பு கூடியிருக்கும். எனவே அதை வைத்தும் கடன் வழங்குவது உண்டு.
அதேசமயம் அடுக்குமாடிக் குடியிருப்பு பழைய வீடு என்றால் இடத்தின் மதிப்பை வைத்து வீட்டுக் கடன் வழங்குவதும் குறைந்துவிடும். ஏனென்றால், அடுக்குமாடியில் மனைக்கான உரிமை முழுவதும் ஒருவருக்குரியதாக இருக்காது.
பிரிக்கப்படாத மனையின் பாகம் (யு.டி.எஸ்.- அன் டிவைடட் ஷேர்) 300 சதுர அடி, 200 சதுர அடி என்றே பிரித்துக் கொடுப்பார்கள். அதனால் குறைந்த சதுர அடியை வைத்துக்கொண்டு பெரிய அளவில் வீட்டுக் கடன் வாங்கவும் முடியாது. இவற்றையெல்லாம் தாண்டி வீட்டுக் கடன் கிடைத்தாலும், வீட்டுக்குக் கடனைத் திரும்பச் செலுத்த வழங்கப்படும் தவணைத் தொகைக்கான (இ.எம்.ஐ.) கால அவகாசம் குறைவாகவே இருக்கும்.
இப்படிப் பல பிரச்சினைகள் இருப்பதால்தான் பெரும்பாலான வங்கிகள் பழைய வீடுகளுக்குக் கடன் அளிக்க அதிகக் கெடுபிடிகள் காட்டுகின்றன. பழைய வீட்டுக்கு வீட்டுக் கடன் வாங்குவதில்தான் இத்தனை சிக்கல்களும் கெடுபிடிகளும் உள்ளன.
அதேசமயம் வங்கிக் கடன் வாங்காமல் பழைய வீடு வாங்குவது லாபகரமானது. பழைய வீட்டின் கட்டிடத்தைவிட மனையின் மதிப்புதான் கூடுதலாக இருக்கும். கட்டிடத் தேய்மானம், தாங்குதிறன் குறைவாக இருக்கும் என்பதால் பேரம் பேசி வீட்டின் விலையைக் கணிசமாகக் குறைக்க முடியும்.