Published : 23 Apr 2016 01:11 PM
Last Updated : 23 Apr 2016 01:11 PM

வீடு கட்டுவதைப் பற்றி ஒரு நாவல்

இப்போது வீடு கட்டுவதற்கான சூழல் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய ரியல் எஸ்டேட் மசோதா நுகர்வோர்களுக்கு (வீடு கட்டுபவர்கள்) ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. நிறுவனங்கள், பழையபடி சுறுசுறுப்புடன் செயல்பட்டுவருவதை, விளம்பரங்கள் மூலம் அறிய முடிகிறது.

ஒரு பிரபல நிறுவனம் தாங்கள் கட்டித் தருகிற வீடுகளின் சிறப்பம்சத்தைச் சொல்லுகையில் மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டார்கள். அவை: அமைவிடம், விலை, செயல் திறன். மற்றொரு நிறுவனம் நகரின் மையமான பகுதியைத் தெரிவித்து அதன் அருகிலேயே `ஒரு கிராமம்’ என்று விளம்பரம் தருகிறார்கள். அது மட்டுமல்ல; அருகிலிருக்கும் வசதிகளைப் பட்டியலிடுகிறார்கள். ரயில் நிலையம், பஸ் வசதி, பள்ளிகள், ஐ.டி. நிறுவனங்கள் என்று நீளமான பட்டியல்.

இங்கே ஒன்றைக் குறிப்பிடலாம். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாகவே, சென்னையில் மின்சார ரயில் வசதி உள்ளது. தாம்பரம், பெருங்களத்தூர் போன்ற இடங்களில் தனி வீடுகள் முளைத்ததற்கு இது ஒரு காரணம். இப்போது அவையும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளாக மாறிவருகின்றன.

தளங்களாக மாறுவது ஒரு புறமிருக்கட்டும், வீடு கட்டுகிற தன்மையே மாறிவிட்டதே! ரெட் ஆக்ஸைட், மொசைக் இவற்றிலிருந்து டைல்ஸ், சமையலறையில் மாடுலர் கிச்சன், படுக்கையறையை ஒட்டின மாதிரி குளியலறை, செங்கல்லும் ஹாலோபிளாக் என்று வந்துவிட்டன. இதைப் பெரும்பாலும் சுற்றுப்புறச் சுவர் எழுப்பவே உபயோகிக்கின்றனர். இப்போது ப்ளே ஆஷ் கற்கள் என்கிற வகை வந்து விட்டதாம். பணத்துக்கு அவ்வளவு மெனக்கிடத் தேவையில்லை. எல்லா வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு வாரி வழங்குகின்றன.

ஆனால் கட்டுமான ஒப்பந்தகாரர் களுக்கும் வீடு கட்டுபவருக்கும் ஏற்படுகிற மன உரசல் இருக்கிறதே, அது மாறவே இல்லை! 60 ஆண்டுகள் முன்பு எழுத்தாளார் தேவன், நகைச்சுவை ததும்ப `ராஜத்தின் மனோரதம்’ என்ற நூலில் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்.

அதிலிருந்து சில நயமான பகுதிகள்:

கிணறு தோண்டுவது பற்றி…

“இன்னும் கொஞ்சம் ஆழமாக தோண்டிப் பார்க்கலாமா?”“ஆனால் என்னத்துக்கு கார்ப்பரேஷன் குழாய் வந்த பிறகு கிணற்றைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேள்.”

“கிணறு வெட்ட வேண்டும் என்று சொன்ன போது வேறு மாதிரி என்னிடம் சொன்னார்களே?”

“வேற மாதிரி..?”’

“குழாய்களை நம்பிக் கொண்டிருந்தால் அரோஹராதான். கிணறு இருந்தாக வேண்டும்” என்று யாரோ சொன்னார்கள்.

ஒரு கட்டத்தில், தேவனுக்கும் வீட்டுக் கட்டுமான ஒப்பந்தகாரருக்கும் இடையே சச்சரவு வருகிறது. எஸ்டிமேட் தருவதில்லை; தனக்குத் தெரிந்தவர்களை எல்லாம் அழைத்துவந்து வீட்டின் அமைப்பை விமர்சனம் செய்வதாக ஒப்பந்தகாரருக்கு கோபம்.

“நான் வேறு யாரைக் கொண்டு கட்டலாம் என்று பார்க்கத்தான் வந்தேன். விட்டுப் போவதாக அவரே சொல்லிவிட்டாரே..?”

