இ.எம்.ஐ. செலுத்திக்கொண்டிருக்கும் வீட்டை விற்க முடியுமா?
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடு வாங்கினார் சுரேஷ். அவருக்கு டெல்லியில் நல்ல வேலை கிடைத்தது. பணியிட மாற்றம் காரணமாக வீட்டை விற்றுவிட முடிவுசெய்தார் சுரேஷ். வங்கியில் கடன் வாங்கித்தான் வீட்டை வாங்கினார். கடன் வாங்கிய நாள் முதல் முறையாக வங்கிக்குத் தவணைத் தொகையும் (இ.எம்.ஐ.) செலுத்திவந்தார். வீட்டை விற்க முடிவுசெய்துவிட்டதால் அவருடைய நண்பர், அந்த வீட்டை வாங்க இருந்தார். 20 ஆண்டுகளுக்கான இ.எம்.ஐ.யில் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே சுரேஷ் இ.எம்.ஐ. கட்டியிருந்தார். வங்கிக் கடன் நிலுவையில் இருக்கும் சூழலில் அந்த வீட்டை விற்க முடியுமா?
வங்கியில் அடமானம் வைத்துள்ள தனி வீட்டையோ அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டையோ நிச்சயமாக விற்க முடியும். அதை வாங்குபவருக்கு எந்தவிதமான சட்டப் பிரச்சினையும் இல்லை. இதற்காகச் சில வழிமுறைகள் உள்ளன. வங்கியில் அடமானத்தில் உள்ள வீட்டை வாங்குபவர், சொந்தமாக கையில் உள்ள பணத்தில் வாங்குகிறார் என்றால், என்னென்ன செய்ய வேண்டும்?
1. முதலில் வீட்டை விற்பவர் அடமானம் வைத்துள்ள வங்கியில் விஷயத்தை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். கடன் பாக்கி, அசல் தொகை மற்றும் வட்டித் தொகை எவ்வளவு என்பதற்கு ஒரு கடிதத்தை வங்கியில் இருந்து கேட்டுப் பெற வேண்டும்.தவிர வங்கிக்கு முன்னதாகக் கொடுத்துள்ள அனைத்து ஆவணங்களின் பட்டியலை எழுத்துப்பூர்வமாக வங்கியில் பெற வேண்டும்.
2. பிறகு சம்பந்தப்பட்ட வங்கிக்கு, கடன் பாக்கியை முழுமையாகச் செலுத்திவிட்டால், அடமானம் வீடு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் சம்பந்தப்பட்டவருக்குக் கொடுப்பதற்கு வங்கிக்கு ஆட்சேபணை இல்லை என்று சம்பந்தப்பட்ட வங்கியிடம் எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்.
3. வீட்டின் உரிமையாளர் வங்கியிடமிருந்து பெற்ற கடிதங்களையும் தன் வசமுள்ள விற்பனைப் பத்திரத்தின் நகலையும், அந்த வீடு தொடர்புடைய அனைத்துப் பத்திரங்களின் நகல்களையும் வீடு வாங்கப் போகும் நண்பரிடம் வழங்க வேண்டும்.
4. வீட்டை வாங்க உள்ள நண்பர், அந்த ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் தனது வழக்கறிஞரிடம் காட்டிய பிறகு, வீட்டின் சொந்தக்காரருக்கு முன்பணம் வழங்க வேண்டும். பிறகு வீட்டை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையேயான ஒப்பந்தத்தை எழுதி இரு தரப்பும் கையெழுத்திட்ட பிறகு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டும்.
5. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் முழுத் தொகையையும் சுரேஷ் பெற்றுக் கொண்டு, வங்கிக்குச் சேர வேண்டிய தொகையைக் கொடுத்துவிட வேண்டும். கணக்கு நிறைவுற்றதற்கு அடையாளமாக, வங்கியிடம் இருந்து ஒரு அத்தாட்சியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
6. வங்கியிடம் இருந்து வீட்டுக்குத் தொடர்புடைய ஆவணங்களைப் பெற்று அவற்றை வீட்டை வாங்குபவருக்குக் கொடுத்துவிட வேண்டும். மறக்காமல் அவரிடம் இருந்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம் வீட்டை விற்பவர் அதை வாங்குபவருக்குக் கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்துச் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து தர வேண்டும்.
அடமான வீட்டுக்கடன்
ஒரு வேளை உங்கள் கையில் பணம் இல்லை. வங்கியில் வீட்டுக்கடன் வாங்கிதான் அந்த அடமான வீட்டை வாங்க வேண்டும் என்றால் அதற்கும் சில வழிமுறைகள் உள்ளன. இதன்படி மேற்கூறிய நடைமுறைகளில் முதல் மூன்று நடைமுறைகளை வீட்டை விற்பவர் செய்ய வேண்டும். அதன் பிறகு வீட்டை வாங்குபவர் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்ப்போம்.
1. தன்னிடம் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் வீட்டை வாங்குபவர் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுக்க வேண்டும். அத்துடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழ், சம்பளம் அல்லது வருமானச் சான்றிதழ் மற்றும் வங்கியின் பரிசீலனைக் கட்டணம் ஆகியவற்றையும் வங்கியிடம் வழங்க வேண்டும். கடன் விண்ணப்பப் படிவத்தையும் பூர்த்திசெய்து கொடுக்க வேண்டும்.
2. வங்கி உரிய பரிசீலனைக்குப் பிறகு கடன் வழங்கக் கொள்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கும். ஏற்கெனவே ஒரு வங்கி தேவையான அனைத்துப் பரிசீலனைகளையும் செய்த பிறகுதான் கடன் வழங்கி உள்ளது என்பதால், தேவையற்ற தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை.
3. வீட்டுக் கடன் தொகையைச் சம்பந்தப்பட்ட வங்கி, வீடு அடமானம் வைக்கப்படுள்ள வங்கிக்கு நேரிடையாகக் கொடுக்கும்.
4. கடனுக்கான முழுத் தொகையையும் பெற்றுக்கொண்டதால் அடமானம் வைத்திருந்த வங்கி, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வீடு வாங்குவதற்குக் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுத்துவிடும்.
5. அதன் பிறகு வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கி அசல், வட்டித் தொகை போக மீதத் தொகையை வீட்டை விற்பவருக்குக் கொடுத்துவிடும். இறுதியாக வீட்டை வாங்குபவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விற்பனைப் பத்திரத்தை வழக்கம்போல் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இங்கே ஒரு பரிந்துரை. இதுபோன்ற அடமான வீட்டை விற்கும் விஷயத்தில், வீட்டை வாங்குபவர் அதே வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுக்கொள்வது மிகவும் நல்லது. இதனால் இரு தரப்புக்கும் நேரமும் சிரமமும் குறையும்.
