

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இல்லாத மனிதனே இருக்க முடியாது. அதுவும் வீட்டுக் கடனை வாங்கிதான் இன்று பெரும்பாலோனவர்கள் வீடுகள் வாங்குகிறார்கள். அப்படி வாங்கும் வீடுகளுக்கு மாதந்தோறும் வீட்டுத் தவணைத் தொகையைச் (இ.எம்.ஐ.) செலுத்தி வர வேண்டும். ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் இ.எம்.ஐ.யைச் செலுத்த முடியாமல் போனால், அந்த வீட்டைக் கடன் கொடுத்த வங்கியே எடுத்துக்கொள்ளும். பிறகு அந்த வீட்டை ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அந்தக் கடன் தொகையை வங்கிகள் எடுத்துக்கொள்ளும். இங்கே ஒரு கேள்வி எழலாம். வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் வங்கிகள் எடுத்துக் கொள்ளும் வீட்டை, ஏலத்தில் விடும்போது அதில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ள முடியுமா?
நிச்சயம் முடியும். வீட்டை வங்கிகள் ஏலம் விட்டால், அதை ஏலத்தில் வாங்க யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஆனால், இந்த ஏலத்தை வங்கிகள் நேரடியாக நடத்தாது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஏல நிறுவனம் மூலமே வீடுஏலத்தில் விடப்படும். முதலில் வீடு அமைந்துள்ள பகுதியில் தண்டோரா மூலம் வீடு ஏலத்தில் விடப்படுகிற விஷயம் தெரிவிக்கப்படும். இதேபோல நோட்டீஸும் விநியோகிப்பார்கள். சில வங்கிகள் செய்திப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதும் உண்டு.
முதலில் ஏலத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்றால் சிறிய அளவில் முன் பணத்தைக் கட்டச் சொல்வார்கள். இந்தத் தொகை, ஏலத்தில் கலந்துகொள்வதற்காகச் செலுத்தப்படும் தொகை. ஒரு வேளை ஏலத்தில் உங்களுக்கு வீடு கிடைத்துவிட்டால், அந்த வீட்டின் மதிப்பில் 25 முதல் 30 சதவீதத் தொகையை அங்கேயே கட்டிவிட வேண்டும். பணத்தைக் கட்டியதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ள வேண்டும். பிறகு எஞ்சிய பணத்தைக் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் செலுத்தச் சொல்வார்கள். அந்தக் காலக் கெடுவுக்குள் பணம் செலுத்தாமல் போனாலோ, பணம் இல்லை என்று கைவிரித்தாலோ தானாகவே ஏலம் ரத்தாகிவிடும். வீடும் கைவிட்டுப் போகும்.
பொதுவாக ஏலத்தில் விடும் வீடுகளில் வில்லங்கம் இருக்குமோ என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படுவதுண்டு. ஆனால், அந்தப் பயம் வேண்டாம். வீடு ஏலத்துக்கு வரும் போது வங்கி சட்ட வல்லுநர்கள் துருவி துருவி விசாரிப்பார்கள். பத்திரங்களை ஆய்வு செய்வார்கள். பத்திரங்களில் எந்தவிதக் குறைபாடோ, வில்லங்கமோ இல்லை என்பதை உறுதி செய்த பிறகுதான் வீடு ஏலத்துக்குக் கொண்டு வரப்படும்.
வங்கிகள் ஏலத்தில் விற்கும் வீட்டை வாங்குவதில் ஒரு நன்மை உள்ளது. வீட்டை வாங்குவதில் சட்ட ரீதியாக எந்தப் பிரச்சினையும் எதிர்காலத்தில் வராது. வீட்டைப் பொது ஏலத்திற்கு வங்கியிடம் இருந்து எடுப்பதால் விலை நியாயமாகவே இருக்கும். வீடு ஏல விற்பனை விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.