“ஒரு தரம்தானே அப்படிச் சொன்னார்?” என்று கேட்டான் கேசவன். “இதென்ன கூத்து? எத்தனை தரம் சொன்னால் அவர் நிச்சயம் என்னை வி்டடுப் போகிறார் என்று அர்த்தம்?” மறுபடியும் கேசவன் சிரித்தான். “கோப வேளையில் அப்படித்தான் சொல்கிற... அப்புறம் சரியாகப் போய்விடுகிறது. இதெல்லாம் சகஜம்பா…”

ஒப்பந்தக்காரரிடம் எல்லாவற்றையும் ஒப்புவித்துவிட்டு, வேறு வேலைக்குத் தெரிந்த நண்பரை நியமிப்பது சரியல்ல. கதாசிரியர் தேவன் இதைச் செய்துவிடுகிறார்:

“இவரும் நானும் ரொம்ப நாள் சேர்ந்து படித்த பேரு” என்று (கிளாஸ்மேட் கிருஷ்ணசாமியை) அறிமுகம் செய்துவைத்தேன்.“அதனால் ஒருத்தர் செய்கிற பிசகு இன்னொருத்தருக்குத் தெரியாது. எல்லாம் பழகிப் போயிருக்கும்.”

“நம் வீட்டுக்கு `லைட்’ போட இவரையே வைத்துக் கொள்ளலாமென்று நினைத்தேன்.” ஜயம் உரக்கச் சிரித்தார்: “கிளாஸ்மேட்டு உமக்கு இவரோடு சண்டை போட்டுக் கொள்ள வேண்டிய காலம் வெகு சீக்கிரத்தில் வருகிறது.”

கடைசியில் என்ன ஆகிறது? உள்ளபடிக்கே சண்டை மூள்கிறது. “அடே அந்தப் பதினாலு அணாவைக் குறைத்துவிடாதேடா. அதுதாண்டா உன் வீட்டு வேலைசெய்து நான் கண்ட லாபம்” என்றான் கிருஷ்ணசாமி.நான் பதிலுக்கு “அந்த 14 அணாதான் நீ போட்ட முதல் என்று நினைத்தேன்” என்றேன் சூடாக.

வேடிக்கை என்னவென்றால், கடைசிவரை ஒப்பந்தக்காரர் திருமலை எஸ்டிமேட் தருவதே இல்லை. கேட்டபோதெல்லாம் தொகையைக் கொடுத்துக்கொண்டு, ரூ.40 ஆயிரத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் திருமலை, தேவன் காது பட வேறொரு பெரிய மனிதரிடம், “எஸ்டிமேட் 25 ஆயிரத்துக்கு மேலே போகாது” என்கிறார்.

ஆக அந்தக் காலத்திலேயே வீடு கட்டுவது என்பது ஒரு சிரமமான காரியம்தான் என்று தெளிவாகப் புரிகிறது. இன்று வேறு விதம். தனி நபர் அலையாமல் நம்பகமான ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைத்தாலும், பேசின தொகை யைத் தாண்டி விடுகிறது. பரணை மூடத் தடுப்பறைகள், மாடுலர் கிச்சன் என்று தனித் தனியாகப் பல செலவுகள், இறுதிக் கட்டத்தில் காத்து நிற்கும்.

கடைசியாக ஒன்று, தன்னுடைய நெருங்கிய நண்பர் மூலமாக வீட்டுக்குத் தேவையான மூன்று அம்சங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அவை: அழகு, பொருளாதாரம், வசதி. முதலிரண்டையும் பற்றி யாரும் இப்போது அவ்வளவாகக் கவலைப்படுவதே இல்லை. நிரந்தரச் சொத்து வேண்டும் என்பதற்காகவே சென்னை போன்ற பெரிய நகரங்களில் வீட்டைக் கட்டுகிறார்கள். இன்றைய விலைவாசியில், சிக்கனத்தைப் பற்றி யோசிக்க இயலாது. ஆனால் வசதி நிரம்பி இருக்க வேண்டும். சில தளங்களில் கார் நிறுத்தத்துக்காக, தளங்களின் அமைப்பே மாறக்கூடும். சுமாரான தளமானாலும் சரி, விலை உயர்ந்த வில்லாவாக இருந்தாலும், நாம் விரும்புகிற வசதிகளை செய்துதரும் ஒப்பந்தக்காரரிடம் வலியுறுத்திச் சொல்லுதல்தான் முக்கியம்.

“அடே அந்தப் பதினாலு அணாவைக் குறைத்துவிடாதேடா. அதுதாண்டா உன் வீட்டு வேலை செய்து நான் கண்ட லாபம்” என்றான் கிருஷ்ணசாமி. நான் பதிலுக்கு “அந்த 14 அணாதான் நீ போட்ட முதல் என்று நினைத்தேன்” என்றேன் சூடாக.

ராஜத்தின் மனோரதம்

விலை ரூ.190

தொடர்புக்கு: 92444 11119

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x