Last Updated : 16 Apr, 2016 12:28 PM

 

Published : 16 Apr 2016 12:28 PM
Last Updated : 16 Apr 2016 12:28 PM

வளம் பெறுமா வாலாஜாபாத்

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர், சிங்கபெருமாள் கோயில், ஒரகடம் ஆகிய பகுதிகளில் நிஸான், ஹுண்டாய், ஃபோர்டு ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த நிறுவனங்களில் உற்பத்தியாகும் கார்களை இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கொண்டுசெல்ல வசதியாக இதை ஒட்டிய பகுதியில் ஒரு ரயில்வே கேந்திரம் அமைக்கப்பட்டால் உதவியாக இருக்கும் என்னும் கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த ரயில்வே பட்ஜெட்டில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, காஞ்சிபுரம் அருகே வாலஜாபாத்தில் நான்கு சக்கர வாகனங்களைக் கையாள ஒரு ரயில்வே கேந்திரம் (Rail Auto Hub) அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இத்தகைய ஒரு கேந்திரம் இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில்தான் அமைக்கப்பட இருக்கிறது.

இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சரக்கு ரயில்களின் மூலம் கார்களை எடுத்துச் செல்ல இந்த கேந்திரம் உதவும். இதுவரை சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்படும் வாகனங்கள் இந்த கேந்திரம் அமைந்ததற்குப் பின்னர் சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்படும். டாடா, ஹோண்டா போன்ற நிறுவனங்களின் வாகனங்களை விநியோகிக்கும் பிரதான மையமாக இந்த ரயில்வே கேந்திரம் செயல்படும். சுமார் 5 ஆயிரம் சதுர மீட்டர் நிலப் பரப்பில் இந்த கேந்திரம் அமைக்கப்பட இருக்கிறது. இந்தப் பகுதியில் ஆண்டுக்கு சுமார் பத்து லட்சம் கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை எளிதாகப் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்ல இந்த கேந்திரம் பெரிய உதவியாக இருக்கும் என்பது கண்கூடு.

இத்தகைய கேந்திரம் வாலஜாபாத்தில் நிறுவப்பட உள்ளது எனும்போது இயல்பாகவே அந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் துறை ஊக்கம் பெறும். ஏற்கனவே வாலஜாபாத் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி. ஆகவே இந்தப் பகுதியில் குடியிருப்பு தொடர்பான தேவை பெருக வாய்ப்புள்ளது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய ரியல் எஸ்டேட் துறை குடியிருப்பு திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய நிலை உருவாகும்.

இது ரியல் எஸ்டேட் துறைக்கு வளர்ச்சி தரும். ஆனால் இந்தப் பகுதியில் குடியிருப்பு திட்டங்களை நிறைவேற்றுவது ரியல் எஸ்டேட் துறைக்கு சவாலான பணிதான். ஏனெனில் இந்தப் பகுதி ஏற்கனவே தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதை நினைவில் கொண்டால் ரியல் எஸ்டேட் துறை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் புரியும்.

வாலஜாபாத்துக்கு அருகே உள்ளே ஸ்ரீபெரும்புதூர், சிங்க பெருமாள் கோயில், ஒரகடம் ஆகிய பகுதிகளில் தான் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான நிஸான், ஹுண்டாய், ஃபோர்டு போன்றவை அமைந்துள்ளன. எனவே இந்த கார் தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து இப்போது உருவாக்கப்பட உள்ள ரயில்வே கேந்திரத்துக்கான போக்குவரத்து வசதிகள் பலப்படுத்தப்பட வேண்டும்.

மேலும் சரக்குகளைப் பாதுகாக்க கிடங்கு வசதிகளும் அதைக் கையாளும் வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். இவையெல்லாம் இணைந்து இப்பகுதியில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். வேலை வாய்ப்புகள் பெருகும்போது அந்தப் பணியாளர்களுக்கான குடியிருப்பு வசதியும் தேவைப்படும். குடியிருப்பு வசதியைச் செய்துதர அங்கே ரியல் எஸ்டேட் துறை முனைப்புடன் செயல்பட வேண்டிய தேவை வரும்.

ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படுள்ள இந்த ரயில்வே கேந்திர திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றி முடிக்கப்படும் என்று தெரிகிறது. முதல் கட்டம் இந்த ஆண்டில் ஜூன் மாதத்துக்குள்ளும், இரண்டாம் கட்டம் இந்த ஆண்டின் இறுதிக்குள்ளும் செயல்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் இப்போதுள்ள உள் கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவுக்கு இல்லை. இவை நிச்சயம் மேம்படுத்தப்பட வேண்டும். முதலில் சாலை வசதிக்கு முன்னுரிமை கொடுத்து அது நிறைவேற்றப்படும்.

இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் வசதி தேவையான அளவில் உள்ளது என்று சொல்கிறார்கள். மேலும் இந்தப் பகுதியில் புதிய மின் திட்டங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளதால் தங்கு தடையற்ற மின்சார வசதிக்கு உத்திரவாதம் உண்டு என்றும் சொல்கிறார்கள். பாதாள சாக்கடைத் திட்டம், மெட்ரோ நீர் போன்ற வசதிகளும் உருவாக்கித் தரப்படும்.

ஆகவே இந்தப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளும் வில்லாக்களும் புதிதாக உருவாக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. மேலும் இப்பகுதிக்கு அதிக அளவில் தொழிலாளர்கள் குடியேற வாய்ப்புள்ளது. அவர்களது குடியிருப்புத் தேவையைப் பூர்த்திசெய்ய நடுத்தர மக்கள் குடியிருக்க வசதியாக, கட்டுப்படியாகும் விலையுள்ள குடியிருப்புகளையும் உருவாக்க வேண்டும். இவையெல்லாம் சேர்ந்து ரியல் எஸ்டேட் துறைக்கும் ஏற்றம் தரும் என ரியல் எஸ்டேட் துறையினர் நம்பிக்கை கொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x