வீட்டுக் கடன்: வட்டிக் குறைப்பில் ஆர்வம் காட்டாத வங்கிகள்!

வீட்டுக் கடன்: வட்டிக் குறைப்பில் ஆர்வம் காட்டாத வங்கிகள்!
Updated on
2 min read

வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) குறைத்ததைதையடுத்து இதுவரை ஒரு சில வங்கிகள் மட்டுமே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன.

ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை கடந்த மாதம் 0.25 சதவீதம் குறைத்தது. இதனால் வணிக வங்கிகள் வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இதனால் தவணைத் தொகையில் சில நூறுகள் குறையும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், உடனடியாக எந்த வங்கியும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை. இந்நிலையில் தற்போது மே மாதம் முதல் தேதியை அடிப்படையாகக் கொண்டு ஒரு சில வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன.

பொதுத் துறை வங்கிகளில் அதிகளவில் வீட்டுக் கடன்களை வழங்கி வரும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ. வங்கி) வங்கி வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது. இதன்மூலம் வட்டி விகிதம் 9.50 சதவீதத்திலிருந்து 9.45 சதவீதமாகக் குறைந்துள்ளது. தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும் வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது. தற்போது வட்டி விகிதம் 9.45 சதவீதத்திலிருந்து 9.40 சதவீதமாகக் குறைந்துள்ளது. இன்னொரு தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கியும் வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 9.50 சதவீதத்திலிருந்து 9.45 சதவீதமாகக் குறைந்துள்ளது. எனவே இந்த வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கான தவணைத் தொகை சிறிது குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

வட்டி குறைக்காத வங்கிகள்

ரெப்போ ரேட் குறைக்கப்பட்டப் பிறகு வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை பெரும்பாலான வங்கிகள் குறைக்கும் என்றே வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொதுத் துறை வங்கிகளில் எஸ்.பி.ஐ-யைத் தவிர பிற வங்கிகள் இன்னும் வட்டிக் குறைப்பை அறிவிக்க முன்வரவில்லை. நாட்டில் வீட்டுக் கடன்களை வழங்குவதில் முன்னணியில் உள்ள தனியார் வங்கிகள்கூட வீட்டுக் கடன் வட்டிக் குறைப்பு அறிவிப்பை இதுவரை வெளியிடாததால் அவற்றின் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி நான்கு முறை ரெப்போ ரேட் விகிதத்தைக் குறைத்தது. ஆனால், அப்போதும்கூட உடனுக்குடன் சில வங்கிகளே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தன. பெரும்பாலான வங்கிகள் வட்டிக் குறைப்பு செய்யாமலேயே இருந்தன. வட்டிக் குறைப்பு செய்யாத வங்கிகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் விமர்சனம் செய்த பிறகே எல்லா வங்கிகளும் வட்டிக் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டன.

எனவே இந்த முறையும் வணிக வங்கிகள் வட்டிக் குறைப்பு செய்வதற்கான வழிகாட்டு முறைகளை ரிசர்வ் வங்கி அளிக்கும் என்று வங்கியாளர்கள் கூறுகிறார்கள். இதன் பிறகாவது வட்டிக் குறைப்பு அறிவிப்புகளை வங்கிகள் வெளியிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in