

துபாயின் ‘உலக வர்த்தக மையம்’ பற்றி ஒரு கதை உண்டு. 70-களின் தொடக்கத்தில் ஒரு தொழிலதிபர் துபாய்க்கு வந்தார். இடம் ஒன்று வாங்கி, கட்டிடம் கட்டிப்போடும் எண்ணத்தில் துபாயின் ஷேக் ரஷீதின் அரண்மனைக்கு அவர் சென்றார். அவருக்கு இடம் விற்பதற்கு ஷேக் இசைந்தார். ஆனால், ஷேக்கின் சர்வேயர் காட்டிய இடம் நகரத்தின் மையத்தை விட்டு விலகியிருந்ததால் அந்தத் தொழிலதிபருக்கு அந்த இடம் பிடிக்கவில்லை. மிகுந்த பணிவுடன் மறுத்துவிட்டார். அதற்குப் பல மாதங்களுக்குப் பிறகு தான் மறுத்த இடம் எவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதைக் கண்ட தொழிலதிபர் சேக்கிடம் சென்றார்.
முதலில் காட்டிய இடத்தை மறுத்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, தனக்கு மறுபடியும் அந்த இடம் தேவைப்படுகிறது என்று கேட்டார். அவருக்கு ஷேக் வேறொரு இடத்தைக் காட்டச் செய்தார். அந்த இடத்திலிருந்து பார்த்தால் தூரத்தில் பாலைவனம் தெரிந்தது. அதற்கப்புறம், தொழிலதிபர் துபாய்க்குத் திரும்பி வரவேயில்லை. அவர் கண்டு பயந்து ஓடிய இரண்டாவது இடத்தில்தான் இப்போது ‘உலக வர்த்தக மையம்’ இருக்கிறது.
அந்தத் தொழிலதிபர் மட்டுமல்ல, ‘உலக வர்த்தக மையம்’ வந்த பிறகும் பலரும் துபாயின் வளர்ச்சி குறித்து ஐயமே கொண்டிருந்தனர். ஆனால், இப்போதோ அந்த வர்த்தக மையம்தான் துபாயில் இருமருங்கிலும், வானளாவிய கட்டிடங்களைக் கொண்டு நீளும் ஷேக் ஜயது சாலையின் நுழைவாயிலாக இருக்கிறது.
இதனால் உலக முதலீட்டாளர்கள் சுண்டியிழுக்கப்படுகிறார்கள். ஆக, தீர்க்கதரிசனமாக துபாயின் சேக் ரஷீத் செய்த செயல்தான் துபாயின் கைகாட்டிபோல் ‘உலக வர்த்தக மையம்’ இன்று நின்றுகொண்டிருக்கிறது.
இன்று அதிகார மையமாக இருக்கும் இந்தக் கட்டிடம் சற்றுப் பழமையானதாகவும் இருக்கிறது. 150 மீட்டர் உயரத்தில் அதை வானளாவிய கட்டிடம் என்று சொல்ல முடியாதுதான். ஆனால், பிரபலக் கட்டிடக் கலைஞர் ஒருவர் துபாய்க்கு வருவார் என்றால், துபாயின் கட்டிடக் கலையின் பெருமையாக ‘உலக வர்த்தக மைய’த்தைப் பற்றித்தான் குறிப்பிடுவார்.
ஷேக் ரசீதை ஆங்கில ஊடகங்கள் ‘வியாபாரி இளவரசர்’என்றே குறிப்பிடுகின்றன. உலகின் பொருளாதாரத் தலைநகரங்களுக்கெல்லாம் அவர் பயணித்து அங்கே வர்த்தகச் செயல்பாடுகளெல்லாம் எப்படிப் பொழுதுபோக்குடன் ஒன்றுசேர்கின்றன என்பதைக் கண்டார்.
அவரது நம்பிக்கையான கட்டிடக் கலைஞர் ஜான் ஹாரிஸிடம் வர்த்தகச் சந்தைகளுக்கான மையம் ஒன்றைக் கட்டும்படி பணித்தார். முதலில் பொருட்காட்சி மையமொன்றுக்கான திட்டமாக ஆரம்பித்து இறுதியில் அது ‘உலக வர்த்தக மைய’த்துக்கான திட்டமாக மாறியது.
நியூயார்க், டோக்கியோ போன்ற நகரங்களின் வர்த்தக மையங்களையெல்லாம் பார்வையிட்டு வந்தார் ஜான் ஹாரிஸ். துபாயிலேயே மிகவும் உயரமான ஒரு கட்டிடமாக, 33 மாடிகள் கொண்டதாக ‘உலக வர்த்தக மையம்’ உருவாக ஆரம்பித்தது. இன்னும் உயரம் வேண்டுமே என்று ஷேக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 39 மாடிகள் உயரம் கொண்டதாகக் கட்டப்பட்டது.
வானளாவிய கட்டிடம் ஒன்று உங்கள் நகரத்தை உலகத்தின் கண்களில் முக்கியத்துவம் பொருந்தியதாக மாற்றுமல்லவா, அது போலவே வர்த்தகச் செயல்பாடுகளுக்கு துபாய் தயாராக இருக்கிறது என்று இந்த உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது இந்த வர்த்தக மையம்தான். சொகுசு ஹோட்டல், உயர்தர அடுக்ககங்களைக் கொண்ட மூன்று கோபுரங்கள், ஒரு கண்காட்சி மையம், வாகனங்கள் நிறுத்துமிடம், டென்னிஸ் ஆடுகளங்கள் போன்றவற்றைக் கொண்டு ஒரு உலகளாவிய நகரத்தைப் போல உருவானது அந்தக் கட்டிடம். 24 மணி நேரக் கண்காணிப்பு/ நிர்வாகம், பாதுகாப்பு ஊழியர்கள், தொழிலதிபர்களுக்கான கிளப், பயண ஏற்பாட்டு நிறுவனம், அஞ்சல் நிலையம், திரையரங்கம் என்று சுமுகமான வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு ஏற்ற ஒரு சூழலைக் கொண்டு செயல்படுகிறது அந்த மையம். ஜன்னல்களுக்கு வெளியே அவலட்சணமாக ஏ.சி.
பெட்டிகள் தொங்கும் கதைக்கே இங்கே இடமில்லை. எப்போதும் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் விதத்தில் அங்கு சூழல் அமைக்கப்பட்டிருக்கும்.
நகரத்துக்குள் ஒரு நகரம் என்ற திட்டத்தின் முன்வடிவம்தான் ‘உலக வர்த்தக மையம்’. நாம் அங்கே வசிக்கலாம், வேலை பார்க்கலாம், விளையாடலாம். உள்ளே இருக்கும் ‘பாலைவனச் சோலை’ உள்ளிட்ட ஒவ்வொரு இடத்துக்கும், ஒவ்வொரு அங்குலத்துக்கும் ஆகும் செலவு மேலாண்மைக் கட்டணத்தில் சேர்க்கப்பட்டுவிடும். பொருட்காட்சியின் தரையமைப்பையும் கூட பனிச்சறுக்குத் தளமாகவோ குத்துச்சண்டை தளமாகவோ மாற்றிக்கொள்ள முடியும்.
தொழில் செயல்பாடுகளுடன் பொழுதுபோக்கும் ஐக்கியமாகிவிடுகிறது இங்கே. கட்டிடம் கட்டும்போதே ஹாரிஸிடம் சேக் இப்படிச் சொல்லியிருந்தார், “வர்த்தகத்தை மனதில் கொண்டே வசதிகள், பொழுதுபோக்கு போன்றவற்றுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.”
500 சொகுசு அடுக்ககங்களுடன் ஒரு நகரம் போல அந்தக் கட்டிடம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. துபாய் ஷேக்குக்குச் சொந்தமான இந்தக் கட்டிடம் நகரத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து தனித்து இயங்குகிறது. அரபு உலகின் மையமாக இந்தக் கட்டிடத்தை ஆங்கில ஊடகங்களில் ஷேக் விளம்பரப்படுத்தினார்.
உலகிலேயே உயரமான கட்டிடங்கள் துபாயில் தற்போது கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் ‘பாம் ஜுமைரா’ போன்ற தீவுக் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு முன்னால் ‘உலக வர்த்தக மைய’த்தின் கட்டிடம் சிறு மடுபோலக் காட்சியளிக்கலாம். ஆனால், துபாயை உலகுக்கு விற்றது இந்தக் கட்டிடம்தான் என்பதை மறக்கக் கூடாது.
1981-ல் அபுதாபியிடம் ஆயுதங்களை விற்பதற்காக அப்போதைய இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர் வந்தபோது துபாயிலும் தலையைக் காட்டிவிட்டுச் சென்றார். அப்போது அவரை ஷேக் ரஷீத் வர்த்தக மையத்தின் கோபுரத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றார்.
உலகின் மிகப் பெரிய செயற்கைத் துறைமுகமான ‘போர்ட் ஜெபல் அலி’யை அங்கிருந்து ஷேக் காட்டினார். பிரிட்டனின் பொறியாளர்களும் கடன் நல்கையாளர்களும் சேர்ந்து உதவியதால் உலக அரங்கில் துபாய் மேலே மேலே செல்ல ஆரம்பித்தது. அதற்கான உதாரணமாக ஷேக் அந்தத் துறைமுகத்தை ‘உலக வர்த்தக மைய’த்தின் உச்சியிலிருந்து காட்டினார். துபாயின் ஒரு கட்டிடம் துபாயை உலகுக்கு விற்ற கதை இதுதான்.
தி கார்டியன், சுருக்கமாகத் தமிழில்: ஆசை